Loading...
Monday 1 July 2013

முற்றத்து ஒற்றை மரம்..சிறுகதை)

எனக்கு நினைவிருக்கிறது அந்த முற்றத்தில் நிற்கும் மரம். பள்ளிக் கூட நாட்களிலும் சரி விடுமுறை நாட்களிலும் சரி நாங்கள் அதிகமாக விளையாடி மகிழ்வது அதன் நிழலில்தான். அப்பொழுதெல்லாம் எனக்கு அந்த மரத்தின் மேல் ஒரு கோபம் இருந்தது.


அம்மாவிற்கு கோபம் வரும் பொழுதெல்லாம் என்னை அடிப்பதற்கு கையில் எதாவது குச்சி கிடைக்காதா என்று தேடும்பொழுது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பது அந்த முற்றத்து வேம்பு மரக் குச்சிதான். குச்சி கையில் கிடைத்து விட்டால் அவ்வளவுதான் முட்டிக்கு கீழ் வீங்கிவிடும்.

இதற்காகவே நான் என்ன செய்தேன் தெரியுமா? கைக்கெட்டும் கிளைகளை எல்லாம் அம்மாவிற்கு தெரியாம வெட்டி விட்டேன். அதற்கும் குச்சி சிதற சிதற வாங்கி இருக்கிறேன். என்னதான் இருந்தாலும் அந்த மரம் எங்களுக்கு பண்டிகை நாட்களில் ஊஞ்சல் கட்டவும் ஏறி இறங்கி கண்ணாமூச்சி ஆடவும், கூட்டாஞ்சோறு ஆக்கவும் வீடுபோல் இருந்திருக்கிறது அந்த மரம்.

அம்மை நோய் வந்து படுத்த பொழுது அதன் கிளைகள்தான் எனக்கு படுக்கையாக்கியிருக்கிறாள் என் தாய். எனக்கு அப்பொழுது தெரியவில்லை. அந்த மரத்தின் அருமையும் என் தாயின் அருமையும்.

ஏன் எனக்கு மட்டுமா நீ அம்மா, என் தம்பிக்கும்தானே? ஏன் பிறகு தம்பி மேல் கோபப்படுவதுமில்லை தம்பியை கண்டிப்பதுமில்லை. அவன் செய்யும் குறும்புகளுக்கெல்லாம் என்னை அடிப்பது ஞாயமா? பலமுறை மனதிற்குள்ளே திட்டியிருக்கிறேன். என் நண்பர்களின் அம்மாக்கள் எவ்வளவு பாசமா இருக்கிறார்கள். எல்லார் வீட்டிலும் அப்பாதான் கண்டிப்பாக இருப்பார்கள், அம்மா பாசாமாகத்தானே இருக்கிறார். ஏன் எனக்கு மட்டும் தலை கீழாக நடக்கிறது.

எனக்கு அப்பா மட்டும் இல்லை என்றால், அவர் நான் கேட்கும் அனைத்தும் வாங்கி கொடுக்கவில்லை என்றால் நான் என்ன ஆயிருப்பேன். சின்ன வயதில் விவரம் தெரியாத வயதில் பலமுறை எண்ணியிருக்கிறேன்.

அந்த வயதில் எனக்கு அம்மாதான் எதிரியாக தெரிந்தாள். அம்மா என்றால் பாசம் என்று சொல்வதெல்லாம் பொய். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வதெல்லாம் பொய். கறுப்பு நிறத்தில் ஒரு குட்டி சாம்பல் நிறத்தில் ஒரு குட்டியாக இருந்தாலும் தாய்க்கு எல்லாம் சமம் என்று சொல்வதெல்லாம் பொய். பள்ளிக் கூட தமிழ் புத்தகத்தின் மேல் கோபம் வந்தது எனக்கு. அந்த கோபம் தமிழின் மேல் இருந்த பாசத்தை கொஞ்ச கொஞ்சமாக போக்கியது. அந்த பாடத்தில் மட்டும் தோல்வியுற ஆரம்பித்தேன்.

நான் தமிழிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு பாடமாக தோற்றுக்கொண்டிருந்தேன். ஆனால் என் தம்பி என்னை முந்திக் கொண்டு சென்றான். ஒரு கட்டத்தில் இருவரும் ஒரே வகுப்பில் அமர வேண்டிய சூழ்நிலை உருவானது. எனக்கு என் அப்பாவை தவிர யாரையும் பிடிக்கவில்லை.

