Loading...
Sunday 30 June 2013

ஏக்கங்களை தந்து போனவள்..

முகப்புத்தகம் என்றைக்கும் விட இன்றைக்கு மாறுதலாய் இருக்கும் என்று எண்ணவில்லை, எப்போதும் போலவே உள்நுழைந்த போது நண்பராய் சேர விண்ணப்பித்த மனு ஒன்று எட்டிப்பார்த்தபடியே இருந்தது,திறந்து பார்த்தால்
நிலா,
என்னுடைய பள்ளித்தோழி,தூரத்து உறவும் கூட பெயரைப்போலவே வட்ட முகம்,பெரியகண்கள் சிவந்தும் இல்லை,கருப்பும் இல்லை பொது நிறம் அழகானவள். உரிமையுடன் சண்டை பிடிப்பவள் அன்றிலிருந்து இன்று வரை "டா" "டி" முதல் பேய்,பிசாசு வரை செல்லச்சண்டைகள் கைகலப்புவரை போக வட்டவாரி கொண்டு குத்தும் வரை வந்திருக்கிறாள்.


ஆண்டு ஒன்று முதல் ஆறு வரை ஊர்பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்த காலங்கள் எல்லாம் பசுமரத்தாணி போல் பதிந்தவை பள்ள்ளிச்சட்டை போலவே மனதும். காலமை எழும்பி வீட்டை குளிக்க பஞ்சியிலை தோட்டத்துக்கு போனால் ஆராவது இறைக்க மெசினிலை குளிச்சிட்டு வந்து வெளிக்கிட்டு பள்ளிக்கூடம் போக முதல் அண்ணனுக்கு தேத்தண்ணியும்,கடைக்கு விக்க அம்மா கடலையும் அவிச்சு தருவா கொண்டுபோய் அண்ணனட்டை குடுத்திட்டு ஒரு கறுவாமுட்டாசியை எடுத்து வாயுக்குள்ளை போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனால் எதையாச்சும் மறந்த்இருப்பேன் இல்லை என்னிடம் இருக்காது, கலர்பென்சில் எல்லாம் கொண்டுபோவதில்லை இவளின்ரையத்தான் பறிச்சு வரைவது, சாப்பாடு கூட "காக்கா" போல தட்டி பறிச்சு சாப்பிடுவதுண்டு அதை விட பெட்டையள் ஒரு குறூப் பொடியள் ஒரு குறூப்பா பிரிஞ்சு "பூப்பறிக்க போறோம் பூப்பறிக்கப்போறோம் எந்த பூவைப்பறிப்பாய், எந்த மாதம் வருவாய்" என்று கேட்டு அதில் ஏதும் ஒரு பூவை பறிப்பது தான் எமது விளையாட்டு.

இப்படி அவளுடனான நெருக்கம் பள்ளி தாண்டியும் தொடரும், எங்களுடைய பொழுதுபோக்கு என்றால் தோட்டம் தான். வருசம் முழுக்க தோட்டத்திலை ஏதும் அப்பா வைப்பார். மாரிக்காய், கோடைக்காய் என்று வெங்காயம், பொயிலைக்கன்று,கத்தரி,மிளகாய் என்று தறையுக்குள்ளை கால் வைக்காத காலம் கொஞ்சமாத்தான் இருக்கும். நாங்கள் சின்னப்பொடியள் எண்டதாலை அம்மாவும்,அப்பாவும் தான் தண்ணி வாக்குறது,புல்லுப்பிடுங்கிறது எல்லாம். அண்ணா வந்து மெசினை பூட்டி இறைப்பான் நான் அக்கா தேத்தண்ணி வச்சு தர,சாப்பாடு கொண்டுபோறது, கிளிக்கு காவல் இருப்பது, மாடு வந்தால் கலைக்குறது தான் வேலை.  இவளின்ரை அப்பாவும் தோட்டம் தான் அதுவும் பக்கத்து பக்கத்து தறை அதனால் இரண்டு குடும்பமுமே நல்ல நெருக்கம்.

காலமும் ஓடிக்கொண்டே இருந்தது 1996 சிங்கள இனவெறி ஆமியின் யாழ்வருகை அப்போது தான் எமக்கு ஸ்கொலசிப் பரீட்சை நடந்து கொண்டிருந்து அப்போது  புரியாமல் புதினம் பார்த்துக்கொண்டிருந்தோம். அத்தோடு வேறு பள்ளிக்கூடம் மாறுவதாய் முடிவு பருத்தித்துறையில் ஆமி காம்ப் இருந்ததால் அண்ணா கூட்டிக்கொண்டு போய் வர ஏதும் பிரச்சனை வந்தாலும் என்று என்னை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் சேர்த்து விட்டார்கள், அவளும் செல்லையா ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள். இரண்டுமே சகோதர பாடசாலைகள் தான் இருந்தும் முன்னர் போல பேசுவதில்லை அவள் பெரிய பிள்ளை ஆனதும் எங்களுக்குள் நெருக்கம் குறைவு.

