“என்ன… ராகவா…. பயங்கர சிந்தனை….” மலர் அவனது சிந்தனையை கலைக்கிறாள்.
“ஒன்னுமில்லே… நம்மை பத்தி நினைச்சிகிட்டேன். ஆமா உன் கணவர் சம்பத் என்ன சொல்றார்?…உன் முடிவுக்கு சம்மதம் தெரிவிச்சுட்டாரா…? ”
“அவர்கிட்டே சொல்லி ரெண்டு மாசம் ஆறது. அவர் என்னடான்னா உன்னை கடைசியா கேட்டுக்க சொல்லிட்டார்….” மலர் இவன் முகம் பார்த்து சிரிக்கிறாள்.
ராகவன் அவளை தீர்க்கமாய் பார்க்கிறான். பின் ஓடிவரும் அலைகள்பால் தன் பார்வையை திருப்பி விட்டவன், சற்று நேரம் கழித்து மலரினை நோக்கி,
” இதுக்கெல்லாம் நான் தகுதியானவனா மலர். எனக்கு ரொம்பவும் பிரமிப்பா இருக்கு. நேத்து தான் உன்னை சந்திச்ச மாதிரி இருக்கு. அதுக்குள்ளே ரெண்டு வருஷம் ஓடிடுத்து……”
மலர் அவன் கையை ஆதரவாய் பற்றிக்கொள்கிறாள். அந்த தொடுதல்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் ராகவனுக்கு புரிகிறது.
” ராகவா….எனக்கு உன்கிட்டே பிடிச்சதே, உன்னோட தன்னம்பிக்கையும், எழுத்தும் தான். என்ன இல்லே உன்கிட்டே. உன்னை நேரில் காட்டின ஆண்டவனுக்கு நான் கடமை பட்டிருக்கேன்….”
” தேங்க்ஸ் மலர்… ஆனாலும் இந்த அன்புக்கு நான் முழு தகுதியானவனா தெரியலே. அது சரி லெட்டர். குடுத்திட்டியா ?…”
” இன்னும் இல்லே. நாளைக்கு எழுதி குடுத்துட்டா போச்சு. But மேனஜரை எப்படி Face பண்றதுன்னுதான் தெரியலை. என்மேல ரொம்ப நம்பிக்கை வச்சு நிறைய பொறுப்புகளை கொடுத்தார்.”
” so what மலர். இதுவரைக்கும் அந்த கடமைகளை நீ சரிவர தானே செய்துவரே…”
” இல்லே ராகவா…திடுதிப்புன்னு போய் லெட்டர் குடுத்தா….”
” மலர். உன் பேருக்கு ஏத்த மாதிரிதான் நீ இருக்கே. ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கனும் நீ. வாழ்க்கையில் சில தேடல்கள் அவசியம். உனக்கு இது துவக்கம்னு நான் நெனைக்கிறேன்.”
மலர் சிரிக்கிறாள். மலரினும் மேலாய் பட்டது அவனுக்கு. மெல்ல ராகவன் அவளை முதன் முதலாய் சந்தித்த அந்த முதல் சந்திப்பை, அந்த தித்திக்கும் நிகழ்வை சற்று பின்னோக்கி பார்க்க ஆரம்பிக்கிறான்.
இந்தியாவெங்கும் தன் கிளை பரப்பிக்கிடக்கும் அந்த நிறுவனத்தில் கம்பியூட்டர் பிரிவில் அவன் சேர்ந்த அன்று முதன் முதலாய் அவளை சந்தித்தான். மலர். பெயருக்கு ஏற்றார் போல இருந்தது அவள் செய்கைகள். மானேஜரின் அந்தரங்க காரியதரிசி அவள். எனவே எல்லாருக்கு கொஞ்சம் பயம். ராகவன் முதல் நாளே வணக்கம் சொன்னான். பதிலுக்கு அவளும் கை குவித்துப் போனாள்.
