Loading...
Thursday, 31 July 2014

நவீன நல்லதங்காள் கதை!

ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நீங்க அப்படிச் செஞ்சது சரியா?’ - மனதுக்குள் உறுத்திக்கொண்டிருந்த இந்தக் கேள்வியை ஜெயலட்சுமியிடம் கடைசி வரை நான் கேட்கவே இல்லை.

அப்படி என்ன செய்தார் ஜெயலட்சுமி?

2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாலை சுமார் 3 மணிக்கு, தன் மூன்று ஆண் பிள்ளைகளையும் தூக்கி கிணற்றில் வீசிவிட்டு தானும் குதித்தார். கிணற்றுக்குள் வீசப்பட்ட குழந்தைகள் இறந்துவிட, குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், ஜெயலட்சுமியின் தற்கொலை எண்ணம் ஈடேறவில்லை. பிற்பாடு ஜெயலட்சுமியின் கதறல் சத்தம் கேட்டவர்கள், மூன்று குழந்தைகளைப் பிணமாகவும், ஜெயலட்சுமியை உயிருடனும் கிணற்றில் இருந்து மீட்டார்கள்!
கைதுசெய்யப்பட்ட ஜெயலட்சுமி மீது, தற்கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணையின் முடிவில், அவர் மூன்று ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றது நீதிமன்றம். மேல்முறையீட்டில் ஜாமீன் பெற்ற ஜெயலட்சுமி, இப்போது தன் அடையாளம் மறைத்து வேறு ஓர் ஊரில் குடும்பத்தோடு வாழ்கிறார்.
குடும்பம்?
கணவன் கணேசன் மற்றும் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிறந்த ஓர் ஆண் குழந்தை விக்ரம். அவனுக்கு இப்போது வயது மூன்று!
கேள்விகளுக்கு அவசியம் இல்லாமல், ஜெயலட்சுமியே தன் கதையைச் சொல்லத் தொடங்கினார்...

