Loading...
Monday, 18 July 2016

கடவுளின் கணக்கு!


சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.

கடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார்.

""இதெல்லாம் ரொம்பப் பாவம். நம் மகனுக்குப் பாவத்தைச் சேர்த்து வைக்காதீர்கள்,'' என்று அவன் மனைவி கமலா கண்டிப்பாள்.

""போடி, போடி பிழைக்கத் தெரியாதவளே, பணம்தான் உலகம்... பணம் இல்லை என்றால் ஒருவனும் நம்மை மதிக்க மாட்டான்,'' என்று அவளைக் கிண்டல் செய்வான் சரவணன்.

ஒருநாள் புதிய ஆள் ஒருவன் சரவணனிடம் வந்தான்.

""என் மனைவிக்கு ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது என்னிடம் உள்ள நகைகளை வாங்கிக் கொள்கிறீர்களா?'' என்று கேட்டான்.

""அவனைப் பார்த்தால், திருட்டுப் பயல் போல இருக்கிறது. ஒரு மூட்டை நகை கொண்டு வந்து இருக்கிறான். நிச்சயமாக எங்காவது திருடிக் கொண்டு வந்திருப்பான். அவனைப் போகச் சொல்லுங்கள் வீண் வம்பு வேண்டாம்,'' என்றாள்.

ஆனால், நகையைக் கண்டதும் பேராசையும் பொங்கியது சரவணனுக்கு. இவ்ளோ நகை எங்கே கிடைக்கும்? என்று நினைத்து யோசிக்க மறந்தான்.

""கமலா! நீ இந்த விஷயத்தில் தலை இடாதே... உனக்கு என்ன தெரியும்!'' என்று அவளைத் திட்டி அனுப்பி விட்டு, மூட்டையுடன் வந்த ஆளை உள்ளே அழைத்தான்.

அந்த ஆள் மூட்டையைப் பிரித்தான். ஏராளமான தங்க நகைகள் மின்னின. மாற்று உறைத்துப் பார்த்தான் சரவணன். எல்லாமே சுத்தத் தங்கம். லட்ச ரூபாய்க்கு மேல் பெறும்.

""பத்தாயிர ரூபாய் தான் கொடுப்பேன். இஷ்டம் இருந்தால் கொடு. இல்லாவிட்டால் போ,'' என்று கண்டிப்பாகப் பேசினான்.

""சரி ஐயா பணத்தைக் கொடுங்கள்,'' என்று அழுது வடிந்தான் அந்த ஆள்.
உடனே, பணத்தைக் கொடுத்து, நகைகளை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டினான் சரவணன்.

மனம் முழுவதும் சந்தோஷம். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கும். லட்சரூபாய் பெறுமானமுள்ள நகையை பத்தாயிரத்திற்கு சுருட்டிய தன்னுடைய திறமையை எண்ணி மகிழ்ந்தான்.

ஒருமாதம் சென்றது-

சரவணன் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இன்ஸ்பெக்டரும், காவலர்களும் கையில் விலங்கு பூட்டிய ஒருவனோடு கீழே இறங்கினார்கள். கையில் விலங்குடன் காணப்பட்டவன் ஒரு மாதத்திற்கு முன்னால் சரவணனிடம் நகைகளை விற்ற ஆசாமி.

சரவணன் பயத்துடன் வாசலுக்கு வந்தான்.

""இவர்தான் என் திருட்டு நகைகளை வாங்கியவர்,'' என்று சரவணனை அடையாளம் காட்டினான் திருடன்.

அவ்வளவுதான்! இன்ஸ்பெக்டரும், காவலர்களும் சரவணனின் வீட்டுக்குள் புகுந்து, அலமாரியைத் திறந்து திருட்டு நகைகளோடு மற்ற நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, சரவணனை ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள்.

கடவுள் சரவணனுக்கு உதவி செய்வது போலப் அவனை செழிக்க வைத்து, கடைசியில் பழி வாங்கி விட்டார். ஏழைகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?

நன்றி சிறுவர்மலர்

0 comments:

Post a Comment

 
TOP