Loading...
Thursday 11 July 2013

உண்மை (சிறுகதை)

தாயம்மாள் தன் கணவனிடம், சர்க்கரை கார்டு எங்கே?

அதோ அந்த இடத்தில்தான் வைச்சேன்!

எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்கறதில்ல!

சும்மா கத்தாதே, ரூபாய் எடுத்துட்டு வா

ம் இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல

தாயம்மாள் சர்க்கரை கார்டை தேடி எடுத்து வந்தாள். இன்னைக்கு பிரேமாவை ஸ்கூலுக்கு போக வேணாம்னுட்டேன்.

ஏ... அது படிக்கறபுள்ள!

நீ சும்மா இருக்கிறய... இன்னைக்குத்தான் நமக்கு ஆடு குடுக்கறாங்களே!

ஆமா... ஆமா நீயும் ஆடு மேய்ச்சுட்டாலும்!

நீதான் மேய்ச்சு... அதை சந்தையாக்கு பாக்கலாம்!

எனக்கு கிடக்கு ஆயிர வேலை!

க்கும் இந்த வக்கனைச் சொல்லுக்கு குறைச்சல் இல்ல. நீயோ வேலைக்கு சரியா போறதில்ல, அதுக்குள்ள இதை யெல்லாம் பேச வந்துட்டே

உன்னோட பேச முடியாது

தெரியுதுல்ல சும்மா கம்முனு இரு!

இந்த சொல்லாடல்களை கேட்டுக் கொண்டே வந்தான் முருகு. சொல்வழக்காறு பற்றி ஆய்வு மேற்கொள்ள அந்த ஊருக்கு

வந்திருந்தான்.

அம்மா! நா இந்த ஊர்த் தலைவரை சந்திக்கணும்

தாயம்மாள், ஓ வெளியூர்.... காரவுகளா! இதோ வடக்கால போயி மேக்கால திரும்பினா ஒரு பெரிய ஊடு வரும் அதுதான்

தலைவரூடு

சரிம்மா... நன்றி வர்றேன்.

ம்... போய்ட்டு வாங்க தன் கணவனைப் பார்த்து, ம்... வெளியூரு காரவுக எதுக்கு வந்திருக்காங்கன்னு தெரியல!

நீ உன் வேலையப்பாரு... அடுத்தவங்க நாயம் நமக்கெதுக்கு என்றான் முத்துக்கருப்பன்.

ஏ... பிரேமா இங்க வா

ஏம்மா... நா ஸ்கூலுக்கு கிளம்பறேன்!

இன்னைக்கு ஒன்னும் வேண்டாம். வா... போயி இன்னைக்கு நாலு ஆடு கொடுக்கறாங்களாம். சரசா, கார்த்திகா எல்லாரும்

போறாங்க. நாமும் போய் வாங்கியாறலாம்.

போம்மா ஸ்கூலுக்கு லீவு போட்டா... டீச்சர் திட்டுவாங்க என்றாள் சிணுங்கியபடி.

நா... சொல்லிக்கறேன் நீ வா.

அங்கிருந்து கிளம்பி சென்ற முருகு தலைவரை சந்தித்தான்.

ஓ!... முருகுவா... வாப்பா... அதோ அந்த வீட்டை ஒதுக்கியிருக்கு.. நீ எப்ப வேணுனாலும் வந்து தங்கிக்க.

அய்யா... இப்போ ஒரு பத்து நாள் இருந்திட்டு போறேன். அடுத்தமுறை வரும்பொழுது அதிக நாட்கள் தங்கவேண்டி வரும்.

ஓ!...தாராளம்மா தங்கிக்க... நீங்க இங்கேயே சாப்பிட்டுகிடலாம்.

அய்யா... நா ஓட்டல்ல சாப்புட்டுகிறேன். உங்களுக்கு சிரமம் கொடுக்க விருப்பமில்லை.

அட!... போப்பா இங்க ஓட்டலெல்லாம் சரியா இருக்காது. நீ இங்கேயே சாப்பிட்டுக்க.

அய்யா... நா ஊரை சுத்திப் பார்த்துட்டு வர்றதுக்கு நேரம்... காலம் சரியா வராது

என்ன... இங்க தானே சுத்தப்போற. எப்ப வந்தாலும் ராமாயி இங்க இருப்பா அவ உனக்கு எந்த நேரமானாலும் சோறு போடுவா.

