Loading...
Thursday 28 April 2016

மாய வேலை (வலை)


அனிதா திருமணம் முடிந்து துபாய் வந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. அன்பான கணவன் சுரேஷ், 18 மாத குழந்தை அருண் இவர்களுடன் வாழ்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள்.


அனிதா நாளை விடியலை மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். என்றும் போல் அவளை இன்று உறக்கம் ஆட்கொள்ளவில்லை. நாளை எழுந்தவுடன் அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை மனதிற்குள் அசைப்போட்டாள். தான் எடுத்திருக்கும் முடிவால் கணவனுக்கும், குழந்தைக்கும் எந்த வித இடைஞ்சலும் வராமல் இருக்க ஆசைப்பட்டாள். எப்போது உறங்கினாளோ? தீடிரென்று 4 மணிக்கு அலாரம் அடிக்க உறக்கத்திலிருந்து விடுபட்ட அனிதா, அதன் தலையில் பட்டென்று அடித்தாள். 

அவசரமாக காலைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு கிச்சனில் நுழைந்தாள். இங்கு பால்காரனுக்கு காக்க வேண்டிய அவசியம் இல்லை. fridgeலிருந்து பால் எடுத்து காபி குடித்தவுடன் மடமடவென்று சமையலை கவனிக்கத் தொடங்கினாள். சத்தத்தில் எழுந்த சுரேஷ், மனதிற்குள் சிரித்துக்கொண்டான். இவள் எப்படி சமாளிக்கப் போகிறாள் என்று கவலைப்பட்டான்.


சமையலை முடித்த அனிதா சுரேஷிடம் வர, மணி காலை 6.30 ஆனது. "இன்னுமா தூக்கம்? இன்றுதான் முதல் நாள் ஆபீஸ் எனக்கு; நீ கிளம்புபோது என்னையும், அருணை babysister இடமும் drop பண்ணனும் சரியா?" "உன் பேச்சுக்கு மறு பேச்சு உண்டா? நீ எல்லாம் தயார் பண்ணு, நான் குளித்து விட்டு வருகிறேன்" என்றான். அனிதா அவனுக்கு வேண்டிய எல்லாம் எடுத்து வைத்துவிட்டு தூங்கும் குழந்தை இடம் வந்தாள். தூக்கத்திலே பாலைக் கொடுத்துவிட்டு ஈரமாக இருத்த டயபரை மாற்றி டிரஸ்ஸையும் மாற்றினாள். இதற்குள் சுரேஷ் ரெடி ஆகிவிட்டான். "சுரேஷ், உன்னுடைய பிரேக்பாஸ்ட் ரெடி, சாப்பிட்டுவிட்டு அருணுக்கு வேண்டியதை அந்த பாக்ஸில் பேக் பண்ணிவிடு ப்ளீஸ், நான் இதோ ரெடி ஆகி விடுகிறேன்" என்று ரூமுக்குள் புகுந்தாள். நேற்றே அயன் பண்ணி இருந்த காட்டன் புடவைக்கு மேட்ச் ஆக மற்ற இத்யாதிகளையும் அணிந்து வெளியே வரும் போது அருண் இன்னமும் சுரேஷ் தோளில் தூங்கிக் கொண்டிருந்தான். 

அனிதா, இப்பிடியே கொண்டுபோய் விட்டால் எழுந்ததும் ரொம்பவும் அமக்களம் பண்ணுவானே, அதெல்லாம் போகப்போக சரியாகிவிடும் சுரேஷ், என்றபடி சமைத்ததை ஹாட் பேக்கில் வைத்துவிட்டு வர மணி 7.45 ஆகிவிட்டது. சுரேஷ் அவர்களை drop செய்துவிட்டு ஆபீஸ் வந்து சேர 8.30 ஆகிவிட்டது.

இந்தியாவில் கல்யாணத்திற்கு முன்னால் ஒரு வருஷம் அம்மா எல்லாம் பார்த்துக் கொண்டதால் அனிதாவால் ஜாலியாக வேலைக்குப் போய்வர முடிந்தது. இங்கு வந்த புதிதில் பார்ட்டி, டின்னர், அரட்டை என்று பொழுது போனது. அருணும் வந்து விட்டதால் பொழுது சரியாக இருந்தது. இருவருக்கும் அருண் மேல் ரொம்ப ஆசை. அருண் சரியான அம்மா செல்லம். இந்த routine கொஞ்சம் போர் அடிக்க, அப்பப்போ எட்டிப்பார்க்கும், வேலைக்குப் போகும் ஆசை அனிதாவிற்கு இப்போ அதிகமானது. கணவன் எவ்ளவோ சொல்லிப் பார்த்தான், "அனி, நீயே உன் friends பற்றி குறை சொல்வாய், வீட்டையும் குழந்தையும் விட்டு விட்டு அப்படி என்ன பொல்லாத வேலை என்று", இல்லை, சுரேஷ், I can manage" என்றாள். அதற்கு மேல் அவன் கட்டாயப்படுத்தவில்லை. எப்படியோ இன்று அனிதா வேலைக்கு போகும் முதல் நாள்.

