Loading...
Thursday, 18 July 2013

உயிர் ஊசலாடிய நிமிடங்கள் (சிறுகதை)

மத்திய லண்டனை நோக்கி பேரூந்து சென்று கொண்டிருந்தது. அருகே அமர்ந்திருந்த தங்கையின் கடி தாங்க முடியவில்லை. "அக்கா இப்ப இந்த பஸ்ஸில குண்டிருந்தா நாங்கள் காலி" என்று நகைச்சுவையாக பேச்சை ஆரம்பித்தவள். "அது சரி உந்த கிபீர் பொம்பர் எல்லாத்திலையும் இருந்து தப்பி வந்து எவனோ ஒருத்தன் எதுக்காயோ வைக்கிற குண்டு வெடிச்சு சாகோணுமே". துக்கம் கலந்த ஒரு தொனியில் ஒலித்தது மீதிவார்த்தைகள்.


சிரிப்பு வரவில்லை! சிரிக்கவும் முடியவில்லை "கவலைப்படாதேடி இத்தனை கண்டங்களை தாண்டி வந்தனாங்கள் இப்படி அற்பமாய் போக மாட்டம், அதுவும் நீ போக மாட்டாய் சத்தம் போடாத சனம் தப்பாய் நினைக்கப்போகுதுகள்". என்று மெல்ல அவளை சமாதானப்படுத்தினேன். இன்னும் அவளிற்கு கிபீர் எல்லாம் நினைவில இருக்கே, அது சரி எப்படி மறக்கமுடியும் அந்த நாட்களை.

அப்போது எனக்கு பத்து பதினைஞ்சு வயசிருக்கும், நல்லாய் நினைவிருக்கு ஒவ்வொரு நாளும் கிபீருக்காக பயந்து ஓடியிருக்கிறம் இப்ப நினைச்சாலும் மனசில என்னவோ செய்யும். சாதாரனமாய் எல்லாருக்கும் காலை விடியும், விடிஞ்சு பள்ளிக்கூடம் போய் காலை ஒன்று கூடலுக்காய் கூடியிருப்போம், சிலநேரம் அந்த நேரம் நாசமறுப்பான் (கிபீர்) வருவான் விழுந்து கிடவுங்கோ எண்டு மாணவர் தலைவர்கள் சொல்ல பிள்ளைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடுங்கள் காரணம். சனநெருக்கமான இடத்தில தான் அடிப்பாங்கள், காடுகள் வழிய போய் தனியாய் மறைஞ்சிருந்தா அடியாங்கள் என பெற்றோரின் அறிவுறுத்தலாய் கூட இருக்கலாம்.

(வெள்ளை சீருடை பளிச்சென்று தெரியும் அல்லவா?) நான் கூட அப்படி ஓடியிருக்கிறேன் அதை எப்படி மறக்க முடியும் நல்லா நினைவிருக்கு. வன்னியில எங்கள் பாடசாலை மைதானம் பின்னால் இருந்த பெரிய காட்டை அழிச்சு உருவாகிக்கொண்டிருந்தது. அந்தக்காட்டுக்குள் தான் ஓடுவோம் முட்கள் காலைக்கிழிக்கும் நோக்கூட அறியமாட்டம். அவன் போயிட்டான் என்று தெரிஞ்சாப்பிறகு தான் காலில முள்ளுக்கிழிச்ச காயம் தெரியும்! ரத்தம் வழியிறது தெரியும்! இப்படி எத்தனை நாள்.

அன்று முட்கள் கிழிச்ச காயங்கள் தழும்புகளாக இன்னும் கால்களில இருக்கு அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ள ஒரு ஞாபகச்சின்னமாய்!. இன்னும் எத்தனை பேருக்கு கை, கால் இல்லாமல் போயிருக்கும். அதிகமாய் மத்தியான நேரம் வருவான். அதுவும் இடைவேளை நேரம் எங்கட சாப்பாட்டில மண்ணைப்போடத்தான் வருவான். எத்தனை நாட்கள் திட்டியிருப்பம் இந்த ஆங்கிலப்பாடநேரம் வாறதுக்கு உனக்கு என்னடா என்று.