பள்ளி கூட நேரங்கள் தவிர, அப்பா வீட்டிற்கு வரும் வரை மரத்தின் கிளையிலேயே கிடந்தேன். மாலையானால் தம்பி வீட்டிற்குள் படிக்கும் சத்தமும், அம்மா என்னை திட்டும் சத்தமும் கேட்டும்.

"இன்று அவன் அப்பா வரட்டும் ஒரு முடிக்கு வரணும், ஏன் இவன் இப்படி இருக்கிறான்", என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்று பெரிய பஞ்சாயத்தே நடத்திவிட்டாள் என் தாய். நான் விடிய விடிய அழுதேன். அதன் பிறகு என் அம்மா என்னை அடிக்க வந்தால் கையில் இருக்கும் குச்சியை பிடிங்கி வீசினேன். அதையும் மீறி அடிக்க வந்தால் நான் திருப்பி திட்ட ஆரம்பித்தேன். அந்த மரத்தின் கிளைகளில் ஓலையால் ஆன ஒரு சின்ன குடிசையை கட்டி விடுமுறை நாட்களில் அங்கே படுக்க ஆரம்பித்தேன்.

பள்ளிக்கூட படிப்பு முடியும் பொழுது அப்பாவிடம் சொன்னேன், "எனக்கு இந்த ஊர் வேண்டாம் அப்பா... வெளியே சென்று படிக்கிறேன். எனக்கு அம்மாவை பார்க்க புடிக்கவில்லை..."

அன்றுதான் என் அம்மா கண் கலங்கியதைப் பார்த்தேன். எல்லாம் சும்மா வெளி வேசம் என்று எண்ணிக்கொண்டேன். நான் அன்று எங்கள் கிராமத்தை விட்டு போகும் பொழுது மரம் பெரிய மரமாக வளர்ந்திருந்தது. அதில் நான் செதுக்கிய இல்லை... கோபத்தில் கிறுக்கியவைகள் எல்லாம் பட்டைகள் கிழிக்கப்பட்டு புண்ணாகி, ஆறி வடுவாகி இருந்தது.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டேன். ஊருக்கு செல்வதையும் குறைத்துக் கொண்டேன். அவள் அழைத்தாலும் நான் பேச மறுத்தேன். எப்பொழுதாவது அப்பாவை பார்க்க வேண்டுமென்றால் மட்டும் ஊருக்கு சென்று வந்தேன்.

ஒரு முறை தம்பி என்னை அழைத்து அம்மாவிடம் பேசு என்று எவ்வளவு சொல்லியும் "அவள் உனக்குதான் அம்மா எனக்கு இல்லை" என்று இணைப்பை துண்டித்து விட்டேன்.

என் திருமணத்திற்கு கூட அவள் விருப்பத்தை நான் கேட்கவில்லை. எனக்கு குழந்தை பிறந்ததை கூட அறிவிக்கவில்லை. அப்பாவிற்கு மட்டும் சொல்லி வைத்தேன். அதுவும் ஒரு நிபந்தனையோடு, அம்மாவிற்கு சொல்ல கூடாது என்ற நிபந்தனையோடு.

எவ்வளவு கொடியவன் நான்...ஒரு தாய் எவ்வளவு கொடுமைக்காரியாக இருந்தாலும் ஒரு மகன் இவ்வளவு கொடுமையான தண்டனையா கொடுப்பான்?!.

எனக்கு மகன் பிறந்த பிறகு என்னமோ எனக்குள் எதெல்லாமோ எண்ணங்கள் வளர தொடங்கியது. என் மகனை இப்படி இப்படி வளர்க்க வேண்டும் என்றெல்லாம். எனக்கு என் அப்பாவை பிடிக்கும், என் மகனுக்கு என்னை பிடிக்க வேண்டும் ஆகையால் என் மகனிடம் ஒரு அப்பாவாக என் அப்பாவை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டேன்.

ஆனால் என் மனைவி என் மகனை தண்டிக்கும் பொழுதெல்லாம் எனக்கு என்னமோ மாதிரி இருக்கும். என் தாய்தான் நினைவில் வருவாள். எனக்கு கேள்விகள் கேட்க ஆரம்பித்த நாட்கள் அதுதான். என் மனைவி என் மகனை தண்டிக்கிறாள் என்றால் அவளுக்கு தன் மகன் மீது பாசம் இல்லையா? என் கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் தூக்கம் வராமல் அவதிப் பட ஆரம்பித்தேன்.