'' எனக்கு, சேலம் பக்கத்துல ஒரு கிராமம். இதோ இவனை மாதிரி (தன் மூன்று வயது மகனைக் காட்டுகிறார்) இருக்கிறப்ப, என்னைப் பெத்தவங்க என்னை விட்டுட்டுப் போயிட்டாங்களாம். அப்புறம் ஒரு பாட்டிதான் வளர்த்துச்சு. நாலாப்புக்கு மேல என்னைப் படிக்கவைக்க முடியலை. வளர்ந்த பிறகு, 'சமைஞ்ச புள்ளைய ரொம்ப நாள் வீட்ல வெச்சிருக்க முடியாது’னு பாட்டி, இவருக்கு என்னைக் கட்டிக்குடுத்துருச்சு.
பக்கத்து கிராமத்துல வாடகைக்கு வீடு பிடிச்சுக் குடியேறினோம். அவங்க சொந்தபந்தங்களோட அவருக்குத் தொடர்பு இல்லை. கிடைச்ச வேலைகளைச் செஞ்சு, தறி நெசவுல வாழ்க்கையை ஓட்டினோம். 2001-ல் விக்னேஷ் பிறந்தான். ரெண்டு வருஷம் கழிச்சு கோகுலும், கடைசியா பரதனும் பிறந்தாங்க. புருஷன்-பொண்டாட்டியா இருந்தப்ப, கஷ்டம் பெருசாத் தெரியலை. ஆனா, மூணு குழந்தைகள் ஆனதும் சமாளிக்க முடியலை.
தறி நெய்ய கம்பெனிக்காரங்க பாவு கொடுப்பாங்க. ஒரு பாவை ஒரு மாசத்துலயும் ஓட்டலாம்; 15 நாள்லயும் ஓட்டலாம். ஒரு பாவு நெஞ்சு கொடுத்தா 1,500 ரூபா கொடுப்பாங்க. ஆனா, அந்தப் பணத்தை ஒரே தவணையில தர மாட்டாங்க. மூணா பிரிச்சுக் கொடுப்பாங்க. அந்த வருமானத்துல சமாளிக்க முடியாம,   கந்துவட்டிக்குக் கடன் வாங்கிச் சாப்பிட்டோம். ஒரு கட்டத்துல கடனுக்கு வட்டிகூட கட்ட முடியலை. கடன்காரங்க வந்து சண்டை போட ஆரம்பிச் சாங்க. கடைசி மகன் பரதன் பிறந்த பிறகு, ஒரு நாள்கூட நிம்மதி இல்லை. அவருக்கும் உடம்பு முடியாமப் போக, எந்த வருமானமும் இல்லாமப்போச்சு. அப்பத்தான் நான் ரொம்ப மனசு வெறுத்துட்டேன்'' - அதற்கு மேல் ஜெயலட்சுமியால் பேச முடியவில்லை.
அவரால் சொல்ல முடியாத அந்தத் துயர இரவின் சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினார் கணேசன். ''இப்படியே எத்தனை நாள்தான் இருக்கிறதுனு, சமையல் வேலை தேடி நான் வெளியூர் போயிட்டேன். நாலைஞ்சு நாள் கழிச்சு, 'உடனே கிளம்பி வா’னு தகவல் வந்துச்சு. அலறியடிச்சு ஓடியாந்தா, ஒரு பக்கம் வரிசையாக என் புள்ளைகளைப் பொணமாக் கிடத்தியிருக்காங்க. இன்னொரு பக்கம் என் சம்சாரத்தைக் கைதுபண்றதுக்காகக் காத்துட்டு இருக்கு போலீஸ்!'' - அந்த நாளின் நினைவுகள் அழுத்த, அதற்கு மேல் கணேசனாலும் பேச முடியவில்லை.
கணேசன் வெளியூருக்குக் கிளம்பிப்போன நாளில் இருந்தே ஒரு வேளை உணவுக்கும் திண்டாடித் திணறியிருக்கிறார் ஜெயலட்சுமி. அந்தச் சமயம், ஊரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு வீட்டுக்கு தலா 50 ரூபாய் வரி போட, அதைக்கூடக் கொடுக்க முடியவில்லை ஜெயலட்சுமியால். சதுர்த்தி விழாவில் சுண்டல், இனிப்புகள் வாங்க ஜெயலட்சுமியின் குழந்தைகள் போய் நிற்க, 'வரி கொடுக்கலைனாலும் சுண்டல் திங்க மட்டும்  வக்கணையா வந்துடுறாங்க பாரு’ என்று ஊரில் சிலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். அதோடு வீட்டுக்குத் திரும்பி வந்த குழந்தைகளை, அதட்டித் தூங்கவைத்திருக்கிறார் ஜெயலட்சுமி. இரவில் பசித்து அழுதபோது, குழந்தைகளுக்குக் கொடுக்க எதுவும் இல்லை. ஒரு பக்கம் அவமானம், இன்னொரு பக்கம் குழந்தைகளின் பசியும் அழுகையும் என விரக்தியின் உச்சத்துக்குப் போன ஜெயலட்சுமி, அரைத்தூக்கத்தில் இருந்த குழந்தைகளை ஒவ்வொன்றாகத் தூக்கிக்கொண்டுபோய் பக்கத்துத் தோட்டத்தில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு, கடைசியில் தானும் குதித்திருக்கிறார். குழந்தைகள் உடனடியாக மூச்சுத் திணறி உயிர் துறக்க, ஜெயலட்சுமியை மூர்ச்சையாக்கும் அளவுக்குக் கிணற்றில் நீர் இல்லை. இருட்டில் சில நிமிடங்கள் தட்டுத்தடுமாறியவர், தன் குழந்தைகள் பிணங்களாகச் சூழ்ந்திருக்க, என்ன செய்வதென்று தெரியாமல் கத்திக் கதற, ஓரிருவர் எட்டிப் பார்த்து, ஊர் கூடி, தகவல் போலீஸுக்குச் சென்று...
