Loading...
Saturday 10 June 2017

ஒரு முத்தம்......




நான் எனது அம்மம்மாவினை பார்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறை செல்லும் பேருந்தில் யன்னலோரமாக அமர்ந்து இருக்கின்றேன். பேரூந்து நடத்துனர் பற்றுச்சீட்டை நீட்டீனார்…எத்தனை மணிக்கு அண்ணே புறப்படும் இன்னும் முப்பது நிமிடங்கள் அகும் தம்பி…என்றார் வில்லங்கப்புன்னகையோடு முப்பது நிமிடமா…? என்ன செய்வது வழமைபோல எனது பிறந்த நாள் பரிசாக அண்ணன் வாங்கித்தந்த நொக்கியா…போனில் பாடலை போட்டு கெட்போனை காதில் செருகி இசையில் உருகிக்கொண்டு இருந்தேன்.

எனது போனில் இருந்து கேட்கும் குத்துப்பாடலை விட பேரூந்து நிலையத்தில் இருந்து வரும் சத்தம் அதிகமாகவே இருந்தது. அண்ணே அப்பிள் ஐந்து நூறு ரூபாய்… கடலை வடை ஐம்பது ரூபாய்….தொடர்ந்து தமிழில் ஆங்கிலப்பாடல் தும்பு முட்டாஸ்காரனின் இரைச்சல் இவையெல்லாம் கடந்தும் கணீரென ஒரு குரல் ஒலித்தது….
அந்தக்குரல்…அந்தக்குரல்….அந்தக்குரல்…..என் காதில்  ஒரு முத்தம் தாங்க அம்மா….ஒரு முத்தம் தாங்க ஐயா ஐயா என்னடா…இது எனது காதில் விழுகிறது வழமையாக அண்ணே….பிச்சை போடுங்க…அம்மா பிச்சை போடுங்க என்று தானே கேட்பார்கள் இது என்ன புதுசா இருக்கின்றது எனது கையில் இருபது ரூபாவினை எடுத்துக்கொண்டு யன்னல் கதவினை திறக்கின்றேன் எதிரே ஒரு இளம் பெண் என்னைப்பார்த்தும் அதே வார்த்தையை வீசினாள்…

ஒரு நொடியில் ஒரு கோடி மின்னல் வெட்டு அப்படியே கருகிப்போனேன்….யன்னல் வழி வந்த தென்றல் காற்றும் அந்தக்காற்றில் கலந்து வரும் அவளின் இடைவிடாத அந்த அவலக்குரலும் என்னை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தது.

இவளை…இவளை…இவளை…எங்கேயோ பார்த்தது போல இருக்கின்றதே. யார் இவள் யார் இவள் எனது மனம் குழப்பத்தில் யாராக இருக்கும் இக்கேள்வி என்னுள் பலமுறை எழுந்தது கடலையைப்போல…பேரூந்தும் தனது கரும்புகையை கக்கிக்கொண்டு புறப்பட்டது அவள் அந்தபல்லவியோடு அடுத்த பேரூந்துபக்கம் திரும்ப அப்போது எனது தாயின் அழைப்பு தொலைபேசியில் சில நிமிடங்களை தொலைத்து விட்டு நிமிர்கையில் அவளைக்காணவில்லை யார் அவள்…அவள் யார்…என்கேள்விக்கு பதில் தேடியவனாய் யன்னலோரம் சாய்கின்றேன்…

எனது தோளை யாரோ தட்டி தம்பி யன்னல் பக்கமாக என்னை இருக்க விடுங்கள் எனக்கு சத்தி வருகிறது என்றவாறு அதற்கான தொணியோடு….எனது தாயின் வயதுள்ள ஒரு அம்மாவின் குரல் அன்ரி நீங்களா…? இந்தாங்க இருங்க….எங்க கவிதா…


அடே எங்கப்பா இந்தப்ப்கம்….இல்லையடி அம்மம்மாவைப்பார்க்க ஊர்காவற்துறை போறன் அவ்வளவு பாசமாடா…விடுமுறையெடுத்து வாறாடா…இல்ல அம்மம்மா என்னைப்பார்க்கனும் போல இருக்காம் அதுதான் பல கேள்விகளை கேட்க விளையும் கவிதாவிடம் அது சரி இது யாரடி புதுசா இருக்கு….நீ யாரைக்கேட்கிறா…அதுதான்டி பேரூந்து நிலையத்தில பிச்சை கேட்பது போல ஒரு முத்தம் கேட்குது அந்த இளம்பெண் யாரடி….எங்கேயோ பார்த்தது போல இருக்கடி…