ஆனால் என் மனைவிபோல் என் தாய் இல்லையே அடித்தாலும் இவள் அரவணைக்கிறாளே...என் முடிவு சரிதான் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் என் மனது படும்பாடு வெளியே சொல்ல முடியவில்லை.

பல வருடங்கள் ஆகிறது எங்கள் கிராமத்திற்கு சென்று, ஒரு முறை சென்று வந்தால் உன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று ஏதோ தோன்ற, வரும் பண்டிகைக்கு ஊருக்கு சென்றுதான் பார்ப்போமே என்று முடிவு செய்துக் கொண்டேன்.

என் மனைவி, அப்பாவிற்கு புது உடையும் அம்மாவிற்கு புது சேலையும் வாங்கிக் கொடுத்தாள்.

என் வீட்டு முற்றத்தில் அந்த மரம் எப்படி இருக்கும், வெட்டி இருப்பார்களோ... அங்கே சென்றால் எப்படி நடந்து கொள்வது, என்ன பேசுவது. என்னதான் கோபம் இருந்தாலும் இனி அம்மாவிடம் அதை காட்ட வேண்டாம், தம்பியும் குடும்பமும் அங்கேதான் இருக்கிறது அவன் வீட்டிற்கும் சென்றுப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் யோசித்து வைத்துக் கொண்டேன்.

கை பிடித்து தத்தி தத்தி நடக்கும் குழந்தையுடன் நான் என் மன்ணை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மதியம் கொளுத்தும் வெயிலில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். என்னை குறுக்கிட்டவர்களில் ஒருவர் கூட விடாமல் நலம் விசாரித்தனர்,

"எங்கே வேலை செய்கிறாய்."

"ஒரு குழந்தைதானா?"

"ஏன் வீட்டிற்கு வருவதில்லை"

"போய் அம்மாவை பாரு தம்பி..."

"அடிக்கடி ஊருக்கு வரணும் தம்பி..."

இப்படி பார்ப்பவர்கள் எல்லாம் ஏதாவது பாசத்துடனும் ஆச்சரியத்துடனும் கடமைக்காகவும் கேட்டு விட்டு சென்றனர்.

நான் முற்றத்தில் சென்று, நின்று என் வீட்டைப் பார்த்த பொழுது எனக்கு உடம்பில் புல்லரித்து உணர்ச்சிகள் மூளைக்கேறியது உண்மை.

எங்கள் பழைய வீடு எந்த மாற்றமும் கண்டிருக்கவில்லை. என்ன... சுவருகளில் கீறல்கள் விழுந்திருந்தது. சுண்ணாம்பு பூச்செல்லாம் மங்கிப்போயிருந்தது. அந்த மரம்....முப்பது வருட பழமையான மரமாக மாறியிருந்தது. நான் உருவாக்கிய வடு காயங்கள், காலப் போக்கில் தேய ஆரம்பித்திருந்தது.

வீடு, போருக்கு பின் அமைதிபோல் கிடந்தது. உள்ளே நடந்தேன்.

"அப்பா...."

"யாரு..." உள்ளிருந்து அம்மா குரல் கேட்டது.

"நான்தான்..." என்றேன்.

வெளியே வந்தவள் முகத்தை பார்க்க வேண்டுமே....எவ்வளவு சந்தோசம்...எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"வாப்பா.... எப்படி இருக்கிற....அவள் வரலியா...."

"நான் நல்லா இருக்கிறேன்....அப்பா எங்கே..."

"அவரு வயலுக்கு போயிருக்காரு..." என்று சொன்னவள் என்னிடம் அனுமதி கேட்கமால் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள்.

அதன் பிறகு மீண்டும் புறப்படும் வரை என் குழந்தை என்னிடம் தரவே இல்லை. அவள் அந்த குழந்தையுடம் விளையாடுவதை பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது. ஏன் இவன் என்னை மட்டும் இப்படி எல்லாம் கொஞ்சவில்லை என்று கேட்டுக் கொண்டேன்.

அப்பாவிற்கு புது உடையை கொடுத்தேன். அம்மாவிற்கு வாங்கிய சேலையை அப்பாவிடமே கொடுத்தேன்.

விடிந்தால் மீண்டும் இங்கிருந்து கிளம்பிவிடுவேன். ஒரு இரவுதான் நான் இங்கே இருக்க போகிறேன் என்று நான் இன்னும் அப்பாவிடம் சொல்லவில்லை. விடிந்த பிறகு சொல்லலாம் என்று தோன்றியதால் நான் சொல்லிக்கொள்ளவில்லை.