''குழந்தைகளுக்கு போஸ்ட் மார்ட்டம் முடிச்சு அனுப்பிட்டாங்க. போலீஸ்கிட்ட, 'என் மனைவியைக் கைதுசெய்யாதீங்க. ஏதோ குழப்பத்துல இப்படி நடந்துபோச்சு. குழந்தைங்க மேல உசுரா இருப்பா’னு மன்றாடிக் கேட்டுக்கிட்டேன். 'நாங்களே ஒரு வக்கீல் வெச்சு வாதாடி அவங்களை வெளில எடுத்திருவோம். அப்புறம் ஒண்ணும் பிரச்னை இருக்காது’னு சொன்னாங்க. ஆனா,  தற்கொலை வழக்கு, மூணு குழந்தைகளைக் கொன்ற கொலை வழக்குனு கேஸ் போட்டு அவளை ஜெயில்ல தள்ளிட்டாங்க. மனு போட்டு பார்த்தா, சித்தபிரமை பிடிச்ச மாதிரி விட்டத்தையே பார்த்துட்டு இருந்தா. என்கிட்ட எதுவுமே பேசலை. குழந்தைங்க செத்துப்போயிட்டாங்க... இனி அவங்க வரவே மாட்டாங்கனு அப்பத்தான் அவளுக்கு உரைச் சிருக்கு!'' - கம்மிய குரலில் கூறுகிறார் கணேசன்.
கிட்டத்தட்ட நல்லதங்காள் கதையேதான். ஜெயலட்சுமியின் நிலையறிந்த குடியுரிமைப் பாதுகாப்பு நடுவ வழக்கறிஞர்கள், அவரை  ஜாமீனில் எடுத்து கவுன்சலிங் அளித்து மீண்டும் ஒரு புதிய வாழ்க்கைக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். மறு வருடம் ஜாமீனில் வெளிவருகிறார் ஜெயலட்சுமி. பிறகு கணேசன்- ஜெயலட்சுமி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அவனுக்கு விக்ரம் என்று பெயர் வைக்கிறார் ஜெயலட்சுமி.
''விக்ரம் பிறந்த பிறகு ஓரளவு பரவாயில்லை. முன்னாடி எல்லாம் தூங்கவே மாட்டா. இப்போ பையனை அணைச்சுக்கிட்டுத் தூங்குறா. அவன்தான் அவளுக்கு இப்போ உலகமே. விக்ரம் பிறந்து ஒரு வருஷம் ஆனப்போ, அவ கேஸ்ல தீர்ப்பு வந்துச்சு. மூணு ஆயுள் தண்டனைகளோட 3,000 ரூபாய் அபராதம் விதிச்சு தீர்ப்பு வந்தது. அப்போ ஜெயிலுக்குப் போனவளோட குழந்தையையும் அனுப்பிவெச்சோம். அப்புறம் தீர்ப்புக்கு எதிரா மேல்முறையீடு செஞ்சு ஜாமீன் வாங்கினோம்!'' என்கிறார் கணேசன்.
சம்பவம் நடந்த கிணற்றில் இப்போது தண்ணீர் வற்றி பாறைகள் மட்டுமே தெரிகின்றன. ஜெயலட்சுமி மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்த வீட்டில், செடிகள் அடர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. அந்த ஊர் மக்கள், வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக மேலும் பல ஜெயலட்சுமிகள் உருவாகும் சாத்தியங்களோடுதான் இருக்கிறார்கள்.
சிறுவன் விக்ரம், அம்மாவின் தோளில் ஏறி மடியில் விழுந்து விளையாடுகிறான். அவனை அணைத்துக்கொண்டே பேசுகிறார் ஜெயலட்சுமி. ''இவனைப் படிக்க வெச்சு பெரிய ஆளாக்கணும். அதான் இனி என் வாழ்நாள் கடமை. இப்போ அவரு கேரளாவுல மாச சம்பள வேலைக்குப் போயிட்டு வர்றாரு. நான் பூப்பறிக்கப் போறேன். ஒரு கிலோவுக்கு 20 ரூபா. பூ நிறைய பூத்துக்கிடந்தா, ஒரு நாளைக்கு 60 ரூபா வரை கைக்கு வரும். விக்ரம் இப்போ பால்வாடிக்குப் போறான். என் கேஸ்லல மேல் கோர்ட்டு என்ன தீர்ப்பு சொல்லும்னு தெரியலை. நான் விடுதலை ஆவேனா... இல்லை மறுபடி ஜெயிலுக்குப் போவேனானு எதுவும் தெரியலை. ஆனா, என்ன நடந்தாலும் விக்ரமை மட்டும் கைவிடக் கூடாது. அது மட்டும்தான் ஒரே நினைப்பா இருக்கு!''
ஜெயலட்சுமி, விக்ரமை இறுக்கி அணைத்துக்கொள்ள, நிமிர்ந்து பார்க்கும் அவன், அம்மாவின் கண்களில் நீரைப் பார்த்ததும் சொல்கிறான்...
''அம்மா... அழுவாதம்மா. நான் உனக்கு விளையாட்டுக் காட்டட்டுமா?!''
வாழ்க்கை... எத்தனை பெரிய விளையாட்டு!

விகடன் 

0 comments:

Post a Comment

 
TOP