ராகவன் நினைத்தது போல அவள் நட்பு அவ்வளவு சீக்கிரம் கிடைக்கவில்லை. அதற்காய் அவன் கவலைப்படவும் இல்லை. அலுவலகத்தின் போதும், இன்ன பிற எதிர்பாரா சந்திப்புகளின் போதும் ஒரு மெல்லிய புன்னகையோடு சரி. அத்துடன் எல்லாம் முடிந்து போகும். எந்நேரமும் கம்பியூட்டரும், போனுமாயிருப்பாள். மீட்டிங்கின்போது மேனஜரின் பேச்சுக்களை அழகாய் குறிப்பெடுத்துக் கொள்வாள்..
அடுத்த இந்தாவது நிமிடம் அந்த குறிப்புகள் அவனது கம்ப்யூட்டரில் மின்னும். அசுரத்தனமான வேகம். அதைப்போலத்தான் ராகவனும் தனது கடின உழைப்பால் வெகு சீக்கிரமே பெயரெடுக்க ஆரம்பித்தான். அடிக்கடி ஆபிஸ் விஷயமாய் வெளியூர் செல்ல ஆரம்பித்தான்.
ஒருநாள் மலர் இவனிடம் பேசினாள். அந்த நாள் கூட ராகவனுக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது. ஆகஸ்ட் 10. அன்று வழக்கம் போல ஆபிஸ் நுழைந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தன் இருக்கையில் அமர்ந்தவன், தன்முன் ஏதோ நிழல் விழ, நிமிர்ந்து பார்த்தான். தன் எதிரே மலர் நிற்பதை பார்த்து, சற்று திகைத்து பின் ,
” எஸ்….” என்றான்.
அப்போது தான் மலர் அவனிடம் முதன் முதலாய் பேசினாள்.
” sorry… ராகவன். ஒரு சின்ன ஹெல்ப்… என் சிஸ்டம் திடீர்னு hang ஆயிடுச்சி. ஒரு அர்ஜெண்டா ஒரு லெட்டர் டைப் பண்ணனும். கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?…..”
” O yes…. அதுக்கென்ன….” என்று எழுந்து நடந்தவன், மலர் தன்னை பின் தொடராமல் போகவே, திரும்பிப் பார்த்து என்ன என சைகையால் கேட்டான்.
” இல்லே… நீங்க சரி பண்றவரைக்கும், உங்க சிஸ்டத்தை நான் யூஸ் பண்ணிக்கவா….? என்றாள் தயக்கத்தினூடே…..
அன்று முதல் அவர்கள் நட்பு தொடர்ந்தது. கம்யூட்டரில் இருந்த ராகவனின் கவிதைகள் அவளூக்கு மிகவும் பிடித்து போகவே, அவர்களது நட்பு இன்னும் இறுக்கமானது. பத்திரிக்கைகளில் அவன் தொடர்ந்து எழுதி வருவதை கேள்விப்பட்டு, அவள் ரசித்த கவிதைகள், கதைகள் அவனுடையது என தெரிந்ததும் மலர் பிரம்மிப்படைந்தாள்.
தன் கணவன் சம்பத்தை ராகவனுக்கு பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தாள். கூடிய சீக்கிரமே அவன் அவர்களது குடும்பத்தில் ஒருவனாகிப் போனான். அவர்களது ஒரே செல்லப்பெண் ஆர்த்தியோ, இவனுடன் பசை போல ஒட்டிக்கொண்டாள். தன் மழலை மாறாத குரலால் இவனை ராவா என பெயர் சொல்லி அழைத்தாள்.
இங்கு ஆர்த்தியை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பார்த்த முதல் சந்திப்பிலேயே, பலநாள் பழகியவளைப் போல, இவன் அழைத்ததும் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். செல்லமாய் முத்தம் கொடுத்தாள். வீட்டில் இருந்த அத்துனை பொருட்களையும் காட்டினாள். பின் அடுத்து வந்த சந்திப்பில் இவன் நீட்டும் காட்பரிஸை லபக்கென வாங்கி கடகடவென தின்றுமுடித்து சிரிப்பாள். தன் எச்சில் ஒழுகும் வாயால் இவனுக்கு முத்தம் வேறு. அப்போதெல்லாம் ராகவன் தன் கன்னம் துடைக்க மாட்டான். மலர் அவளை கண்டிக்க முற்படும் போதெல்லாம் அவன் அவளை தடுத்து விடுவான்.