ஆபீஸ் போன அனிதாவிற்கு அருணைப் பற்றித்தான் சிந்தனை. எழுந்ததும் என்ன கலாட்டா பண்ணுகிறானோ, சுரேஷ் ஒழுங்காக breakfast வைத்தாரா என்று. உடனை சுரேஷுக்கு போன் பண்ணி கேட்டுவிட்டு, அருணை மறக்காமல் 1.30 மணிக்கு pick up செய்யச் சொல்லி, "நானும் ஒண்ணரை மணிக்கு வந்துடுவேன்" என்றாள். "சரி அனி, நான் இப்போ ரொம்ப பிஸி, சும்மா தொந்தரவு பண்ணாதே" என்று போனை வைத்தான். "சீய் இந்த ஆம்பிளைகளே இப்படித்தான், என்னடா, இன்று wifeக்கு முதல் நாள் ஆபீஸ் இல்லையா? எப்படி இருக்கு, என்ன என்று ஒரு வார்த்தைக் கேட்டால் என்னவாம்?" என்று நினைத்தாள்.

மதியம் லஞ்ச்சுக்கு வீட்டுக்கு வந்த போது, அருண் அவளைப் பார்த்து ஒரேடியாக அழுது கட்டிக்கொண்டது. அவனை சமாதானப்படுத்தி தூங்க வைத்து, சாப்பிட்டு எழுந்த போது மணி 3ஐ தொட்டது. அவசரமாக துணியை வாஷிங் மிசினில் போட்டுவிட்டு மீண்டும் ஆபீஸ் கிளம்ப தயாரானாள்.

இரண்டு, மூன்று நாள் போனதே தெரியவில்லை. பாவம் அருண்! புது சூழ்நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அன்று ஆபீஸ் விட்டு வரும் போதே அருண் உடம்பு சரி இல்லாததைக் கவனித்தாள். காலையில் எழுந்தபோது நல்ல ஜுரம். அனிதாவால் லீவ் எடுக்க முடியாது. "சுரேஷ் இன்னிக்கு மட்டும் வீட்டில் இருந்து குழந்தையைப் பார்துக்கொள்ளேன்" என்றாள். சுரேஷ், "இன்று எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு; வேண்டுமானால் மருந்து, மாத்திரை எல்லாம் பேபி சிஸ்டர் இடம் கொடுத்து விடுவோம், சாயங்காலம் டாக்டர் இடம் போகலாம்" என்றான். அன்று எதோ சமைத்து விட்டு அருணை பேபி சிஸ்டர் இடம் விட்டு ஆபீஸ் சென்றாள். ஜுரம் சீக்கிரமே குறைந்தாலும், அவன் சரியாக சாப்பிடாதது வருத்தமாக இருந்தது. இப்போதெல்லாம் குழந்தையுடன் விளையாடுவதற்கோ, கொஞ்சுவதற்கோ நேரம் கிடைப்பதில்லை, என்று அனிதா ரொம்பவும் வருத்தப்பட்டாள். அதுவே அவனுக்கு ஏக்கமாககூட இருக்கும். இந்த மாதிரி பல சிந்தனை மனதில் ஓட சரியாக தூங்ககூட முடியவில்லை அனிதாவால்.

அன்று வெள்ளிக்கிழமை வீட்டில் friendsஐ dinnerக்கு invite பண்ணி இருந்தார்கள். காலையிலிருந்து வீட்டை ஒழுங்குப்படுத்தி பாத்ரூம் கிளீன் பண்ணி எல்லாவற்றையும், சரிப்படுத்தி வைத்தாள். பிறகு டின்னருக்கு வேண்டியதை தயாரிக்க ரொம்பவும் திண்டாடிவிட்டாள், "அனி, நான் cookingல் ஹெல்ப் பண்ணட்டுமா?" வேண்டாம், நீ அருணைப் பார்த்துக்கொள், அதுவே பெரிசு" என்றாள். ஒருவழியா எல்லா வேலையும் முடித்து விட்டு, அருணுக்கும் வேண்டியதை கவனித்து guestஐ வரவேற்கத் தயாரானாள். எல்லோரும் வந்த பின்பு kitchenஇல் வேலை செய்வது, அனிதாக்கு பிடிக்காத விஷயம். எட்டு மணிக்கு ஒரு மாதிரி எல்லோரும் வந்து சேர்ந்தார்கள். ஒருவரை ஒருவர் வாரிக்கொள்வதும், இல்லாத ஒருவரின் தலையை உருட்டுவதும் ஆக நேரம் போய்க்கொண்டு இருந்தது.

