Loading...
Monday 25 July 2016

ஆவிகள்


நான் இருக்கும் வீட்டில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிப்பேட்டை என்றொரு குடியிருப்பு இருக்கிறது. அங்கே ஒருவர் பல ஆண்டுகளாக அவருக்குத் தெரிந்த ஜோதிடம் சொல்லி அடக்கமாக வாழ்க்கை நடத்திவந்திருக்கிறார். அவர் நல்ல ஜோதிடரா... இல்லையா என யாரும் பெரிதாக விமரிசித்தது இல்லை. ஒரு சிறு குடிசையில் ஒரு மண்டையோடு, இரு எலும்புகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். ஜோதிடம் கேட்க வந்தவர்கள் கொண்டுவந்ததை உண்டு வாழ்ந்தார் என நினைக்கிறேன். எப்போதும் பீடி புகைத்துக்கொண்டிருப்பார் என்பார்கள். அவர் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தந்ததாகத் தெரியவில்லை; அவர் மீது யாரும் குறை கூறியதாகவும் தெரியவில்லை.

ஒருநாள் அவரிடம் ஜோதிடம் கேட்க ஒரு பெண் வந்திருக்கிறாள். அவளுக்கு அப்பா, அம்மா உண்டு. ப்ளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாலும், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. எப்படியும் டாக்டர் ஆக வேண்டும் என ஹோமியோபதி படித்து, அதில் பட்டமும் வாங்கிவிட்டாள். ஹோமியோபதி படித்தவர்களுக்கு உத்தியோகம் எனக் கிடைக்காது. சுயமாகத்தான் தொழில் புரியவேண்டும். அப்படித்தான் செய்துகொண்டிருந்தாள் என நினைக்கிறேன். யாரோ சொல்லி இந்தப் பள்ளிப்பேடை ஜோதிடரிடம் வந்தாள். ஜோதிடர், பரிதாபகரமான தோற்றம்தான் கொண்டிருப்பார். வயது 50-ல் இருந்து 60-க்குள் இருக்கும். தாடியும் மீசையுமாக ஒரு பிச்சைக்காரன்போலத்தான் இருப்பார். பீடி சாமியார் என்றும் பெயர். ஹோமியோபதிப் பெண்ணுக்கு 25 வயது இருக்கும். பார்க்க லட்சணமாக, குடும்பப்பாங்காக இருப்பாள். அவள் ஜோதிடருக்கு சிஷ்யையாகி அவருடனேயே தங்கிவிட்டாள்.

ஊரில் ஒரே பரபரப்பு. பீடி சாமியாருக்கு ஏகக் கிராக்கி. வரிசையில் நின்று ஜோதிடம் கேட்டுப் போனார்கள். உண்மையில் அவர்கள் வந்த காரணம், அந்தப் பெண்ணைப் பார்க்கத்தான். பத்திரிகையில் தினம் தினம் செய்தி. யார் என்ன சொன்னார்கள் எனத் தெரியவில்லை. போலீஸ் வந்தது. அவர் மேல் ஏதும் சொல்லக்கூடிய குற்றம் இல்லை. அப்புறம் தொலைக்காட்சி. 15 நாட்களுக்கு அந்த இடத்தில் ஏகப் பரபரப்பு. தொலைக்காட்சி மூலம்தான் எனக்கு இதெல்லாம் தெரிந்தது.



சாமியார் நல்ல ஜோதிடராக இல்லாமல் போகலாம். அந்தப் பெண் மனமுவந்து அவருடன் வாழ வந்திருக்கிறாள். வயது வந்தவள். ஆனால், பத்திரிகைக்காரர்கள் தொந்தரவு, தொலைக்காட்சிக்காரர்கள் துரத்தல் இதெல்லாம் பொறுக்க முடியாமல், அவர்கள் இருவரும் ஒருநாள் விஷம் அருந்தி இறந்துவிட்டார்கள். அந்த இருவரின் தன்மானத்துக்கு அவர்கள் கடுமையான சாட்சியத்தை நாடியிருக்கிறார்கள்.

எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது, 'இல்லை’ எனச் சொல்ல முடியாது. பலர் சொல்லிக் குடும்பப் பிரச்னைகளுக்காக நாடி ஜோதிடத்தை நாடிப் போயிருக்கிறேன். சில தகவல்களைக் கேட்டு வியந்திருக்கிறேன். எங்கள் வீட்டுப் பக்கம் வரும் குடுகுடுப்பைக்காரர், பூம் பூம் மாட்டுக்காரர், சாய்பாபா பாட்டு பாடிக்கொண்டு வருகிற தம்பதிகள், இவர்களுக்குத் தவறாமல் ஏதாவது பணம் தருவேன். என் கவலை, இவர்கள் எதை நம்பிக்கொண்டு வாழ்கிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? இன்று முறையான படிப்பு படித்தவர்களுக்கே உத்தியோக நிலைமை பெரிய நம்பிக்கை தருவதாக இல்லை. பூம்பூம் மாட்டுக்காரர்கள் அவர்களுக்கு உணவு தேடுவதோடு மாட்டுக்கும் சேர்த்து உணவு தேட வேண்டும்.

நான் பள்ளிப்பேட்டைக்குச் சென்றேன். ஜோதிடரைப் பற்றி விசாரித்தேன். அந்தக் குடிசை பிய்த்துப் போடப்பட்டிருந்தது. அந்தக் குடிசையின் தரை மட்டும் சிமென்ட் போடப்பட்டது அப்படியே இருந்தது. அந்த மனிதன் எவ்வளவு நாள் அந்தச் சின்னஞ்சிறு குடிசையில் காலம் தள்ளினானோ? அவருக்கு மந்திரவாதி என்றும் அடையாளம் இருந்திருக்கிறது. கடைசி நாட்களில் துணைவி வேறு. நான் அந்த மனிதரைப் பார்த்தது இல்லை. பத்திரிகையில் வந்த புகைப்படங்கள்தான். அந்தப் பெண் ஒரு தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்திருந்தாள். 'என் முழு மனதோடுதான் அவருக்குத் தொண்டு செய்ய வந்திருக்கிறேன்’ என்றாள். அவளுக்கு என்ன வாழ்க்கை கிடைத்திருக்கும்? ஒழுங்காக சமையல் செய்யக்கூடப் பாத்திரங்கள் இருக்காது. அப்படிச் சமைக்க வேண்டுமானால், மூன்று செங்கற்களும் சுள்ளிக்குச்சிகளும்தான். ஆனால், அந்தப் பெண் அந்தச் சூழ்நிலையில் ஒரு பிச்சைக்காரன் போன்ற தோற்றம் உடைய மனிதனோடு வாழ வந்திருக்கிறாள்.

நான், 'அந்தப் பெண் எங்கிருந்து வந்தாள்?’ என விசாரித்தேன். பீடி ஜோதிடரைத் தெரிந்தஅளவுக்கு அவளைப் பற்றி தெரியவில்லை. அவள் அங்கு வந்ததே உயிரைவிடுவதற்குத்தானோ என நினைக்கும்படி இருந்தது, எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. ஏதோ ஒருவிதத்தில் மக்களுக்கு உதவ வேண்டும் என்றுதான் அவள் ஹோமியோபதி படித்திருப்பாள். எனக்கு யாரை நோவது எனத் தெரியவில்லை. தொலைக்காட்சிப் பேட்டியில், 'நானாகத்தான் இவரிடம் வந்து

சேர்ந்தேன்’ என்றும் சொன்னாள். வந்து சேர்ந்தேன்! எனக்கு இதுவும் வேறு எதையோ குறிக்கிறதோ எனத் தோன்றியது. அவள் மேலும் கூறினாள். 'இங்குதான் என் ஆன்மா சாந்தமாக இருக்கிறது.’ தலைவர்கள் யாராவது இறந்துபோனால், தவறாமல் இறந்தவருடைடைய ஆன்மா சாந்தியடைவதாக என முடிப்பார்கள். இந்த ஆன்மா என்றால் என்ன?