சரிங்க அய்யா... என்று கூறிவிட்டு முகத்தை கழுவிக் கொண்டு ஒரு நோட்டு, டேப் போன்றவற்றை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

இந்த ஊர் முழுவதும் இன்னைக்கு சுற்றிவிட்டு வந்துவிட்டால் நாளையிலயிருந்து வேலைய ஆரம்பிக்கலாம் என நினைத்தபடி ஊருக்குள் நடக்க ஆரம்பித்தான்.

தாயம்மா தன் மகள் பிரேமாவை அழைத்துக்கொண்டு சந்தைக்கு போய் நான்கு ஆட்டுகுட்டிகளை வாங்கிக் கொண்டு, அவற்றில் இரண்டை பிரேமாவிடம் கொடுத்து இழுத்து வரச் சொன்னாள். அவள் இரண்டை இழுத்து கொண்டு வந்தாள். வீட்டிற்கு வந்ததும் அவற்றைக் கட்டிப் போட்டு தீனி வைத்தாள்.

இவற்றையெல்லாம் பார்த்தபடி முருகு நின்று கொண்டிருந்தான்.

தாயம்மா, என்ன வெளியூரு ராசா தலைவரைப் பாத்தாச்சா?

ம்... பாத்துட்டேன்; ஏது ஆடுக?

அதுதான்... கவர்மென்ட்ல கொடுத்த விலையில்லா ஆடுக!

யாரு இது?... உங்க பொண்ணா?

ஆமா... ஆட்டைப் புடிச்சாற அவளும் வேணும்ல!

படிக்கற புள்ளைய...

ஒருநாள் படிக்காட்டி ஒன்னும் ஆகிடாது தம்பி

இந்த ஆட்டுக்காரங்க வயிறு நிறைய தண்ணியை குடுத்து நல்லா குண்டா இருக்கற மாதிரி செஞ்சு விக்கறாங்க. இது வேற தீனி திங்க மாட்டேங்குது என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போனாள்.

முருகு சிரித்தபடி நடக்கலானான். அந்த ஊரில் 10 நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரே ம்மே... ம்மே.. ம்மே... என்னும் ஒலிதான் எங்கும் கேட்டது. ஒரு சிலருக்கு தங்கள் ஆடுகள் கத்தவில்லையே என்கிற கவலையில், என்ன நாலுல்ல 2 நல்லா கத்துது மத்த ரெண்டும் கத்தல.

அதுவா அதுதான் வயிறு முட்ட தண்ணி குடுத்திருப்பாங்க. அது இன்னும் கொஞ்ச நேரத்துல கத்தும். எல்லாருக்கும் ஒரு கவலைன்னா உனக்கு ஒண்ணு.

தாயம்மா வீட்டிற்கு அருகில் ஒரு வயதான பாட்டியம்மா குடியிருந்தார். அவருக்கு தனக்கு கொடுக்கிலைன்னு வருத்தம்.

ஆமா... கொமரிங்களுக்குத்தான் கொடுப்பாங் களாம். எனக்கெல்லாம் கொடுக்கமாட்டாங்களாம். ஏ என்னைப் பாத்தா ஆடு மாடு மேய்கிறமாதிரி தெரியலையா?... நா... என் வயசுல எத்தனை ஆடுக மேய்ச்சிருப்பேன் என்னமோ சொல்றாங்க. நா கிழவியாயிட்டேன்னு என்று அந்த வீதிக்கே கேட்கும்படி கத்திப் பேச அந்த வீதியே சிரித்தது.

இரண்டு நாட்கள் கழிந்தது. முருகு சொல் வழக்காறு பற்றி ஆய்வை மேற்கொள்ள அந்த ஊரில் உள்ள வயதானவர்களைக் கண்டு பேச ஒவ்வொரு வீதியாகச் சென்று வரும்போது ஒரு பெரியவரிடம் சென்று பல்வேறு சொற்களைச் சொல்லி வழக்காறு பற்றி விளக்கம் கேட்டான்.

ஏன் தம்பி!... முதலில் நான் சொல்வதற்கு பதில் சொல்லு என்றார்.

ம்... கேளுங்க என்றான் முருகு

கொல்லிமலை எங்கிருக்குது?

