Loading...
Wednesday 3 July 2013

ஒற்றைத் தண்டவாளம்.... (சிறுகதை)

"சரியாக ஏழு முப்பது மணிக்கு ரயில் புறப்படும். இப்பொழுதெல்லாம் ரயில்கள் எல்லாம் சரியாக புறப்பட்டுவிடுகிறது. சென்னை எழும்பூரிலிருந்து ஏழு முப்பதுக்கு புறப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் காலை ஆறு மணிக்கெல்லாம் திருவநெல்வேலியை அடைந்துவிடுவேன்.
அங்கிருந்து சுமார் முப்பது மைல்கல் தூரம் பேருந்தில் சென்றால் எனது ஊரை அடந்து விடலாம். ஆனால் அந்த ஊருக்குள் சென்று என் அப்பாவின் முகத்தை எப்படிப்பார்ப்பேன். அவர்களை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. என்னைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுவிட்டார். சீ..."

இவ்வாறு கடந்த ஆறு மாதத்தில் ஆயிரம் முறையாவது மனதிலேயே குமுறி இருப்பான் ஜெகதீஸ்.

ரயில் நிலையத்தினுள் சென்று அனந்தபுரி எக்ஸ்பிரஸ் எந்த தடம் எண்ணில் நிறுத்தப்பட்டிருக்கும் என்று உறுதி செய்து விட்டு தடம் எண் எட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடக்கிற வழியிலிருந்த ஒரு சிறிய கடையில் ஒரு தண்ணீர் பாட்டிலும் இரண்டு பாக்கெட் பிஸ்கட்டும் மேலும் ஃபோர் அடித்தால் படிப்பதற்கு ஆனந்த விகடன் புத்தகமும் வாங்கி பையில் வைத்தான். அந்த நேரம் அவன் கைபேசி அதிர்ந்தது. எடுத்து பார்த்தான்,

"அண்ணா காலிங்க் ..." என்று வந்தது.

இப்பொழுது இதை எடுத்து பேசினால் தேவை இல்லாமல் அவன் அறிவுரை கூறுவான், என்று அதை துண்டித்து, அணைத்து கைபேசியை மீண்டும் தனது பாக்கெட்டில் வைத்து விட்டு ரயிலில் எஸ் 2 பெட்டியை தேடி நடக்க ஆரம்பித்தான்.

இருக்கை எண் எட்டு அவன் அமர வேண்டிய இடம். சுற்றி இருக்கும் ஏழு இருக்கைகளும் காலியாக இருந்தது. மனதுக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டு விட்டு இருக்கையில் அமர்ந்தான்.

அமர்ந்தவன் பையிலிருந்த ஆனந்த விகடனை எடுத்து படிக்க ஆரம்பித்தான். இன்னொரு கையில் அவன் வாங்கிய பிஸ்கட்டும். முதல் பிஸ்கட்டை வாயில் வைத்து கடித்ததும். ஒரு பிஞ்சு கை அவன் தொடையை தட்டியது. ஆனந்த விகடனை விலக்கி பார்த்தான். அழகான ஒரு குழந்தை அவன் வாயைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தது.

"எவ்வளவு அழகாக இருக்கிற.." இரண்டு வயது இருக்கும் அந்த குழந்தைக்கு

"ஹேய்...ரொம்ப குயூட்டா இருக்கிற...." என்று கன்னத்தை கிள்ளிவிட்டான்.

"என்ன பிஸ்கட் வேணுமா..." என்று ஒரு பிஸ்கெட்டை எடுத்து அந்த குழந்தையில் வாயில் ஊட்ட சென்றான். குழந்தையும் வாயை ஆயென்று திறந்தது .அதனற்கிடையில் அந்த குழந்தையின் அம்மா என்று நினைக்கிறேன். சட்டென்று தட்டி விட்டாள்.

"யாரு என்ன கொடுத்தாலும் சாப்பிடுறது. அந்த பிஸ்கெட்ல என்ன மருந்து கலந்திருக்கோ...' என்ற அந்த குழந்தையை திட்டிவாறு எடுத்து சென்றாள்.