ஆன்மாவைப் பார்த்தவர்கள் யார்? ஒருமுறை ஓர் ஆன்மிக சபை நூலில் ஒரு மனிதனை விட்டு ஆவி பிரிவதுபோல ஒரு படம் இருந்தது. அதில் அந்த ஆவியை எளிதில் வர்ணிக்க முடியாது. ஆனால், அதற்கு மனித முகம் இருந்தது. ஆவிதான் ஆன்மாவா? அந்தப் படம் தலையில் இருந்து இடுப்பு வரை மனிதனாக இருந்து, பின்னர் உருக்குலைந்து ஒரு திரவச் சொட்டுபோல இருந்தது. எனக்கு நம்பிக்கை வரவில்லை. ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, என் கைப்பிடியில் இரண்டு மனிதர்கள் உயிரை விட்டார்கள். ஒருவர் என் கடைசி மகனின் மாமனார். ஒரே மாதத்தில் புற்றுநோயால் இறந்தார். நான் அவரைத் தூக்கிப் பிடித்தேன். கிடுகிடுவென உடல்சூடு குறைந்து, அவர் உயிரற்றவர் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, 'ஐயோ, யாராவது வாருங்களேன்’ என பக்கத்து ஃப்ளாட்டில் இருந்து கூக்குரல். அவருக்கு என் வயது இருக்கும். தூக்கிப் பிடித்தேன். சூடு விரைவாகக் குறைந்து, கடைசியில் உயிரற்றவரானார். என்னால் போகிற உயிரை நிறுத்த முடியவில்லை. இருவரும் என் கைப்பிடியில். இதே மாதிரி என் சகோதரி என் கையில் இறந்தாள். தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குப் போகலாம். ஆனால், உயிர் போய்விட்டது எனத் தெரிந்த பிறகு என்ன செய்வது? உயிர் போவது தெரிகிறது. ஆனால், எது எப்படி உடலைவிட்டு விலகுகிறது எனத் தெரியவில்லை.

சமீபத்தில் 100 வயதில் காலமான வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பற்றி ஒரு நண்பர் சொன்னார். கிருஷ்ண ஐயருடைய துணைவியார்

40 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இறந்தபோது, கிருஷ்ண ஐயர் நிலைகுலைந்து போய்விட்டார். திருவனந்தபுரத்தில் பலர் மத்தியில் ஒரு பேச்சு நிலவியது. அன்றில் இருந்து அந்த ஊரிலும் புது டெல்லியிலும் கிருஷ்ண ஐயர் தீர்ப்புகளை எழுதும்போது, அவருடைய மனைவியின் ஆவியும் சேர்ந்து எழுதும். கிருஷ்ண ஐயர் இந்த மாதிரி நம்பிக்கைகளுக்கு ஆட்படக்கூடியவர் அல்ல. அவர் நம்பினாரோ இல்லையோ, அவருடைய சகாக்கள் அன்று இதை நம்பினார்கள். கிருஷ்ண ஐயர், பாலக்காட்டுப் பிராமணர். ஆனால், தீவிர இடதுசாரிப் போக்கு. நான் அவரை ஒருமுறை காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். அங்கு நடந்த ஒரு கருத்தரங்கில் இருவரும் பேசினோம். தலைப்பு, 'ஊரை முடங்கவைக்கும் 'பந்த்’ சமூகத் தேவையா?’ நான் 'பந்த் சமூகத் தேவை அல்ல, அதைத் தடை செய்தால்கூடத் தவறு இல்லை’ என்றேன். கிருஷ்ண ஐயர் ஏற்றுக்கொண்டார். ஆனால், வேலைநிறுத்தத்தைத் தடைசெய்யக் கூடாது. அது தொழிலாளிகளின் உரிமை. அவ்வளவு தெளிவுள்ள மனிதரின் வாழ்க்கையில் இப்படி ஒரு மர்மம்!

