Loading...
Saturday 13 July 2013

சிறுமீன்(குட்டிக்கதை)

அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு.


உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. எல்லாவற்றையும் விட நீங்கள் அழுக்கை சாப்பிட்டு வளரும் அற்ப உயிர்கள். உங்களை நான் கொன்றால் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள். என்னை எதிர்க்க  உங்களால் இயலுமா. உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை அதனால் தான் உங்களைக் கொல்கிறேன். என்று கேலி செய்தது.

இப்படி தினம் கேலியும் அவமானமும் பட்டு சாவதை நினைத்து மீன்கள் மிகவும் வருத்தம் கொண்டன.

ஒருநாள் அந்தக் கொக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்னஞ்சிறு மீன்குஞ்சு ஒன்று குளத்தில் இருந்து  தாவி மண்ணில் விழுந்து துடித்துச் சாக முயன்றது.

அதைக்கண்ட கொக்கு சிறுமீனே..உனக்குச் சாவதற்கு அவ்வளவு விருப்பமா. அல்லது என்னைக் கண்டு பயமா, நீ நன்றாக வளரும் வரை பிழைத்து இருக்கட்டும் என்று தானே விட்டுவைத்திருக்கிறேன்,  அதற்குள் என்ன அவசரம்  என்று கேட்டது.

அதற்கு மீன்குஞ்சு சொன்னது.

கொக்கே,, வானத்தில் பறக்கின்ற பறவைகள் என்றாலே உன்னதமானவை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எளிய உயிர்களைக் கொன்று தின்னும் அற்பங்கள் கூட வானில் பறக்கின்றன என்று உன்னைப் பார்த்த பிறகு தான் அறிந்து கொண்டேன்.

ஒற்றைக் காலில் நிற்பதால் நீ துறவியுமில்லை. வெண்ணிறமாக இருப்பதால் நீ தூய்மையானவனுமில்லை. தோற்றத்தைப் பார்த்து உன்னை அமைதியின் உருவம் என நம்புபவர்கள் முட்டாள்கள். உன்னிடம் சிக்கி உயிரை இழப்பதை விட நானாகச் செத்துமடிவது மேல்.

ஒன்றை நினைவில் வைத்துக் கொள். எந்தக் கொக்கும் வயதாகி தானாகச் செத்துப் போவதில்லை. எவராலோ கொல்லப்படத்தான் போகின்றன. என்றபடி வீழ்ந்து இறந்தது சிறுமீன்

0 comments:

Post a Comment

 
TOP