Loading...
Friday, 9 September 2016

தங்கம்..........



அம்மா ஐந்து கிலோ அரிசியும்… இரண்டு கிலோ மாவும்… ஒரு கிலோ சீனியும்…காக்கிலோ பருப்பும்… நூறு கிறாம் மரக்கறி எண்ணெயும்…காக்கிலே வெங்காயமும்…தரட்டாம் வருகிற திங்கள் தருவாங்களாம் அங்கு குழுமி நின்ற ஐயாக்குட்டி கடையில் இவனது சத்தம் காதைப்பிளந்தது. எல்லோரும் திரும்பிப்பார்க்க…
“மூக்கை நோண்டியவாறு அடுப்பில் போட்டாலும் எரியாத காற்சட்டை அவனது இடுப்பில்…” ஏற்கனவே கடுப்பில் இருந்த ஐயாக்குட்டி பல்லைக்கடித்து முறைத்தவாறே எங்கடா…? உங்க அப்பன் கந்தக்குட்டி ஒழுங்கா வேலைக்கு போகமாட்டான் அப்படி போனாலும்  போதையில் மிதப்பான் இவனுக்கெல்லாம் கல்யாணம் குழந்தை குட்டிகள் அதுவும் “ஒன்று இரண்டல்ல ஆறு குட்டிகள்” அடுத்தடுத்து பெத்துபோட்டுட்டு அங்கும் இங்கும் அலையிறது தானே அவன்ர வேலை வெறிக்குட்டி…….

கொஞ்சமாவது வெட்கம் மானம் சு10டு சுரணை இருந்தா…? அந்தப்பிள்ளையை இப்படி ஓட்டக்குடிசையில் வெயிலும் மழையும் வீட்டிற்குள்ள வீடா…அது சுடுகாடு இப்பிடியொரு பிழைப்பிற்கு தூக்குபோட்டு சாகலாம்………போய்ச்சொல்லு “உங்க அம்மாட்ட” ஏற்கனவே வேண்டிய பாக்கிப்பணம் பத்தாயிரம் ரூபாவை பத்து நாளில் தரவேணுமாம் இல்லாட்டி நடக்கிறதேவேற போடா… என்றார் சற்று கோபமாக….. பக்கத்தில் விடுப்பு பார்த்துக்கொண்டிருந்த பாக்கியக்கிழவி பையன் பணம் வைத்திருக்கிறான் என்றதும் பணமா… என்னடா கையில் காசாவைத்திருக்கிறாய்….? ஆமா ஐய்யா பக்கத்து வீட்டு மாமா மிட்டாய் வேண்ட பத்து ரூபாய் தந்தவர் நான் அதற்கு பெண்சில் வேண்டனும் கொண்டாடா அந்த பத்து ரூபாவ…. உனக்கெல்லாம் படிப்பு என்னத்திற்கு என்றவாறே ஒத்திப்பறித்தார்…

ஆறு வயது பொடியன் என்றாலும் அவனுக்கும்….. கண்ணை கசக்கியவாறு தலையைதொங்கப்போட்டுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான்… அன்பு
அங்கு அடுப்பில் உலையை வைத்து விட்டு அன்னம்மா காத்திருந்தாள்… அவள் எண்ணத்தில் எல்லாச்சாமானையும் ஒழுங்காய் கொணர்ந்து சேர்ப்பானா…? வரும் வழியில் நாய் திரத்தி கொட்டியிருப்பானா…? வெளிப்படலையை அண்மித்து வெளியை பார்த்துக்கொண்டிருந்தாள் அன்னம்மா…ஆம் தூரத்தில் அன்பு ஆரவாரமின்றி வெறும் கையோடு வீச்சு வாங்கல் எடுத்து…. அழுது சிவந்த கண்களோடு அன்னம்மா முன்னாடி நின்றான் அன்பு. என்னடா…? என்ன நடந்தது வரும் வழியில் எல்லாவற்றையும் கொட்டிவிட்டாயா… இல்லம்மா… அந்த ஐயாக்குட்டி இனிக்கடன் தரமாட்டாராம் பழைய பாக்கியை பத்து நாளில் தரட்டாம் அதுமட்டுமல்ல அம்மா… என்றவன் கண்களில் இருந்து கண்ணீர் வர…என்னடா…என்கிட்ட இருந்த பத்துரூபாவையும் பிடுங்கிற்றார் அம்மா…