 எங்கையோ குண்டு போட்டிட்டு அவன் போக இண்டைக்கு நாங்கள் தப்பிச்சம் என்று நாங்கள் மகிழ்ந்திருக்க. "எங்கோ ஒரு மூலையில கண்டிப்பாக செத்தவீடு நடக்கும். செத்த உயிருக்காய் கவலைப்படுறதா? தப்பின எங்களை நினைச்சு சந்தோசப்படுறதா?" விதி அப்படி விளையாடினது. "நெருப்பு மழையே வந்தாலும் ஒருநாளும் எங்கள பள்ளிக்கூடம் போகாமல் நிக்கச்சொல்லி அம்மா சொல்லமாட்டா. நாங்களும் நின்றதில்லை.

 "எங்க செத்தாலும் சா தானே இங்க வாறது அங்க வராதா?" வாண்டுகளாய் நாங்கள் 5 பேர் அப்ப எங்களக்கு அம்மா சொன்ன அறிவுரை, எல்லாரும் ஒரு இடத்தை போய் நிக்கோணும் ஓடினாலும் சரி விழுந்தாலும் சரி ஒன்றா செய்யுங்கோ என்று சொல்லுவா. வீட்டிலை நிண்டாக்கூட 5 பேரையும் இழுத்துக்கொண்டு போய் ஒரு மரத்திற்கு கீழ வைச்சிருப்பா கூட்டமாய் நில்லாதேங்கோ என்று மற்றவை பேசுவினம் எங்களுக்கு கிட்ட வராயினம்.

ஆனா அம்மா சொல்லுவா "செத்தால் எல்லாரும் சேந்து சாவம், நான் இல்லாமல் பிள்ளையளும் பிள்ளையள் இல்லாமல் நானும் என்ன செய்ய முடியும்" என்பார், எல்லாரையும் சுத்தி இருக்க சொல்லிப்போட்டு அம்மா அணைச்சுக்கொண்டிருப்பா. அப்படி வாழ்ந்தனாங்கள், இரண்டு இரண்டரை வருசம் இப்படியே இருந்தனாங்கள். அந்த எமனிட்ட இருந்து தப்பிறது உண்மையா சின்ன விசயம் இல்லை.

 வழமையா ஆமிக்கு ஏதாவது இழப்பு என்றா எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் சிலசமயங்கள் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வித்துடல்கள் கொண்டு வருவார்கள், அந்த நேரம் மனம் கனதியாக இருந்கும். இப்படித்தான் கட்டுநாயக்கா விமான நிலையம் தாக்குதலின் போது விமானங்கள் அழிக்கப்பட்ட செய்தியைக்கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில ஆரவாரிச்ச ஆயிரம் ஆயிரம் தமிழர்களில நானும் ஒருத்தியா இருப்பன்.

சிறுக சிறுக எங்களை தினம் தினம் கொலை செய்த அரக்கர்கள் அழிஞ்ச, அழிக்கப்பட்ட நாள் அதுவல்லவா உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு ஊசலாடிய அந்தக்கணங்களை யாரால மறக்கமுடியும். அநுபவிச்ச யாருக்கும் உயிருள்ளவரை மறக்காது . அந்த அரக்கனிட்ட ஒருநாளா, இருநாளா எத்தனையோ நாட்கள் தப்பினம்.

அங்க அவங்கள் எங்கள அழிக்க குண்டு போட்டாங்கள் தப்பித்தப்பி வந்தம் இங்க வந்து சம்பந்தமே இல்லாமல் சாகடிக்கப்படுவமா என்ன? நினைச்சுப்பார்க்கவே கண்கள் கலங்கியது. "என்ன அக்கா கிபீரையும் பங்கரையும் நினைச்சிட்டியே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திட்டுது வா வா" என்ற தங்கையின் குரல் என்னை மறுபடி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மெல்ல வண்டியை விட்டு இறங்கினோம்.

 " அப்பாடா பிள்ளையாரை நேந்து கொண்டிருந்தனான் ஒண்டும் நடக்க கூடாது எண்டு போய் ஒரு தேங்காய் உடைச்சுப்போடு" என்றவளை பாத்து சிரிப்பு வந்தது பத்திரமாய் இறங்கிய சந்தோசத்தினாலோ?.

0 comments:

Post a comment

 
TOP