1997 ஊர் பிரச்சனைகளால் வெளிநாடு போக அண்ணா கொழும்பு வர அப்பா கூட்டி வந்தவர் அதனால் நான் பள்ளிக்கூடம் நடந்து தான் போய் வருவது ஆனால் என்ரை நல்ல காலம் இவளின்ரை அண்ணாவும் எங்கண்டை பள்ளிக்கூடத்திலை படிச்சதால் அவர் தான் கூட்டிக்கொண்டு போறது. காலமை அவங்கண்டை வீட்டை போனால் சாந்தன் அண்ணா வெளிக்கிட்டு என்னையும் கூட்டிக்கொண்டு போவார். அண்ணாவை அனுப்பிவிட்டு அப்பா கொழும்பில் இருந்து திரும்பி வந்தபின் 8ஆம் வகுப்பு படிக்கும் போது தான் எனக்கு சைக்கிள் எடுத்து தந்தவர், அதுவும் லேடி சைக்கிள் அக்கா,தங்கச்சி யும் இருக்கிறார்கள்  அவர்களும் ஓடுவார்கள் என்று.

அதன் பின் நாங்கள் பேசுவது, பார்ப்பது கூட குறைவு, வீட்டில் போனால் கூட ஒரு சிரிப்புடன் சரி o/L முடிந்ததும் அவள் கலைத்துறையைத் தேர்வுசெய்தாள், நான் விஞ்ஞான பிரிவு (பயோ) அதை விட அண்ணா வெளிநாடு போனபின் கடை,தோட்டம் எல்லாம் பார்க்க அப்பா தனிய கடைய விட்டிட்டு தோட்டம் தான் அதுவும் முன்னர் போல இல்லை குறைவு. அப்பாவுக்கு உதவி செய்ய எனக்கும் நேரம் இல்லை பாடசாலையில் மாணவர்தலைவராக எல்லாம் இருந்ததால் ஆசிரியர்கள் கூட போய் விடுவார்கள் நாங்கள் குழப்படி செய்த பொடியள், பிந்தி வந்த பொடியளை எல்லாம் பள்ளிக்கூடம் முடிஞ்சதும் மறிச்சு வச்சு ஏதும் சிரமதானம் செய்ய வச்சிட்டு வீட்டை வந்து சாப்பிட கூட நேரம் இருக்காது திரும்ப ரியூசனுக்கு போகத்தான் சரி.. அதனாலை அவளை பார்க்கிறதும் இல்லை.
அதை விட பருத்தித்துறை சயன்ஸ் சென்டரிலை அமாவாசையட்டை ரியூசன் படிக்கும் போது ஒருத்தி மேலை ஒருதலைக்காதல் வேறை..

அதோடை A/L பரீட்சை முடிவுகள் வந்து நான் ஆசைப்பட்டதே எனக்கு படிக்க வாய்த்தது அவள் இரண்டாவது முறை பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தாள். நீண்ட நாட்களின் பின்னர் பேசும் வாய்ப்புக்கிடைத்தது அவளுடைய தங்கையின் சாமத்திய சடங்குக்கு சாந்தன் அண்ணா வீடியோ எடுத்து தர சொன்னான். போட்டோவுக்கு ஆள் வைத்தார்கள் அண்ணா அனுப்பிய வீடியோ கமெரா இருந்ததால் நானே அதை முழுமையாக எடுத்துக்கொடுத்தேன்.

அன்று தான் அவளின் கண்கள் எப்போதையும் விட ஒரு மாதிரியாய் இருந்து, நிலா சூரியனை விடச் சுட்டெரித்தது, காதல் வந்த பெண்ணின் கண்களை கம்பன் கூட கவி எழுதிவிடமுடியாது..
ஆனால் அந்த கண்களின் வார்த்தைகளை அன்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சிறிது காலத்திலேயே குடும்ப சூழ்நிலையால் அவள் திருமணமாகி கனடா வந்துவிட்டாள்.
அதன் பின் என்ன எப்படி என்ற தொடர்பே இல்லை நானும் அவளை மறந்திருந்தேன்.
பழைய நினைவுகள் செல்லரித்த காகிதமாய் அரிக்க அவளை நண்பர்கள் பட்டியலில் சேர்த்தேன்.