ஜெகதீஸ்க்கு செருப்பால் கன்னத்தில் அடித்தது போல இருந்தது. "என்ன மனுசங்கடா இவங்க...ஒரு பிஞ்சு மனசில இப்பவே விசத்தை விதைக்றீங்களேடா.." என்று எண்ணியவாறு எட்டி அவள் குழந்தையுடன் எங்கே செல்கிறாள் என்று பார்த்தான். அடுத்து இருந்த இன்னொரு பகுதிக்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

மீண்டும் ஆனந்த விகடன் பக்கங்களில் மூழ்கினான். இதற்கிடையில் அவன் பக்கத்து இருக்கையில் ஒரு முஸ்ஸீம் குடும்பம் வந்து அமர்ந்தது. ஏழுபேர் கொண்ட குடும்பம். இரண்டு சிறு குழந்தைகளும் மீதி பெரியவர்களும். அதைக்கூட கவனிக்காமல் ஜெகதீஸ் மன குழப்பதில் ஆழ்ந்தான்.

ஒரு மகன்னு பார்க்காம என்னென்ன பேசினாரு. அவரை எப்படி நான் மன்னிப்பது. அவர் பேசினாலும் என்னால் பேச முடியுமா? நான் எவ்வளவு சந்தோசமா தீபாவளியை கொண்டாடலாம்னு போனேன். ஆனால் அங்கே நடந்ததது...

பொதுவாக ஜெகதீஸ் அதிகமாக சந்தோசப்படும் தருணம் அப்பாவுடன் இருக்கும் தருணம்தான். சின்ன வயதிலிருந்தே ஹாஸ்டலில் வளர்ந்ததினால் என்னமோ அப்பா, அம்மா என்றால் உருகி விடுவான். இந்த தீபாவளிக்கும் ரொம்ப சந்தோசமாக இரண்டு நாட்களுக்கு முன்னமே அலுவலகத்தில் விடுப்பு வாங்ககிக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

முதல் நாள் நல்ல முறையில் பாசமும் உணவுமாக சென்றது. இரண்டாவது நாளும் நகர்ந்தது. மூன்றாவது நாள்தான் சரவெடி போல் வெடிக்க ஆரம்பித்தது.

தீபாவளி பகலை கொண்டாடியாகி விட்டது என்று சூரியன் வழி விலக சந்திரன் வீடு வந்த நேரம் இவர்கள் பட்டாசு வெடிக்கும் முன் அப்பாவின் நண்பர் ஒருவர் முதல் வெடியை பற்ற வைத்தார்.

"குமரேசா...." அப்பாவின் பெயர்தான் குமரேசன்

"குமரேசா...மூத்த பையனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்ட... இரண்டாவது பையனுக்கு..." என்று இழுத்தார்.

"பண்ணணும்..எதாவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு..."

ஜெகதீஸ்க்கு முகம் கறுக்க ஆரம்பித்தது. முதல் மிளகா பட்டாசை பற்ற வைத்து தரையில் வீசினான். டமால் என்று வெடித்தது.

"எவ்வளவு எதிர்பாக்றீங்க..." என்று மீண்டும் திரியை கிள்ளினார் அப்பாவின் நண்பர்.

"மூத்த பையனுக்கு ஐம்பதும் நூறு பவனும் செஞ்சாங்கக. அவனை விட இவன் நல்ல வேலைல இருக்கான். . . அப்படினா பாத்துக்கோங்கக..."

ஜெகதீஸ்க்கு சுற்றென்று கோபம் வந்தது.

"அப்பா என்னை விற்க பாக்றீங்ககளா?. நான் என்ன அவ்வளவு பாரமாவா இருக்கேன்." என்று நக்கலாக கேட்டு வைத்தான்.

"சும்மா இரு உங்களுக்கு என்ன தெரியும். . . ."

"அப்பா எனக்கு தெரியும். எனக்கு நீங்க பொண்ணு பார்க்க வேணாம். நான் பார்த்துக்றேன்.'

