ராஜாஇரவில் மாறுவேடத்தில் நகர்வலம் வந்தார். இரண்டு மெய்க்காப்பாளர்களும் கூடவே சென்றனர்.
திடீரென்று கடுமையான மழையும், காற்றும் அடித்தன. வானம் இருண்டு போனது . ராஜா காவலாளிகளை விட்டு வழி தவறிப் போய்விட்டார்.
எங்கும் காரிருள்,சற்று தொலைவில் ஒரு சிறு குடிசை தெரிந்தது . அதிலிருந்து லேசான வெளிச்சமும் வந்து கொண்டிருந்தது. ராஜா வேகமாக அதனை நோக்கி நடந்தார்.
அதற்குள்ளே கந்தல் ஆடை அணிந்த ஒரு மனிதனைத் தவிர வேறு யாருமில்லை. ராஜா உள்ளே நுழைந்தும் அவன் எந்த சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.
மாறு வேடத்தில் இருந்த போதிலும், அவன் மரியாதை தராமல் அமர்ந்திருந்ததில் ராஜாவுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது .
"ஏம்ப்பா! உன் வீட்டுக்கு வந்திருக்கேன் , நீ மரியாதையே இல்லாம, ஒரு வணக்கம் கூட சொல்லாம உக்காந்திருக்கியே?" என்றார்.
பதிலுக்கு அவன், "நீதான் என் வீட்டுக்குள்ள அடைக்கலமா நுழைஞ்சிருக்க. உனக்கு எதுக்கு நான் வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜாவால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் எப்போதும் நகர்வலம் போகையில் ஒரு பொற்காசு மூட்டையைஉடன் வைத்திருப்பார்.
அதை அவனிடம் பிரித்துக் காட்டி விட்டு "பார்த்தாயா? நான் எவ்வளவு பெரியவன் என்பதை?
இப்ப எனக்கு வணக்கம் சொல்வாயா ?" என்றார்.
அவனும் பதிலுக்கு, "ஒரு ஏழை பக்கத்தில இருந்தும் ஒரு மூட்டை பொற்காசை நீயே வச்சிருக்கியே, உனக்கு எப்படி வணக்கம்
சொல்வது?" என்றான்.
ராஜா கோபமாய் ஒரு காசை அதிலிருந்து எடுத்து அவனிடம் வீசி, "இப்ப வணக்கம் சொல்வாயா?" என்றார் .
காசைத் தொடாமல் அவன் சொன்னான்,
"ஒரு மூட்டை காசை வச்சுக்கிட்டு அற்பமா ஒத்தக் காசை வீசுறியே, உனக்கா வணக்கம் சொல்வேன்?"
அரசர் இன்னும் உக்கிரமானார். பாதி மூட்டையை அவனருகே பிரித்துக் கொட்டி விட்டுக் கேட்டார், "எங்கிட்ட இருந்ததுல சரி பாதியைக் கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்வியா?"
மெல்லிய புன்னகையுடன் அவன் சொன்னான், "உங்கிட்ட இருக்குற அளவுக்கு இப்ப எங்கிட்டேயும் இருக்கே! இப்ப நீயும் நானும் சமமாயிட்டோமே. சரி சமமா இருக்கிற உன்னை எதுக்கு நான் மதிக்கணும்? "
ராஜாவுக்கு ஆத்திரம் கண்ணை மறைத்தது. மிச்சமிருந்த மூட்டையும் அவனிடத்தில் வீசி விட்டார், "இருந்த எல்லாத்தையுமே கொடுத்துட்டேன். இப்பவாவது வணக்கம் சொல்" என்றார் .
அவன் சிரித்துக் கொண்டே சொன்னான் ,
"இப்ப உங்கிட்ட ஒன்னுமே இல்லை. ஆனா எங்கிட்ட ஒரு மூட்டை தங்கம் இருக்கு. இப்ப நீதான் எனக்கு வணக்கம் சொல்லணும்?" என்றான்.
ராஜா வாயடைத்துப் போனார் .
எத்தனைதான் அள்ளிக் கொடுத்தாலும் மனித இதயம் திருப்திப் படுவதில்லை . நிரந்தரமான மரியாதை என்பது பணத்தைக் கொண்டு வாங்கும் பொருளுமில்லை. உண்மையான அன்பைப் பிறருக்குக் கொடு. அதுவே பலமடங்காக உனக்குத் திரும்பக் கிடைக்கும்.
காசு, பணம், துட்டு, மணி ...!
0 comments:
Post a Comment