” அவளை தடுக்காதே மலர்….. எனக்கு இது பிடிச்சிருக்கு. இந்த முத்தம் இப்படியே இருக்கட்டும்…”
சம்பத் இவன் கைபற்றி கலகலவென சிரித்து, ” சரியான பார்ட்டி நீங்க ராகவன்….” என்பார்.
ஒருநாள் ராகவனுக்கு உடம்பு முடியாமல் போய் விட்டது. ஒவ்வொரு வெளியூர் பயணத்தின் போதும் தான் எச்சரிக்கையாக இருந்தும், ஒருசில சமயங்களில் இதுபோல நடந்து விடுகிறது. சரியான ஜுரம். ஆபிஸுக்கு நாலு நாள் லீவு போட்டு விட்டு சுருண்டான். இரண்டாவது நாளே மலர் அவன் வீடு தேடி வந்து விட்டாள். இவன் நிலை கண்டு பதறி, உடன் திலீப்பிற்க்கு போன் செய்தாள். அவன் வரும் வரையில் வீட்டினை ஒழுங்கு படுத்தியதில் செலவிட்டாள்.
வீடு பெருக்கி, அலங்கோலமாய் கிடந்தவைகளை அதனதன் இடத்தில் வைத்து, சுடுதண்ணீர் வைத்து, காப்பி போட்டு அவனுக்கு தந்து, இப்படி அத்தனை வேலைகளையும் சட்டென முடித்தாள். இடையில் ஒரு வார்த்தை கூட ராகவனிடம் பேசவில்லை. அடுத்த அரை மணி நேரத்தில் திலீப், ஆர்த்தியுடன் ஒரு கூடை நிறைய பழங்களுடன் வந்திறங்கினான். அவனை பார்த்ததுதான் தாமதம், மலர் பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். சகட்டு மேனிக்கு ராகவனை திட்டித் தீர்த்ததும் கடைசியில் ஓவென அழ ஆரம்பித்துவிட்டாள்.
ராகவன் எவ்வளவோ எடுத்து சொன்னான். ஆனால் அவளிடம் அவன் சமாதானம் எடுபடவில்லை. சற்று நேரம் கழித்து திலீப் ராகவனிடம் பேச ஆரம்பித்தான்.
” தப்பா எடுத்துக்காதீங்க ராகவன். இந்த பொம்பளைங்க எல்லாம் அழகான ராட்சஸிங்க. மனசுல எதையும் வெச்சிக்க மாட்டாங்க. ஆமா ஏன் உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கறத தெரியப்படுத்தலே. என்னை போட்டு உண்டு இல்லேன்னு பண்ணிட்டா தெரியுமா ? நாங்க ஏதாச்சும் சொல்லிட்டமா..? ”
ராகவன் பதறி அவன் கை பற்றுகிறான். மலரை பார்த்து கண்களால் நன்றி சொன்னான்.
பின் உடைந்த குரலில் பேச ஆரம்பித்தான்.
” தப்பா எடுத்துக்காதீங்க திலீப். ரெண்டு வயசிருக்கும் அப்போ எனக்கு. ஒரே நாளில் என் அப்பாவும், அம்மாவும் ஒரு ஆக்ஸிடெண்டுலே போயிட்டாங்க. தனிமரமா நின்னேன். சொந்தகாரங்க யாரும் முன்வரலே. சின்ன வயசிலேயே அப்பா, அம்மாவை முழுங்கினவன்னு என்னை யாரும் ஏத்துக்க முன் வரலே. நானே போய் அனாதைகள் இல்லத்துலே சேர்ந்தேன். அப்போலேர்ந்து யார் உதவியும் எதிர்பார்க்காமே வளர பழகிக்கிடேன்.
இப்போ இந்த அன்பை என்னால தாங்க முடியாமே தவிக்கிறேன். இது பத்திரமா இருக்கணுமுன்னு அனுதினமும் ஆண்டவன்கிட்டே பிராத்திக்றேன்….”