"நீ பார்த்துக்றதுதெல்லாம் இருக்கட்டும். நான் வெளிய தலை காட்ட வேண்டாமா.'

"இந்த வயசில நீங்க தலை காட்டுறதுதான் முக்கியமா? நான் நல்ல வாழணும்னு உங்களுக்கு அக்கறை இல்லை."

இதுக்கு மேல இங்க நின்னால் பிரச்சினை அதிகமாகிவிடும் என்று அப்பாவின் நண்பர் அங்கிருந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.

இதற்கிடையில் ஒரு அணுகுண்டு பட்டாசை பற்ற வைத்தான் ஜெகதீஸ். அது வெடித்து சிதறியது.

"வாழணும்னு அக்கறை இல்லாமதான் றிட்டையட் ஆனா பிறகும் ராப்பகலா கஸ்டப்படுறேன்?"

"உங்கள யாரு கஸ்டப்பட சொன்னது. அதுதான் மாசா மாசம் காசு அனுப்புறேன் இல்லை...."

பிரச்சினை பெரிதாவதை உணராமல் இருவரும் கண்டபடி பேச ஆரம்பித்தனர்.

"உன் காசு யாருக்கு வேணும். இனி அனுப்பாத..."

"நீங்கக என்ன சொன்னாலும் நான் பாக்கிற பொண்ணதான் கட்டிப்பேன்'

"எதாவது பொண்ணை ரெடி பண்ணி வெச்சிருக்கிறியோ?'

"ஆமா...'

அதுக்கப்புறம் எதிரிகள் பேசுவது போல் வார்த்தை மாற ஆரம்பித்தது. " என்னை படிக்க வைக்க வேண்டியது உங்க கடமை. அதுக்காக நான் அடிமை ஒண்ணுமில்லை" என்ற் ஆரம்பித்து, "இது நான் கஸ்டப்பட்டு கட்டின வீடு இதுல இருக்கணும்னா நான் சொல்லுறதுதான் கேக்கணும்..." என்ற அளவில் போய் முடிந்தது.

இரவு பத்து மணி என்று கூட பார்க்காமல் இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு பின்னால் வந்த அண்ணனையும் மதிக்காமல் தனது பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தான்.

ரயில் புறப்பட்டதும் வெளியே செயற்கையுடன் இயற்கை நகர்வதும் கண்ணில் தெரிந்தது. அப்படியே ஜன்னல் ஓரமாய் சாய்ந்து அமர்ந்து கொண்டான் ஜெகதீஸ். பார்வை மனக்கண்ணில் ஓட, கண்கள் மட்டும் எதிர் இருக்கையை நோக்கி இருப்பதை அவன் அறியவில்லை.

எதிர் இருக்கையில் வந்த முஸ்லீம் குடும்பத்தில் பெண்குழந்தை அமர்ந்திருந்தது. அது, ஜெகதீஸ் தன்னைதான் பாரற்கிறான் என்று எண்ணி வெட்கப்படுவதும் கம்பியில் பின்னால் மறைவதுமாக இருந்ததை கூட அவன் கவனிக்கவில்லை. அது அந்த குழந்தைக்கு புரிந்திருக்க வேண்டும்,

"அங்கிள்..." என்று அவன் கைகளில் தட்டியது. திரும்பி பார்த்தான், பார்த்தவன்ஆச்சரியத்தில் மூழ்கினான். அந்த குழந்தையும் இந்த குழந்தையும் ஒரே போல் இருந்தது. எட்டி அந்த குழந்தை இருக்கிறதா என்று பார்த்தான் இல்லை. மீண்டும் எதிலிருந்த குழந்தை தட்டியது,

"அங்கிள்...நீ புக்கை கைல வெச்சிட்டு ஏன் படிக்காம என்னை பார்த்திட்டு இருக்கிற...?"

"உன் பெயரு என்னமா?"

"பெயருன்னா..." குழந்தை அழகாக மழலை மொழியில் கேட்டது.