நாமக்கல் மாவட்டத்தில்

கொல்லிமலைக்கு கொல்லிமலைன்னு ஏன் பேர் வச்சாங்க?

நான் இதைப் பற்றி சிந்திக்கவில்லையே, கொல்லிமலையில் அழகு கொட்டிக் கிடக்குதுன்னு சொல்லுவாங்க. நான் படித்தும் இருக்கேன். இயற்கை அழகு கொஞ்சும் அம்மலையில் கொல்லிப்பாவை என்னும் சாமி இருப்பதாக கூறுகிறார்கள் அதுதானோ!

அப்படியெல்லாம் இல்லை தம்பி. அந்த மலையில் சில கொடிகள் இருக்கு. அதெல்லாம் விஷச் செடிங்க. அது மனிதனைக் கொல்லக் கூடியதாம். அதனோட தழையை தெரியாம வாயில வெச்சுட்டா உடனே கொன்னுடுமாம். அதனால் அதற்கு கொல்லிமலைன்னு பேர் வந்ததா சொல்றாங்க.

ஓ அப்படியா! என்று வியப்புடன் கேட்டு கொண்டு தன் காரியத்தில் ஈடுபட்டான்.

ஒரு இடத்தில் பள்ளிச் சீருடையை அணிந்து கொண்ட ஒரு சிறுமி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள்.

என்னம்மா ஸ்கூலுக்கு போகலையா?

இல்லை

ஏன்?

நாலு ஆடு எங்கம்மா வாங்கியாந்தது. அதை மேய்க்கிறேன்.

படிப்பு கெட்டுப் போகும்ல

எனக்கு ஆடு மேய்க்கிறதுதான் பிடிச்சிருக்கு.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் நடந்தான் முருகு. இதுபோல பல காட்சிகளைக் காண நேர்ந்தது. இது என்ன கொடுமை. பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லும் -குழந்தையை கண்டித்து பள்ளிக்கு அனுப்பாமல் இப்படி ஆடுகளை மேய்க்க விட்டிருக்கிறார்களே! என்று சிந்தித்தபடி நடந்தான்.

தன்னுடைய வேலையை முடித்து வைத்துக்  கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தான். அப்பொழுது தாயம்மா எதிரில் வந்தாள். நான்கு ஆடுகளை ஓட்டிக் கொண்டு வந்தாள். முருகைப் பார்த்தவுடன் என்ன அய்யா வந்த வேலையெல்லாம் முடிஞ்சுதா

போகிட்டே இருக்கு

இதுகளை வெச்சுகிட்டு வேலைக்கு போக முடியல. பகல்ல மத்தியானம் கொஞ்ச நேரம் தலை சாய்க்க முடியல. பக்கத்து வீட்டு அக்கா எல்லாரும் உட்கார்ந்து பேசுவோம். எல்லாம் போச்சு ம்... என்ன செய்ய?

முருகு சிரித்துக்கொண்டே நடந்தான்.

மறுநாள் பார்க்கும்போது தாயம்மாவின் மகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் அல்ல இன்னும் பல சிறுவர் சிறுமியர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.

என்ன பள்ளிக்கூடத்துக்கு போகாம ஆடு மேய்ச்சுட்டு இருக்கீங்க?

நாங்க ஸ்கூலை விட்டு நின்னுட்டோம். ஆத்தாவும் அப்பாவும் சொந்தக்காரவுகவூட்டு விசேசத்துக்குப் போயிருக்காங்க. ஆடு மேய்க்க ஆளில்லாம எங்களை மேய்க்கச் சொல்லிட்டாங்க என்றனர். ஒரு சிறுவன் அழுது கொண்டிருந்தான்.

அவனிடம் முருகு கேட்டபோது அவனுக்கு பள்ளிக்கூடம் போக ஆசை என்றும் ஆனா எங்க அம்மா ஆடு மேய்க்கச் சொல்லிருச்சு என்றும் வருத்தத்துடன் கூறினான்.

ஆராய்ச்சியின் முதல் பகுதியை முடித்துவிட்டு தன் ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தார் முருகு. அக்கிராமத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் இதேபோல் மற்ற கிராமங்களிலும் இப்படித்தானே நடக்கும் என நினைத்தபோது குலக்கல்வி திட்டம் மீண்டும் வந்துவிடுமோ! என்று பயந்தான்.

0 comments:

Post a Comment

 
TOP