முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.
அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன் தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.
ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர்.
ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ""ஐயனே! தாங்கள் பாடம் கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுகிறோம். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்தச் சலுகையை விரிவுபடுத்தக் கூடாது?''என்று கேட்டனர்.
குருதேவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும், அமைதியாகப் பதிலளித்தார்.
""நான் உங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் மதித்து நடத்துகிறேன். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டவில்லை. உங்களில் சிலர் விரைவாக முன்னேறியிருந்தால், நான் சொல்கிறவற்றை அவர்கள் ஊன்றிக் கவனித்திருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறு முயன்று கற்பதை யார் தடுத்தது?'' என்று கேட்டார் அவர்.
ஆனால், மாணவர்கள் அவருடைய பதிலில் திருப்தியடையவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்த குரு, ""ரொம்ப சரி! குறைப்பட்டுக் கொள்கிறவர்கள் மீது நான் விசேஷ கவனம் செலுத்துகிறேன். ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில்தான். ஒரு சின்ன பரீட்சை வைப்பேன். அதில் நீங்கள் தேறியாக வேண்டும்.
""பரீட்சை இதுதான். நீங்கள் அடிக்கடி போய்வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டும். அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்,'' என்றார்.
பரீட்சை ரொம்பவும் எளிதாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதில் தேறிவிட்டால், குருவின் விசேஷ கவனம் தங்கள் பக்கம் திரும்பி விடுமே. அவர்கள், தங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, பக்கத்து ஊருக்கு அனுப்பினர், தகுதியான ஒரு நபரைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்கு. ஆனால், அவனுடைய துரதிர்ஷ்டம், நல்லதன்மை உள்ள ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்தது.
அவன் நீண்ட நாட்கள் முயன்றும் பலனில்லாமல் போயிற்று. குருவிடம் வந்து, ""ஐயனே! நான் தங்களிடம் இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன். அந்த ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டேன். ஒரு நல்ல மனிதன் கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள்!'' என்றான் அவன்.
""அட! அப்படியா? இங்கே யார் மீது நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களுடைய அணியில் இருந்து யாரேனும் ஒருவரை அங்கே அனுப்புவோம்,'' என்றார் குருதேவர்.
பிறகு, அந்த பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவனை அழைத்து, ""நீ பக்கத்து ஊருக்குச் சென்று ரொம்பவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார் அவர்.
குருவின் கட்டளையை ஏற்று, அந்த அணியில் இருந்து ஒருவன் அடுத்த ஊருக்குச் சென்றான். சில நாளில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ""ஐயனே! என் பதில் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கலாம். நான் அந்த ஊர் முழுக்க ஆராய்ந்து விட்டேன்; ஒரேயொரு கெட்டவனைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!'' என்றான் அவன்.
அவனுடைய கருத்துரை கேட்டு, குறை கூறும் அணியைச் சேர்ந்தவர், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர். ஆனால், அந்த மாணவன் தொடர்ந்து பேசினான், ""எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவனை என்னால் காண முடியவில்லை,'' என்றான்.
""நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்து தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிறபோது உங்களுடைய ஞானம் மலர்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த ஞானம் உதிர்த்து விடுகிறது.
""உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே ஞானம். நேர்மறை மனோபாவம் உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோபாவம் உள்ளவர்களால் மெதுவாகத்தான் வளர்ச்சிக் காண முடியும்.
""குருவைப் பொறுத்தவரை, எல்லாருமே அவருக்குப் பிரியமானவர்கள் தான். ஒரு மாணவன் விலகியிருப்பதாய் உணர்ந்தால் அது அவனுடைய தவறு. நீங்கள் எந்த அளவு என்னோடு ஒன்றாயிருப்பதாக உணர்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.
""குருவிடமாகட்டும், கடவுளிடமாகட்டும், முழுமையாய் சரணடைந்து விட வேண்டும். அரைகுறையாய் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என்றார் குரு.
0 comments:
Post a Comment