என்ன மனுஷன் இவ்வளவு பெரிய ஆளா இருந்தும் சின்னப்பையன் கிட்ட எப்படி நடந்து கொள்ளனும் என்று தெரியல்ல…. அவர ஏன் அம்மா பேசுறிங்க எங்கட அப்பா ஒழுங்கா இருந்தா ஏன் எங்களுக்கு இந்த நிலை….: தொட்டிலில் கிடந்த பிள்ளை பசியினால் கத்தத்தொடங்கியது அந்தப்பிள்ளைக்கு வாங்கி இருந்த பால்மாவை மற்றப்பிள்ளை தின்றுகொண்டிருந்தாள்.
அன்னம்மாவிற்கு வந்த கோபத்தில் அறைந்தாள் கன்னத்தில் பிள்ளை அழத்தொடங்கியது. அன்னம்மாவும் அழுதாள் அவளாலும் என்ன செய்ய இயலும்… அயல்விட்டில் பத்துப்பாத்திரம் தேய்த்துதான் காலத்தை கரைத்தால் ஆனால் அங்கு புதிதாய் வந்த காமூகனிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக அந்த வேலைக்கும் செல்வதில்லை…. பிறகு கடையொன்றில் வேலைக்கு சேர்ந்தாள் அங்கு முதலாளியின் கைச்சேட்டை பத்தாக்குறைக்கு… கந்தக்குட்டிக்கு அன்னம்மா மீது சந்தேகம் வேறு குடித்துப்போட்டு வீட்டுக்கு வரும் போது வீட்டில் இருக்க வேண்டும் இல்லையென்றால் அடியுதைதான்…: அதையும் விட மோசமான வார்த்தைகளால் சுட்டெரிப்பான்….என்னடி செய்தாய் இவ்வளவு நேரம்… எவனோட போனியடி… இன்னும் எவனாவது வருவானாடி… இது நித்தம் நடக்கும் யுத்தம்…அன்னம்மா வீட்டில் அத்தனையும் சகித்துக்கொண்டு மத்தளம் போல் தான் வாழ்வை நடத்தினாள்.

வருமானம் இல்லாமல் வயிற்ரை நிரப்ப முடியுமா…?
பிள்ளைகளை படிக்க வைக்க முடியுமா….?
வெளிநாட்டிற்கு பணிப்பெண்ணாக போகவும் பயம் தானும் இளம் பெண் தனது பிள்ளைகளும் வயதுக்கு வந்த பிள்ளைகள்… மானத்திற்கும் மரியாதைக்கும் பயந்து வாழ்வை வறுமையில் நடத்தினால் இவளுக்கு அப்பப்ப மளிகைச்சாமன்களை கொடுத்து அதுகளின் உயிரை பிடித்து வைத்திருந்த மனிதன் அந்த ஐயாக்குட்டிதான்……அதனால் தான் அன்னம்மா அளவு கடந்த மரியாதையை வைத்திருந்தாள். இன்றோடு அதுவம் இல்லையென்றானதும் ஆறோடு ஏழாய் இவளும் அழத்தொடங்கினாள். அழுவதினால் என்ன பயன் நஞ்சு குடித்து இறந்து விடுவோமா என்றாள்….மூத்தவள் கீர்த்திகா….!

அதற்கும் பணம் வேண்டுமே என்றாள் இளையவள் மதி…! தலைவிதி வாருங்கள் கிணற்றில் விழுந்து இறந்து போவோம் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருகிற பாழடைந்த பெரிய கிணற்றை நோக்கி விரக்தியோடு விரைகின்றனர் விக்ரம் மட்டும் இறப்பதற்கு விருப்பமில்லாமல்….. கண்களை மூடி குதிக்க தயாராகும் போது விக்ரம் சொன்னான் அம்மா இங்கே நூறு ரூபாய்…!

இறப்பை எண்ணியபடி இறுதியாக துடித்த இதயமும் இறுக்கி மூடிய கண்கள் வேகமாக சிறந்து அந்த நூறு ரூபாவை பார்த்ததும் எல்லோர் கண்களிலும் கண்ணீர் அட ஆனந்தக்கண்ணீர் என்பார்களே அதுதான்… மீண்டும் ஐயாக்குட்டி கடையில் அடுத்த மகளை அனுப்பியிருந்தாள் அன்னம்மா…. அவளைக்கண்டதும் ஐயாக்குட்டி கண்கலங்கினார்… இருந்தும் காட்டிக்கொள்ளாமல் தம்பி போனான்…நீ என்ன சொல்லப்போகிறாய் என்றார் ஐயாக்குட்டி…...