அதுசரிடா…பார்ததது போலதான் இருக்கும் ஏன் சொல்ல மாட்டா…நல்ல காலம் என்னை அடையாளம் கண்டு கொண்டாய் என்னடி இப்படிச்சொல்லுறா…பிறகென்னடா அவளை உன்னால் அடையாளம் காணத்தெரியல்லையா….

இல்லடி சொல்லடி….அவள் தான்டா எங்கள் பாடசாலையின் பேரழகி கலை நிலா…என்னடி சொல்லுறா….உண்மைதான் நீ எங்களை விட்டுப்பிரிந்து கொழும்பு சென்று விட்டாய் அதன் பின் நடந்தது உனக்கு தெரியாது. நம்ம மதனும் இவளும் ஒருத்தர ஒருத்தர் உயிருக்கு உயிரா விரும்பினாங்க இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரிய வந்தது…

அப்போது ஏதும் பிரச்சினையா….? இல்லடா அதன் பிறகு இருவருமே சந்தோசமாகத்தான் இருந்தாங்க ஏன் என்றால் படிப்பு முடிந்ததும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாரும் இணைந்து சொன்னதும் இன்பம் பேரின்பம் தான்…


இருவருமே எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் பாடசாலை கோயில் திருவிழாக்கள் எந்த நிகழ்வானாலும் ஒன்றாகத்தான் அன்றும் அப்படித்தான் விமலின் பிறந்த நாள் வீட்டில் எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம் அப்போது திடீரென கலைநிலா முத்தம் ஒன்று கேட்டாள் துணிவாக…

மதன் வெட்கத்துடன் நான் உன்னை முத்தமிடும் போது…நீ உன்னை மறந்திருப்பாய்….நான் உன்னில் ஒழிந்திருப்பேன் அதன் பின் உனக்கு எதுவுமே தேவைப்படாது அதற்குரிய நாள் வரும்வரை பொறுத்திரு என் வெண்ணிலவே என்றதும் சத்தமாகவே சிரித்து விட்டனர். எல்லோரும் விமலை வாழ்த்தி கொன்று சென்ற பரிசுப்பொருட்களை கொடுத்து விட்டு வரும் வழியில் தான் அந்தக்கோரவிபத்து நடந்தேறியது. இராணுவத்தினரின் பவள் பெரியபோர் வாகனத்தில் மோதி நிலா தூக்கி எறியப்பட்டாள் மதன் அவ்விடத்திலேயே அந்தப்பெரிய சில்லில் நசுங்கி கடைசி நிமிடத்தினை நெருங்கிக்கொண்டிருந்தான்.

அந்த தருணத்தில் தான் நிலா தனது கைமுறிவையும் பொருட்படுத்தாது ஓடி வந்து மதனைக்கண்டாள்  மதன் தனது கடைசி நேரத்திலும் நிலாவைப்பார்த்தவாறு அந்த நாள் இன்று தான் என் அருகில் வா என் வெண்ணிலவே…நிலா அருகில் சென்றதும் தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி இறுக கட்டியனைத்தான் முத்தமிட்டான்….. மதனின் உயிரை எமன் பறித்து விட்டான்…மதன் சொன்னது போலவே கலை நிலா தன்னை மறந்தவளாக தரையிலே சரிந்தாள் இவள் அழவே இல்லை…ஏன் என்றால் அவள் அவளே இல்லை……

தாயிடம் குழந்தை கேட்கலாம் முத்தம்
தாரத்திடம் கணவன் கேட்கலாம் முத்தம்
காதலனிடம் காதலி கேட்கலாம் முத்தம்
இவளோ…என்றவாறு கவிதாவின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய
எனது கண்ணில் இருந்தும்…………………………………………….

-வை-கஜேந்திரன்-
மறுபிறப்பு சிறுகதை தொகுப்பிலிருந்து 

Next
This is the most recent post.
Older Post

0 comments:

Post a Comment

 
TOP