தென் இந்தியாவில் உள்ள பிராமணர்கள், பாலக்காட்டுப் பிராமணர்கள் உள்பட, வட இந்திய ஆசாரத்தைப் பின்பற்றுபவர்கள் அல்ல. இங்கு மடி, ஆசாரம், இறந்தோருக்குப் பிண்டம் வைப்பது போன்ற கிரியைகள் கடுமையானவை. பிராமணர்கள் ஆண் அல்லது பெண்ணாக இருந்தால்கூட, முதல் பத்து நாட்கள் ஆவியாக வீட்டையே சுற்றிவருவார்கள் (என்பார்கள்). 11-வது நாள் கிரியைகள் ஆவியைத் தயார்படுத்துவது. 12-ம் நாள் அந்த ஆவி பித்ரு உலகம் சென்றடைந்துவிடும். அங்கே மூன்று தலைமுறைகளுக்குத்தான் இடம் உண்டு. இப்போது கிருஷ்ண ஐயர், அவருடைய தந்தையார், அப்புறம் அவருடைய தந்தை- அதாவது கிருஷ்ண ஐயருடைய தாத்தா. பெண்கள் தரப்பில், கிருஷ்ண ஐயருடைய மனைவி, தாய், மூன்றாவதாகத் தந்தை வழிப் பாட்டி. ஆதலால் கிருஷ்ண ஐயரின் மனைவி பித்ரு உலகம் சென்றிருக்க வேண்டும். இதுதான் பல நூற்றாண்டுகளாக நம்பப்படுவது. ஆனால், பித்ரு உலகத்தில் இருந்து அவள் ஆவி தொடர்ந்து கிருஷ்ண ஐயர் தீர்ப்பு எழுதும்போது அவர் மீது ஆதிக்கம் செலுத்தியது. நிஜம் எது எனத் தெரிய ஒரே வழி, உயிரைவிடுவதுதான். அந்தப் பெண் இதுபோன்ற விஷயங்கள் பற்றிய உண்மையை அறியத்தான், தற்கொலை செய்துகொண்டாளோ?

அப்படிப் பார்த்தால், அந்தப் பீடி சாமியார் சுமார் 10, 15 ஆண்டுகள் அங்கு வாழ்ந்திருக் கிறார். அவர் வாழ்க்கை ஒரு வகையில் சீராக ஓடிக்கொண்டிருந்தது. ஒரு பெண் வந்து அவர் தன்னையே அழித்துக்கொள்ளும்படி செய்துவிட்டாள்.

உலகத்தில் அபவாதம் எதிர்கொள்ளாத மனிதனே இருக்க முடியாது. பள்ளியில் ஆசிரியரிடம் அடிபடுகிறார்கள். மாணவர்களே ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்கிறார்கள். பள்ளிச் சுவரில் ஏதேதோ எழுதுகிறார்கள். பெரியவர்கள் ஆகிவிட்டால், வேறுவிதமான அபவாதங்கள். மனிதர்கள் தப்ப முடியாதது இரண்டு - சாவு, வரி. இப்போது மூன்றாவதாக இன்னொன்றைச் சேர்த்துகொள்ள வேண்டும்... அபவாதம்.

நான் ஓயாமல் விசாரித்தவண்ணம் இருந்தேன். பெண் வட சென்னையில் இருந்து வந்தவள். வட சென்னையில் லட்சக்கணக்கான பெண்கள் இருக்கிறார்கள். அப்புறம் ஹோமியோபதி. இந்தத் தகவல்களைவைத்து நான் கண்டவர்களை எல்லாம் அந்தப் பெண் பற்றி விசாரித்தேன். ஒரு விவரம் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் திவ்யா.

நான் மீண்டும் மீண்டும் விசாரித்ததில் ஒரு சிறு தடயம். பீடி சாமியார், திவ்யா இருவரும் தெலுங்கு மொழி சார்ந்தவர்கள்.

நான் 40 ஆண்டுகள் முன்பு ஒரு திரைப்பட ஸ்டுடியோவில் பணிபுரிந்தேன். அப்போது இந்திப் படங்கள் எடுக்கும்போது வட இந்திய முகங்கள் வேண்டும் என, ஏழெட்டு நபர்களைத் தேர்ந்துவைத்திருந்தது. அவர்கள் கும்பல் வேஷத்துக்கு வந்தாலும் வேறு தொழில் புரிகிறவர்கள். சிலர் வசதி படைத்தவர்கள். கும்பல் காட்சிகளுக்கு ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் வருவது, அவர்களுக்கு ஓர் அலாதியான பொழுதுபோக்கு. அவர்களில் பலரை எனக்கு நன்றாகவே தெரியும். தேவராஜ முதலித் தெருவுக்குப் போனேன். அன்றே அந்தத் தெருவில் கோடிக்கணக்கில் பணம் புரளும் என்பார்கள்.

'சார்... சார்...’ என யாரோ கூப்பிட்டார்கள். திரும்பினேன். ஈஷ்வர்லால்!