இந்தாங்கோ நூறு ரூபாய் அரிசியாவது தாங்கோ ஐயா… சாப்பிட்டு இரண்டு நாளாகுது என்றாள் மதி தளர்ந்த குரலில் ஒரு கிலோ அரிசியும் கொஞ்ச பருப்பும் கொடுத்தார். இந்தா… பிள்ள உன்ர தம்பி பென்சில் கேட்டான் அவனிடம் கொடு என்று ஒரு கூர்மாற்று பென்சில் ஒன்றையும் கொடுத்தார் ஐயாக்குட்டி இளகியமனசுதான் எல்லாநேரமும் மனிதர்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை தானே…

மதி விரைவாக வந்து இந்தாங்கோ அம்மா அரிசி கெதியாய் சமையுங்கோ பசி வயிற்றை புடுங்குது… இந்தாடா… அன்பு பென்சில் பென்சிலா…? அன்பு கேட்டான் கூர்மாற்று பென்சிலடா ஐயாக்குட்டி தந்தார் பென்சிலை வாங்கிய அன்பு கேட்டான் அம்மா ஐயாக்குட்டி நல்லவரா…? கெட்டவரா…? நம்மளைப்பொறுத்தவரை நல்லவர் தான்டா அன்னம்மா அரிசியை கழுவுவதற்காக சட்டியில் கொட்டிய போது விளக்கு வெளிச்சத்தில் ஏதோ…? மின்னியது என்னம்மா சட்டிக்குள் மின்னுது என்றான் விக்ரம் பொறுடா பார்ப்பம் ஆம் அது தங்கமோதிரம்…! அன்னம்மா முதல் ஆறுபிள்ளைகளுக்கும் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்
அரைப்பவுணா…?..... பிரியா
ஒரு பவுணா….?….  சரிதா
இதைவிற்றால் எப்படியும் நாலைந்து மாதம் வயிற்ரை நிரப்பலாம் நல்ல உடுப்பும் ஆளுக்கொரு சோடி வாங்கலாம் எண்;ணங்கள் பொங்கி எழுந்தன… இஞ்சதாங்கோ அம்மா அதைப்பார்ப்பம் அன்பு அந்த மோதிரத்தை வாங்கிப்பார்க்கிறான் ஐயாக்குட்டி என்னிடம் இருந்து பத்து ரூபாவைப்புடுங்கும் போது இந்த மோதிரத்தைப்பார்த்தேன்… அந்தமோதிரக்கையால் தான் அன்புக்கு தலையில் குட்டினார் ஐயாக்குட்டி ஞாபகம் வந்தவனாய் அம்மா இது ஐயாக்குட்டியின் மோதிரம் தான் வாங்கம்மா… கொண்டுபோய்கொடுப்போம் என்றான் அன்பு
உனக்கு என்ன லூசாடா…?
நாம சாப்பிடக்கூட வழியில்லாம இருக்கிறம் அவர் பணத்திற்கு மேல புரள்கிறார் அவருக்கு இது போனா இன்னொன்று நமக்கு எதுவுமே இல்லையடா …பிரியா…இல்லையக்கா இன்னாருவற்ற பொருள் என்று தெரிந்த பின்பும் அதை வைத்திருந்தால் களவுதானே… நாங்கள் ஏழைகள் தான் ஆனாலும எங்களுக்கென்று மானம் கௌரவமும் ஒழுக்கமானபழக்கவழக்கத்தோடும் தானே எங்களை வளர்த்தீர்கள் அம்மா… எந்த நிலையிலும் மாறாது வாழவேண்டும் இல்லையேல் இறந்துவிடவேண்டும் ஆறுவயது அன்புவின் வார்த்தைகளைக்கேட்டு மெய்சிலிர்க்க வாரியணைத்துக்கொண்டாள் அன்பை அன்பாக எனது புருஷன் மட்டும் தான் முரடன் குடிகாரன்…
என்ரபிள்ளைகள் எல்லாம் தங்கம் இதற்கு முன்னால் இந்த தங்கத்திற்கு மதிப்பேது… அன்னம்மா ஐயாக்குட்டி கடையை நோக்கி விரைகிறாள்… கடையில் ஐயாக்குட்டீ வாடிவதங்கிய முகத்தோடு எதையோ பறிகொடுத்தவர் போல இருந்தார் எந்தவித சலசலப்பும் இன்றி… அன்னம்மாவைக்கண்டதும் இஞ்சபார்…! புள்ள என்ர இரண்டு பவுண் மோதிரம் தொலைஞ்சு போயிற்று அது வெறும் பவுண்மோதிரம் இல்ல…என்னுடைய அம்மா எனக்கு ஆசை ஆசையா செஞ்சு போட்ட மோதிரம் இது என்னோடு இருந்தா என் அம்மாவே என்னோடு இருப்பது போல இல்லைனா என்னையே நான் இழந்ததிற்கு சமன்… என்றவர் மீண்டும் கண்கலங்கினார் சோர்வுற்றார்… இருக்கின்ற தாயையே மதிக்காது அநாதை இல்லத்தில் விடும் பிள்ளைகள் வாழும் இக்காலத்தில் இல்லாத தாய்மீது இவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கும் ஐயாக்குட்டியை வியப்போடு கண்கலங்கியவாறே பார்த்தாள் அன்னம்மா உங்கள் தாய் மீது இவ்வளவு பாசமா…!