"நேயிம்மா"

"ஆயிக்ஷா..."

"நல்ல பெயரு...என்ன படிக்கிற..."

"யுகேஜி..."

"நீ என்ன படிக்கிற..." என்று அந்த குழந்தை கேட்டதைக் கூட கவனிக்காமல் எழுந்து அவன் யோசனையில் மேல் படுக்கைக்கு சென்று படுத்தவாறு சாய்ந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஆயிக்ஷாவையும் அவள் அம்மா தூக்கி விட எதிர் படிக்கையில் வந்து படுத்துக் கொண்டாள்.

"ஆயிக்ஷா..அங்கிளை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது..."

"சரி மம்மி..." என்று படுத்துக்கொண்டது.

பக்கத்தில் வந்த படுத்த ஆயிக்ஷாயை பார்த்தான். கையைப்பார்த்தான். அப்பொழுதுதான் ஜெகதீஸ் பிஸ்கட்டை கையில் எடுத்திருந்தான்.

குழந்தை பார்த்தால் கேட்கும் கொடுத்தால் முன்பு நடந்தது போல் நடக்க வாய்பிருக்கிறது என்று ஒரு ஓரமாய் மறைத்து வைத்துக் கொண்டு ஒன்று, இரண்டாக சாப்பிட ஆரம்பித்தான்.

"அங்கிள்...கடலை சாப்பிடுங்க...' என்று ஜெகதீஸைப் பார்த்து நீட்டியது. ஜெகதீஸுக்கு அந்த குழந்தை காறி உமிழ்ந்தது போல தூன்றியது.

"வேணாம்..நீ சாப்பிடு..."

"மம்மி...அங்கிள் சாப்பிட மாட்டேங்றாரு..."

ஜெகதீஸ் அதை கையில் வாங்கி கொண்டான். பிறகு மறைத்து வைத்திருந்த ஒரு பிஸ்கெட்டை எடுத்து அயிக்ஷாவிடம் நீட்டி விட்டு அயிக்ஷாவின் அப்பாவைப்பார்த்தான். கொடுங்க என்பதுபோல் கண் அசைத்தார்.

அதன் பிறகு குழந்தை அவனிடன் நண்பனாகி விட்டது. பாடல் பாடுபவதும், கதை சொல்வதுமாக இரவு பத்து மணி வரை தான் பிறந்த ஊருக்கு செல்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் குழந்தை போல் மாறியிருந்தான். கொஞ்ச நேரத்தில் கதை சொல்லியவாறே குழந்தை தூங்கி விட்டது.

"சே...இந்த குழந்தை போலவே இருந்திருக்கலாம். எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இறந்த வீட்டிற்கு தனது தாயும் தந்தையும் தன்னை அழைத்து செல்கிறார்கள் என்பது கூட தெரியாமல் நான் பாஸ்கர் அங்கிள் வீட்டுக்கு போகிறேனே என்று எவ்வளவு மகிழ்ச்சியாக சொல்கிறது. பாஸ்கர் இறந்து ஒரு வாரம் ஆகிறது என்று இந்த குழந்தைக்கு எப்படி புரிய வைப்பார்கள். அது நாளைக்கு பாஸ்கர் அங்கிளை தேடுமே...எங்கே என்றால்... " என்று அவன் எண்ணுகையில் மனது பதற ஆரம்பித்தது. அப்பா நினைவுக்கு வர ஆரம்பித்தார்.

"ஐந்து வயதில் என் அம்மா இறந்த பொழுது உன்னை என்ன பாடுப் படுத்தி இருப்பேன். ஐயோ..." ஜெகதீஸ் கண்கள் கலங்கியது.

"ஒரு நாள் அவ்வாறு பேசியதற்காக இவ்வாறு செய்துவிட்டேன் எத்தனை நாள் என்னை பொறுத்திருப்பார்... என்னால் ஆறு மாதமாக அவரை மன்னிக்க முடியவில்லை என்றால்...நான்... பாவி...பாவி" என்று தலையில் அடித்து அழ ஆரம்பித்தான்....