” சரி விடுங்க ராகவன். மலர் வெண்ணீர் போட்டு விட்டிருக்கா. உடம்ப லேசா துடச்சிவிட்டுக்கலாம். நான் ஹெல்ப் பண்ணவா.?
” இல்லே… நானே துடச்சிக்கறேன்….”
இவர்களின் உரையாடலை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தி மெல்ல ராகவனிடம் வந்து,
” ராவா… உம்பு சரியில்லையா…..”
” ஆமாண்ட செல்லம்….. மாமாவுக்கு ஜுரம்….”
” அப்போ.. வா… டாக்டர் மாமாகிட்டே போலாம். ஊசி போட்டுட்டு சாமி கும்பிட்டா சரியாய்டும்…”
ராகவன் அவளை இருக்காமாய் அணைத்துக்கொள்கிறான். பின் கண்களில் ஈரமுடன்,
” அதெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு முத்தம் குடுடா செல்லம்…மாமாவுக்கு ஜுரமெல்லாம் ஓடியே போய்டும்……”
இப்போது மலர் அவர்களை இடைமறித்து, ” டீ ஆர்த்தி, நம்பிடாதே….இதெல்லாம் வேஷம்…..”
ராகவன் கண்களில் நீர் வர சிரிக்கிறான். சற்று நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராய் சிரிப்பில் சேர்ந்து கொள்கிறார்கள். ஆர்த்தியும் கூட சேர்ந்து சிரிக்கிறாள்.
அடுத்த இரண்டொரு நாட்களில், ராகவன் இயல்பு நிலைக்கு சீக்கிறமே திரும்பி, வேலைக்கும் செல்ல ஆரம்பித்தான்.
” என்ன, பலமான சிந்தனை…..”
ராகவன் நினைவு கலைந்து, மலரின் முகம் பார்த்து சிரிக்கிறான். பின், ” நம்ம நட்பை கொஞ்சமா திரும்பி பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யமாயிருக்கு…. அப்பா… மூனு வருஷம் ஓடிடுத்து அதுக்குள்ளே….”
” ஆமாமா… ஆனா நீங்க மட்டும் மாறவே இல்லே…”
” Let it be மலர். சிலபேர் இப்படி இருக்கறதுலே தப்பில்லே. சரி பெங்களூர் எப்போ புறப்படனும்…?”
” may be next week…. திலீப் வீடெல்லாம் பார்த்து வச்சுட்டார். என்ன எங்க எல்லாருக்கும் உங்க நினைப்புத்தான். ஆர்த்திதான் எப்படி இருக்க போறாளேன்னு கொஞ்சம் கவலையா இருக்கு. ரொம்ப செல்லமா வளர்த்திட்டீங்க அவளை நீங்க. என்ன உடம்புக்கு முடியலேன்னா ஒரு சுடுதண்ணி வெக்க தெறியுமா உங்களுக்கு. கல்யாணம்னா காத தூரம் ஓடறீங்க. நாங்க என்னதான் செய்யறது…”
குரலில் கொஞ்சமாய் உஷ்ணம் தொனிக்கிறது மலருக்கு.
ராகவன் மெல்லமாய் அவளை பார்த்து சிரிக்கிறான். பின் தன் கைகளில் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டி விட்டபடி, ” இது நாள் வரைக்கும் எனக்கும் அந்த எண்ணம் இல்லாமே தான் இருந்தேன். ஆனா இப்போ நீ சொல்ற பொண்ணை கட்டிக்க முழு மனதா சம்மதிக்கிறேன். உனக்கு பிடிச்ச பொண்னா பாரு. வந்து தாலி கட்டறேன். போதுமா..? ”
மலர் ஆச்சர்யத்தில் வாய் பிளக்கிறாள். தன் கைகளிரண்டையும் மாறிமாறி கிள்ளிக்கொள்கிறாள். பின், ” ஐயோ… நிஜமா இது. திலீப் இதை கேட்டா ரொம்ம சந்தோஷப்படுவார்….”