நானும் என் நண்பர்களும் ஈஷ்வர்லாலைக் கிண்டல் செய்வோம். அவனுக்கு எப்போதும் 'ஜாஸ¨ஸ்’ வேஷம்தான் கிடைக்கும்.

'ஈஷ்வர்லால், நீ நிஜமாகவே யாருக்கோ உளவு பார்க்கிறாய்’ எனக் கேலிசெய்வோம்.

எனக்குப் பெரும் உற்சாகம்.

'ஈஷ்வர்லால்!' என்றேன்.

'இங்கே எங்கே வந்தீங்க?'

'ஒரு வேலையா வந்தேன். நீகூட உதவலாம்.'

'வாங்க, முதல்ல டிபன் சாப்பிடுவோம்.'

'நீ என்ன பண்றே?'

'நம்ப கடை இருக்கு.'

'என்ன கடை?'

'இங்கே வேறென்ன கடை? எல்லாம் கண்ணாடிக் கடைதான்.'

'பெரிய கடையா?'

'இங்கே பெரிய கடை சின்னக் கடைனு கிடையாது. குடோன் வேற இடத்திலே இருக்கும். முதல்ல டிபன் சாப்டுங்க சார்.'

ஈஷ்வர்லால் ஒரு கடை முன் நின்றான். 'சார், கடையை வெளியில பார்த்து ஏதோ நினைச்சுக்காதீங்க. இங்கே கிடைக்கிற மாதிரி கா(ன்)டியா எங்கேயும் கிடைக்காது.'

'அது என்னது?'

'சாப்ட்டுப் பாருங்க.'

அது தெருவோரக் கட்டடம். கட்டடத்தையொட்டிப் படிக்கட்டு. ஐந்தாறு படிகள் ஏறினால், ஒரு சின்ன அறை. அந்த அறைக்குப் பக்கத்தில் சமையலறை இருந்ததை உணர முடிந்தது.நான்கு சின்ன மேஜைகள். அந்த மேஜைகளைச் சுற்றிக் குட்டிக் குட்டி நாற்காலிகள்.

'ஈஷ்வர்லால், இது நல்ல இடம்தானா? நான் இப்பத்தான் டைஃபாய்டு வந்து எழுந்தவன்.'

'ஒண்ணும் பண்ணாது சார். இது மாதிரி எங்கேயுமே கிடைக்காது.'

கடை முதலாளி கொண்டுவந்து வைத்தது ரிப்பன் பகோடா மாதிரி இருந்தது; ஆனால் வாயில் கரைந்தது.

'நிஜமா ரொம்ப நன்னாருக்கு ஈஷ்வர்லால்.'

டீயும் சாப்பிட்டு முடித்தோம்.

'கடைக்குப் போலாமா சார்?'

'எனக்கு ஒரு வேலை இருக்கு ஈஷ்வர்லால்.'

'என்ன வேலை?'

'எங்க வீட்டுப் பக்கம் ஒரு பொண்ணு விஷம் குடிச்சுச் செத்துப்போச்சு.'

'எக்ஸாம்ல ஃபெயிலா?'

'இல்லேப்பா. அது டாக்டர்.'

'திவ்யாவா?''

''ஒ... ஒனக்குத் தெரியுமா?'

'மின்ட் ஸ்ட்ரீட். டாக்டர் திவ்யா.'

'என்ன?'

'மின்ட் ஸ்ட்ரீட்.'

'பக்கத்துத் தெருவில்லே?'

'ஆமாம். ரொம்ப நல்ல டாக்டர். பணம் நாமளா கொடுத்தாத்தான்.'

'அது எப்படிப்பா?'

'அது தெரியாது சார். மருந்துகூட அதே கொடுத்துடும். இவ்வளவு சின்ன வயசுலே இவ்வளவு தர்மச் சிந்தனை.'

'என்னை அங்கே கூட்டிண்டு போறீயா?'

'அந்த வீட்டு முன்னாலே விட்டுடறேன். மூணாவது மாடி.'

'காமி.'

'சார், அவுங்களைப் பாக்கப்போறீங்களா?'

'எனக்கு ரொம்பத் துக்கமா இருக்கு

ஈஷ்வர்லால். என்னாலே நிம்மதியா இருக்க முடியலே.'

'அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க சார்? அவுங்களே ரொம்பத் துக்கத்திலே இருக்காங்க சார். வேணாம் சார்.'

'பணக்காரங்களா?'

'ரொம்ப சாதாரணம் சார். இல்லேன்னா மூணாவது மாடியிலே குடியிருப்பாங்களா?'

''கூடப் பொறந்தவங்க இருக்காங்களா?'

'எல்லாரும் இருக்காங்க சார். அவுங்களுக்கே தெரியலே, எப்படி இந்தப் பொண்ணு ஒரு பிக்காரியோட ஓடிப்போச்சுன்னு.'

'அவன் இங்கே வந்தானா?'

'அப்படித்தான் சொல்லிக்கிறாங்க. ஏதோ மேஜிக் பண்ணிருக்கான் போலயிருக்கு. அடுத்த நாளே பொண்ணைக் காணோம்.'

வீட்டைக் காண்பிக்கிறேன் எனச் சொன்னவன், 'சார், நீங்களே போங்க. நம்பர் 300'' என்றான்.

நான் அந்த வீட்டை அடைந்தேன். மாடிப்படிகள் மிகவும் குறுகலோடு உயரமானவை. ஒருவாறு மூன்றாவது மாடிக்குப் போய்விட்டேன். அந்த ஜோதிடன் அல்லது மந்திரவாதி எப்படி இந்தப் படிகளை ஏறி அந்தப் பெண்ணை மயக்கினான்?

மாடியில் வெராண்டா. இரு வீடுகள். முதல் கதவின் மீது 'டாக்டர் திவ்யலோசனி’ என இருந்தது. நான் வெராண்டாவில் இருந்து தெருவைக் குனிந்து பார்த்தேன். தலை சுற்றியது. இந்த வீட்டை கொத்தனார்கள் எப்படிக் கட்டினார்களோ?

ஒரு கதவு பூட்டியிருந்தது. திவ்யா வீட்டுக் கதவு மூடியிருந்தது.

நான் காத்திருந்தேன். ஒரு சிறுமி மாடிப்படி ஏறி திவ்யா வீட்டுக் கதவைத் தட்டினாள். கதவு திறந்தது. ஓர் அம்மாள் சிறுமியை உள்ளே போகவிட்டாள். என்னைப் பார்த்து, 'யார் வேணும்?'' எனக் கேட்டாள்.

நான் தயங்கினேன். அவள் புரிந்துகொண்டாள்.

'போறும் ஐயா, போறும். திவ்யா விஷம் குடிச்சு சாகலை.'

'அப்படியா!'

'அவளுக்கு இதயத்திலே ஒரு துவாரம் இருந்தது. எப்ப வேணா சாவானு தெரியும். ஆனா ஒரு பிச்சைக்காரன்கூட ஓடிப் போக வேண்டாம்.'

'அந்த ஆள் மந்திரவாதிங்கிறாங்களே?'

'இருக்கலாம். நான், அவ அப்பா, எல்லாருமா போய் கேட்டோம். என் புருஷன் அதான் அவ அப்பா, அந்தப் பிச்சைக்காரனை அடிக்கக்கூட அடிச்சுட்டார். நாங்கதான் தடுத்தோம். அவன் செத்துவெச்சான்னா? இப்ப பொண்ணே போய்ட்டா. இனிமே என்ன? அந்த இடத்திலே ஆவி, பிசாசு ஏதாவது இருந்ததோ என்னவோ? அவனே ஒரு பிசாசு மாதிரி இருந்தான்.'

இவ்வளவு சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்று தடால் எனக் கதவை மூடினாள். தாழிடும் சத்தம் கேட்டது.

நான் சில நிமிடங்கள் அங்கேயே நின்றிருந்தேன். பிறகு, படி இறங்க ஆரம்பித்தேன். நானே அறியாமல் அழுதேன். என் துக்கத்தின் காரணம், அந்தப் பெண்ணைவிட உயிரோடு இருந்தபோதே, ஓர் ஆவிபோல் இருந்த அந்த ஜோதிடன்தான் எனத் தோன்றிற்று!  


அசோகமித்திரன்

0 comments:

Post a Comment

 
TOP