"அந்த வருத்தம்தான் அப்பாவை மரண படுக்கை வரை கொண்டு வந்து விட்டிருக்கிறது போல் தெரிகிறது..." என்று எண்ணி எண்ணி அழ ஆரம்பித்தான்.

"வீட்டிற்கு சென்ற உடனே அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..." என்று எண்ணிக் கொண்டான். அழுது கொண்டே தூங்கியும் போனான்.

காலையில் ஆயிக்ஷாவின் சத்தம் கேட்டுதான் எழுந்தான். எட்டி வெளியே பார்த்தான். "கோயில்பட்டி அன்புடன் வரவேற்கிறது" எப்று எழுதி இருந்தது. அதைப் பார்த்த பிறகுதான் அவனுக்கு ஆயிக்ஷா சொன்னது ஞாபகம் வந்தது ' அங்கிள்..கோயில் பட்டி பாஸ்கறர் அங்கிளை பார்க்க போறோம்..."

எட்டி ஆயிக்ஷாவைப்பார்த்தான், அவளும் ரயிலை விட்டு இறங்குவதற்கு தயாராக இருந்தாள். ஆயிக்ஷாவோ ஜெகதீஸை திரும்பி கூடப் பார்க்கவில்லை. அனைவரும் இறங்கிய பொழுது ஜெகதீஸ்,

"ஆயிக்ஷா...ஃபாய்..." என்று கை காட்டினான். அவளோ இவனைப் பார்த்து யாரென்றே தெரியாதது போல் விழித்து விழித்து பார்த்து விட்டு போனாள்.

ஆயிக்ஷா அம்மா, "அவளுக்கு எல்லாம் மறந்திடுச்சு போல...குழந்தை இல்ல...சரி நாங்க வற்றோம்..." என்று சொல்லியவாறே நடந்தனர்.

"அப்படினா பெரியவங்களும் வயதான குழந்தைதான்னு சொல்லுவாங்க இல்ல. அப்படினா அண்ணைக்கு நடந்ததெல்லாம் அப்பா மறந்திருப்பாரு இல்ல." உதடுகள் முணு முணுக்க பாக்கெட்டிலிருந்து செல் போனை வெளியில் எடுத்தான். அதை பார்த்த பிறகுதான் அவனுக்கு நினைவிற்கு வந்தது.

"சீ...நேத்து சுயிட்ச்சாப் செய்து வைத்த மொபலை ஆன் செய்யவே மறந்துட்டேன்..." என்று தலையில் தட்டிக் கொண்டான்.

கைபேசியை ஆன் செய்தான். ஆன் செய்ததும் கைபேசி அதிர்ந்தது,

அழைத்தது அன்ணன்தான். எடுத்து பேசினான்.

"டேய்...ஏண்டா உன் நம்பர் கிடைக்கல..." அண்ணன் சத்தம் தள தளத்தது.

"பேட்டரி இல்லை...."

"நேத்து அப்பா இறந்துட்டாருடா...."

"என்ன சொல்லுற...." என்று அதிர்ச்சியில் கைபேசியை கிழே நழவவிட்டான்.

அவன் அதிச்சியில் அமர்ந்திருந்த நேரம் ஜன்னல் வழியாக வந்த ஆயிக்ஷாவின் அப்பா, அவள் கையை பிடித்துக்கொண்டு,

"அங்கிளுக்கு பாய் சொல்லு..." என்று அவள் கை பிடித்து ஆட்டினார். அவளோ ஒன்னும் புரியாமல் கையை அசைத்தாள். ரயில் கூவும் சத்தம் கேட்க தொடங்கியது...மெதுவாக ரயில் நகர ஆரம்பித்தது..அந்த சத்ததில் "அப்பாபாபாபாபாபாபாபா..." என்று ஜெகதீஸ் கத்தியது யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை....ரயில் கூவி முடிக்கையில் அவன் மயங்கி விழுந்தான்.

0 comments:

Post a Comment

 
TOP