மறு நாள் மடல் வந்திருந்தது
எப்படி இருக்கிறாய்? என்ன செய்யுறாய்? இப்ப எங்கை இருக்கிறாய்? என்ற நலன் விசாரிப்புக்கள்,பதில்களுடன், என் தொலைபேசி இலக்கமும் வாங்கி இருந்தாள்.

அவள் இப்போ மூன்று பிள்ளைகளின் அம்மா முதல் பிள்ளை பெண் குட்டி நிலா, அடுத்து இரண்டு அழகான ஆண்குழந்தைகள் இரட்டைக் குழந்தைகள். அழகான,அன்பான குடும்பம்.
ஒருநாள்  தொலைபேசி எடுத்திருந்தால் வழமையான பேச்சுக்களோடு எதிர்பாராத ஒரு கேள்வி கேட்டாள் முந்தி உனக்கு என்னை பிடிக்குமாடா?

ஏன் இத்தனை நாளைக்கு பிறகு இந்த கேள்வி கேட்குறாய்?

பதில் சொல்லடா..

ஓமடி நான் யார் வீட்டையும் போறதில்லை, சாப்பிடுறதில்லை உங்க வீட்டை மட்டும் தானே சாப்பிடுவேன், என்னையும் ஒரு பிள்ளை போல தானே உன்ரை அம்மா,அப்பா பார்த்தவை அதாலை உன்னை மட்டுமில்லை உன்ரை வீட்டை எல்லாரையும் தான்டி பிடிக்கும்.

மீதி பேச கூட விடாமல் மறிச்சவள், தீனிபண்டாரம் தின்னுறதிலையே இருக்கிறியேடா என்று திட்டினாள்...

என்னாச்சடி உனக்கு எதுக்கடி என்னை பேசுறாய் சின்ன பிள்ளையிலை உன்னோடை  படிச்சதிலை இருந்து மயூரியோடை சாமத்திய வீட்டுக்கு நீ போட்டு வந்த செவ்விளநி கலர் பஞ்சாபிவரை ஞாபகம் இருக்கு, அன்றைக்கு பார்த்த உன்னோடை கண் கூட மறக்க முடியாதடி..

ஆமா ஏன் கேட்கிறாய்?

எதிர்முனையில் மௌனம்..  அழுதாள்..
உண்மையில் எனக்கு போனை கட்பண்ணவா.. பாவம் அழும் போது விட்டுபோவது நல்லாவா இருக்கும்.. புரியாத உணர்வுகள் எனக்கு..

மௌனம் கலைத்து ..அப்ப ஏன்டா சொல்லவில்லை?

எதை? என்ன சொல்லவில்லை? எனக்கு புரியவில்லை  !!

உனக்கு பிடிக்கும் என்பதை..!

நான் தான் அதிகம் உன்ரை வீட்டை வாறனான் தானே நீயாவது சொல்லியிருக்கலாம் தானே..

நான் எப்படி சொல்ல?

அதை மாதிரித்தான் நானும் எப்படி சொல்ல?

நான் உன் வீட்டை சாப்பிட்டிருக்கிறேன். உன் வீட்டை என் கால் படாத இடமே இல்லை.
அதை விட உன் அண்ணா அவங்களோடை தான் தினமும் விளையாடுறது, நாளைக்கு இரண்டு வீட்டுக்காறரும் முகத்தை பார்க்கணும், உனக்கு தெரியும் தானே உன் அப்பாவும் எங்க அப்பாவும் எப்படி என்று எங்கை கண்டாலும் அண்ணை,அண்ணை என்று பழகுபவர்கள் அதை விட எல்லாருக்கும் என்னை தெரியும் இப்படி பழகிட்டு இப்படி செய்திட்டான் என்று நான் கெட்ட பெயர்வாங்க முடியாது.. மனதிலிருந்த அத்தனையும் கொட்டி தீர்த்துவிட்டேன்..

மறுபடியும் எதிர்முனையில் அழுகை, காரணம் தெரியவில்லை அந்த நொடி கொதிநீரின் வெப்பத்தையும் தாண்டி என்கண்களிலும் கண்ணீர் துளி..

இதுக்கு தான் கேட்டேன் நன்றியடா..

மௌனம் மட்டுமே பதிலாய் நான்.

ஜ மிஸ் யு டா..

நான் பிள்ளைய கூட்டிட்டு வர போறேன்.

சரி .. நானும் ஒருக்கா கடை பூட்டி போட்டு போஸ்ட் ஒஃபிஸ் பூட்ட முதல் ஆத்துக்காரிக்கு பாசல் அனுப்பிட்டு வாறேன்.
                                                                                                           
                                                                                                                                  ஜீவா

0 comments:

Post a Comment

 
TOP