இரவு உணவை முடித்து விட்டு மெதுவாக நடந்து வரலாம் என்று வெளியே நடந்தேன். என் குழந்தை வாசலில் அமர்ந்திருந்த என் தாய் கையிலிருந்தது.

திரும்பி வரும் பொழுது அந்த முற்றத்து வேம்பு மரத்தடியில் ஒரு மண்ணெண்ணை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தை மறைத்தவாறு இரு நிழல்கள் தெரிந்தது. ஒன்று என் அம்மா நிழல், இன்னொன்று பலவருடங்களுக்கு முன் பார்த்த உருவம்.

"ஏன் பொன்னுத்தாயி...இப்பதான் உன் பையன் வந்துட்டான் இல்ல...இண்ணைக்காவது வீட்டுக்கு உள்ள போய் உறங்கலாம் இல்ல..."

"அதை விடு...இதை பார்த்தியா....என் பையன் எனக்கு சீலை வாங்கிட்டு வந்திருக்கான்....இங்க பாரு எவ்வளவு அழகா இருக்குன்னு..."

"உன் சின்ன பையன் இதமாதிரி எத்தனை வாங்கி கொடுத்திருக்கான் என்னைக்காவது இப்படி சொல்லியிருக்கிறியா நீ?'

"ஹ்ம்ம்....உனக்கு ஒண்ணு தெரியுமா...." என்று சொல்லியவாறு தலையணை போல் சுருட்டி வைத்திருந்த பையிலிருந்து ஒரு சேலையை வெளியே எடுத்தாள்."

"இது என்ன சீலை போல இருக்கு..."

"ஹ்ம்ம்...என் தலை புள்ள...அதுதான் மூத்த பையன் அவன் பொறந்த உடனே செத்து போயிட்டான்னு...." பொன்னுதாயின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

"செத்துப் போயிட்டான்னு...நம்ம தர்ம ஆஸ்பத்திரிலதான்...அவன் என் சீலை முந்தானைல படுக்க வச்சிட்டு போயிட்டாங்க...எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா...வலியில அழவும் முடியாமா..."

"அழுவாத பொன்னுதாயி..."

"வலியோட அவனை அப்படியே பார்த்தேன்...அவன் கால் கட்டை விரல்லு ஆடிச்சு. எனக்கு போன உசிரு திரும்ப வந்தது மாதிரி இருந்திச்சு. அந்த சீலைதான் இன்னைக்கு வரைக்கும் தலையணையா வச்சிருக்கேன்."

"இதை அவனுக்கு தெரியுமா பொன்னுதாயி..."

"தெரியாது...நான் அவன்கிட்ட பாசத்தை காட்டாம இல்லை. சின்ன வயசில்ல கொஞ்சம் கண்டிப்பா இருந்தேன். ஏன்னா அவன் அப்பா அவன் மேல ரொம்ப பாசமா இருந்தாரு. அதனால கெட்டு போயிரக் கூடாதுன்னு. அதுக்காக அவன் மேல பாசம் காட்டாம இல்லை. அது அவனுக்கு புரியமாட்டேங்குது..."

"நீ தப்பு பண்ணிட்ட பொன்னு தாயி...இதெல்லாம் அவன் கிட்ட சொல்லி இருக்கணும்..."

"இல்லை வேண்டாம்...பாவம்... என் மேல இருக்கிற வெறுப்பிலையாவது அவன் எங்கேயோ நல்லா இருக்கான்... அப்படியே இருக்கட்டும். எனக்கு துணையா இந்த மரம் இருக்கு. அப்புறம் தலைக்கு வெச்சுக்க அவன் பிறந்து கிடந்த இந்த துணியும்...போத்திக்க இப்ப வாங்கி கொடுத்த இந்த புது சீலையும் இருக்கு... அது போதும்... கொள்ளி மட்டும் அவன் வைக்கணும்னு எனக்கு ஆசைம்மா....அவன் வற்ற வரைக்கும் என் உடம்பை எடுக்க கூடாத்துன்னு அவருக்கிட்ட சொல்லி இருக்கேன்...."

நான் அப்படியே உறைந்து போய் நின்றேன். எனக்கு ஒன்று மட்டும்தான் அவளிடம் கேட்க தோன்றியது...

"அம்மா...இன்னுமா இந்த பாவி மகனை நேசிக்கிறாய்...?"

0 comments:

Post a Comment

 
TOP