” ஆமா மலர். அவரை மாதிரி ஒரு பிரண்டு கிடைக்க நான் ரொம்ப குடுத்து வச்சிருக்கனும். நீங்க எல்லாரும் சேர்ந்துதான் என்னை மாத்தி இருக்கீங்க. முக்கியமா ஆர்த்தி. அவளை பிரிஞ்சு எப்படி இருக்க போறேன்னுதான் எனக்கு தெறியலே. என்ன பன்னலாம் மலர் ? ”
” என்னை கேட்டா. நாய்குட்டி மாதிரி உங்களையே சுத்திச்சுத்தி வரா. நீங்கதான் ஒரு வழி சொல்லனும். ”
தூரத்தே அவர்களின் உரையாடலை அரைகுறையாய் கேட்டபடி வந்த திலீப், இவர்களை நெருங்கியதும், அதுவரையில் அவன் கைகளில் சிறைபட்டிருந்த ஆர்த்தி, தன் கைகளை விடுவித்துக்கொண்டு, ஒரு பட்டாம்பூச்சியாய் பறந்தோடி வந்து ராகவனை அணைத்து கொள்கிறாள். ராகவனும் தான். தயாராய் எடுத்து வைத்திருந்த காட்பரிஸை பார்த்ததும், உடன் ஆர்த்தியின் கண்கள் சிரிக்கிறது. உரிமையாய் அதை அவனிடமிருந்து பிரித்தவள்,
” தாங்க்யூ… ராவா…”
” அவ்வளவு தானா…. ”
” இரு வரேன். சாக்லெட்லாம் திண்ணு முடிச்சுட்டுதான் முத்தம் தருவேன்…”
” ம்.. ம்…. ” ராகவன் போலியாய் அழுகிறான்.
என்ன சொல்றா உங்க பிரெண்ட். என கேட்டபடி ஸ்னேகமாய் அருகில் வந்து அமருகிறான் திலீப்.
” அடுத்த வாரம் தானே புறப்படறீங்க.”
” ஆமா… ராகவன். but, அதுக்கு முன்னாடி உங்ககிட்டே கொஞ்சம் பேசனும்…”
” நீங்களுமா. well… என்ன விஷயம் திலீப்..”
” ரொம்ப தெளிவா யோசிக்கிரீங்க. என்ன புதுசா பேசப் போறேன். எல்லாம் உங்க கல்யாண விஷயமாதான்….”
இப்போது மலர் அவர்களை மறித்து, ” என்னங்க ஸார் இப்போதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டார். இனி நீங்களே பேசுங்க. அதுதான் சரியாயிருக்கும்.
” இப்போ பொறுப்பு ரொம்ப கூடிப் போயிடுச்சி ராகவன். சரி எப்படிப் பட்ட பொண்ணு வேணும்…’
” பெரிசா குணம் ஒன்னும் தேவையில்லே. தாய் – மகன் உறவுன்னா என்ன, சகோதர பாசம்னா என்னன்னு இனம் பிரிக்க தெரியனும். ஏன்னா, உன்னோட அன்பிலே அம்மா பாசத்தையும், திலீப்போட ஸ்னேகத்துலே ஒரு நல்ல சகோதரனின் அன்பையும் ஒருசேர பாக்கறேன். அந்த அன்புக்கு பங்கம் ஏற்படுத்தாத எந்த புதிய உறவும் எனக்கு சம்மதம். ”
ராகவனிடமிருந்து தெளிவாய் வந்து விழுகின்றன வார்த்தைகள்.
” well…. நீங்க சொன்ன இந்த நிமிஷம், இந்த செகண்ட் எனக்கு ஒரு பொண்ணு ஞாபகத்துக்கு வர்ரா. but… அவளை உங்களுக்கு பிடிக்குதான்னு நீங்கதான் சொல்லனும்…..”
” Is it… யாரது…..? ” ராகவன் சற்றே ஆவலாய் கேட்டு முடிக்கும் முன் திலீப் சட்டென சொல்கிறான்.
” அஞ்சனா….. மை சிஸ்டர்…..”
திடீரென வானம் வெளுகிறது. ராகவனின் வாழ்க்கையும் தான்.
இதயா…
0 comments:
Post a Comment