இந்தாங்கோ உங்களுடைய அம்மா அவருடைய இரண்டு பவுண் தங்க மோதிரத்தை கொடுத்தாள் அன்னம்மா அதைவாங்கிய ஐயாக்குட்டி ஆனந்தத்தில் துள்ளிக்குதித்தார் மெய்மறந்து… அப்ப நான் போய்வாறன் ஐயாக்குட்டி என்றாள் அன்னம்மா…கொஞ்சம் நில்லு புள்ள என்றவர் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களையும் உன்ர பழையபாக்கியையும் தரத்தேவையில்ல எப்பவேணுமானாலும் வா… என்னவேண்டுமென்றாலும் தயங்காம கேளென்று சொன்ன ஐயாக்குட்டி அன்னம்மாவின் கையில் ஐயாயிரம் ரூபாவினையும் கொடுத்தார்… ஏன் இவ்வளவு பணம்…! வேண்டாம் இந்த உணவுப்பொருட்களே போதும் அதுமட்டுமல்ல “உனது மகன் அன்புவின் படிப்புச்செலவை நானே” பார்த்துக்கொள்கிறேன் இது உனதும் உன்னுடைய பிள்ளைகளினதும் நேர்மைக்கான பரிசாகும் அடுத்தவன் பொருளில் சிறிதோ… பெரிதோ…ஆசையில்லாமல் கொணர்ந்தாயே…அதுவும் அம்மா எனக்கு தந்த சொத்தை அதற்கு ஈடாக எதையும் தருவேன் உணர்ச்சியின் உச்சத்தில் நின்றார் ஐயாக்குட்டி…

ஐயாக்குட்டி தாயின் மீது கொண்டுள்ள அளவற்ற பாசத்தினைக்கண்டு பிரமித்துப்போய் நின்ற அன்னம்மா  தனது வீடு நோக்கி நடந்தாள்…அப்போது அவள் மனதில்; ஐயாக்குட்டியின் அளவற்ற அன்பும் தனது பிள்ளைகளின் நேர்மையும்  உண்மையான வாழ்வுக்கு இறைவன் கொடுத்திருக்கும் பரிசுதான் இது… கைநிறைய உணவுப்பொருட்களோடு வரும் அன்னம்மாவை… பிள்ளைகளோடு சேர்ந்து கணவன் கந்தக்குட்டியும் வரவேற்றான் அன்னம்மா சிரித்தாள்… கந்தக்குட்டி திருவாய்திறந்து  நான் இனி குடிக்க மாட்டேன்….அன்னம்மாவின் கண்ணில் தோன்றியது பிரகாசமாய் விடிவெள்ளி....
 கதையாக்கம்-வை-கஜேந்திரன் 
   மன்னார் மாவட்ட பிரதேச கலை இலக்கிய விழாப்போட்டியில்  2015 ஆண்டு 1ம் இடத்தினை பெற்றது....


      

0 comments:

Post a Comment

 
TOP