"என்ன அனிதா, வேலைக்கு போக ஆரம்பித்தப் பிறகு என்னன்ன புதுசா வாங்கினாய்?" (ஆமாம், இன்னும் ஒரு மாச சம்பளமே வாங்கவில்லை, அதற்குள்.) என்ன ரொம்ப பிஸியா, எதாவது உதவி வேணுமா?" இப்படி வழக்கமான கேள்விகளில் ஆரம்பித்து topic எங்கயோ போயிற்று. அனிதா மணியைப் பார்த்தாள். "my god! நாளைக்கு ஆபீஸ் இருக்கே". அருண் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தான். எல்லா லேடீஸூக்கும் பொறுமை போய் சாப்பிடலாமா என்றார்கள். "இன்னுமா இவர்கள் ட்ரிங்க்ஸ் முடியவில்லை, விட்டாப் போரும், காணாததை, கண்ட மாதரி, ஓயமாட்டார்கள்" என்று சொல்ல அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் கூச்சலும் கும்மாளமும் ஆக டின்னர் முடிந்தது.

எல்லோரும் போனப் பிறகு வீடு இருந்த நிலையைப் பார்த்து அனிதாவிற்கு பக்கென்றது. எல்லாம் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று போட்டது போட்டப்படி தூங்கப் போய்விட்டாள். காலையில் எழுந்ததும் அனிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை; சுரேஷுக்கும் ஒரே எரிச்சலாக இருந்தது. "என்ன அனி எப்படி சமாளிக்கப் போகிறோம்" இதற்குத்தான் ஹவுஸ் பாய்க்கு ஏற்பாடு பண்ணு என்று சொன்னேன், நீ எங்கே கவனிச்ச!" ஹவுஸ் பாய் கிடைப்பது சுலபமில்லை என்று உனக்குத் தெரியாதா? ஓரளவுதான் என்னால் உதவி பண்ண முடியும், என்னோட ஆபீஸ் வேலை ரொம்பவும் பொறுப்பானது, தவிர டென்ஷன்னும் ஜாஸ்தி; இதையெல்லாம் யோசித்துதான் நான் ஆரம்பத்தில் இப்போ உனக்கு வேலை வேண்டாம் என்றேன்". சரியான சமயம் பார்த்து பிடித்தான்." ஆமாம், உனக்கு எப்போவும் இஷ்டம் இல்லை அதான்".
"இல்லை அனி, நீயும் வேலைக்குப் போக ஆரம்பித்ததிலிருந்து நிறைய விஷயங்கள் ஒழுங்காக நடக்கவில்லை. அருணின் routine ரொம்பவே மாறிவிட்டது. அவன் பேபி சிஸ்டர் இடமும் சந்தோஷமாக இல்லை. வீட்டில் நாம்தான் நிம்மதியாக சமைத்து சாப்பிட்டு இருப்போமா?, பாதி நாள் வெளியில்தான். சரி அருணைதான் உன்னால் ஒழுங்காக கவனிக்க முடிந்ததா? நீ இல்லாமல் அவன் எவ்வளவு தவிக்கிறான் தெரியுமா? அவசியமில்லாமல் நீயாய் தேடிக்கொண்ட நிலைமை இது, sorry to say this. எனக்கு ஆபீஸூக்கு நேரமாகிறது, bye" என்று கிளம்பிவிட்டான்.

அனிதா முடிந்தவரைக்கும் வீட்டை ஒழுங்குப்படுத்தி விட்டு. ஆபீஸ் கிளம்பினாள். மாலை வீடு வரும் போது ஒரு தீர்மானத்தோடு வந்தாள். அன்றிரவு சுரேஷ் அவளருகில் வந்து தோள் மேல் கை வைத்து, "சாரி அனி காலையில் நான் அப்படிப்பேசி இருக்கக் கூடாது; ஆனால் இந்த கொஞ்ச நாளில் உன்னையும் சரியாக கவனித்துக் கொள்வதில்லை. இப்படி எல்லோரையும் வருத்திக் கொண்டு, போலி கௌரவதிற்காக, வேலைக்குப் போகும் அவசியம் நமக்கு இல்லை; இன்னும் 2, 3 வருஷத்தில் அருண் கொஞ்சம் பெரியவனாகி விடுவான், அப்போ இது பற்றி யோசிக்கலாம். வீட்டிலேயே உன்னை பிஸி ஆக வைத்துக் கொள்ள நிறைய வழி இருக்கு. இந்த வயதில் அவனுடன் அனுபவிக்க வேண்டிய சந்தோஷத்தை ஏன் இழக்கிறாய்?". தான் மனதில் நினைத்ததை சுரேஷ் அப்படியே கூற ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்." என்ன அனி, கோவமா?" "இல்லை சுரேஷ், நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன். என் ஆசையை கொஞ்சம் தள்ளிப்போடுவதில் தப்பில்லை. இன்னும் ஒரு வாரம்தான், பாரேன் நான் பழைய அனிதாவாக மாறிடுவேன்." "தட்ஸ் குட்" என்றான்.

இரண்டு பேரும் மனம் விட்டுப் பேசியதால் பிரச்சினை லேசாகியது. மயக்கும் மாய வேலைக்கு (வலை) விடுதலைக் கொடுக்க நிம்மதியாக உறங்கினார்கள்.

0 comments:

Post a Comment

 
TOP