இப்போ போய் ஜாதகம், தோஷம், மாங்கல்ய பலம்னு. ச்சே.. என்ன மயிருக்கு அந்த ஜோசியக்காரனை போய் பார்த்தாங்க? அந்த நாதேறி மட்டும் என் கையில கெடைச்சான்.. கடைசி நேரத்துல அவள் குடும்பத்தினரையும் குழப்பி அவளையும் குழப்பி. அனிதா ஒன்றும் விவரம் இல்லாதவள் இல்லையே. எப்படி இதை நம்பினாள் என்று புரியவில்லை. ம்ம்ம்… என்னை கல்யாணம் செய்தால் நான் இறந்துவிடுவேன் என்று சொன்னால் யார் தான் பயப்படமாட்டார்கள்? பாவம் என் அனிதா. மனதளவில் எவ்வளவு கஷ்டம் அவளுக்கும். எப்படி இந்த சூழ்நிலையில் என்னிடம் அவளால் பேச முடியும்.
ப்ளாஸ் பேக்:
அனிதா. என் வாழ்கையை புதுப்பிக்க வந்தவள். அவளை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். கோயமுத்தூரில் உள்ள எங்கள் வீட்டிற்கு பக்கத்து தெரு தான் அவர்கள் குடும்பமும். அவள் அக்கா ஜோதிக்கு என் வயதுதான். நாங்கள் வேறு பள்ளிகளில் படித்தாலும் எப்பொழுதாவது படிப்பில் சந்தேகம் இருந்தால் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம் கேட்பாள். நானும் எனக்கு தெரிந்தவரை அவளுக்கு உதவி இருக்கிறேன். . நான் படிப்பில் சூரப்புலி இல்லையென்றாலும் என்னை விட அவள் நிஜமாகவே மக்காக இருந்ததினால் அது சாத்தியமாயிற்று.
ஒவ்வொரு முறை அவள் அக்கா என் வீட்டிற்கு வரும்போது அனிதாவையும் துணைக்கு தன்னுடன் அழைத்து வருவாள். அப்படிதான் அனிதா எனக்கு பரிட்சயம். அப்போ ரொம்ப குட்டி பெண் அவள். என்னைவிட ஐந்து வருடம் சிறியவள். அண்ணா, அண்ணா என்று மடியில் வந்து உட்கார்ந்து விளையாடுவாள். பிற்காலத்தில் அந்த அண்ணனை தான் அவள் கல்யாணம் செய்துகொள்ள போகிறாள் என்று அவளுக்கு அப்போது தெரியாது. தெரிந்திருந்தால் அண்ணா என்று அழைத்திருக்கமாட்டாள். கடைசியாக அவளிடம் பேசியபோது போது கூட இதை சொல்லி இருவரும் சிரித்துக்கொண்டோம். ்
சிறுவயதில் அவளை கொஞ்சி இருக்கிறேன். அவளிடம் விளையாடி இருக்கிறேன். அது ஒரு அழகிய நிலாக்காலம். நாட்கள் தான் ஜெட் வேகத்தில் ஓடுகிறதே. அதன் பிறகு இன்ஜினியரிங் சென்னையில் சேர்ந்தேன். ஆச்சரியத்தக்க வகையில் எனக்கு படிப்பில் ஈடுபாடு அதிகமானது. ஒரு கேர்ள் ப்ரெண்டும் கூட எனக்கு செட் ஆகாமல் போனது தான் அதற்கு முக்கிய காரணம். காதல் படத்தில் வரும் அந்த விரிச்சககாந்த் உருவத்தில் இருப்பவனுக்கு கூட அதே படத்தில் வரும் சந்தியா போன்ற பெண்களை கரெக்ட் செய்து பைக்கில் ஏற்றி செல்லும் திறமை கடைசிவரை எனக்கு கை கூடி வரவில்லை. ஆனால் ஒரு வகையில் எனக்கு நல்லது அது தான்.
இன்னும் என்னுடன் படித்தவர்கள் பலர் வேலைக்கே திண்டாடிகொண்டு இருக்க எனக்கு படித்துமுடித்ததும் பெங்களூரில் கூகிள் கம்பெனியில் வேலை.. என் கனவு வேலை அது. பின்னே உலகின் தலை சிறந்த நிறுவனம் ஆயிற்றே. கை நிறைய சம்பளம். பிசியான வாழ்க்கை. கட கடவென வருடங்கள் ஓடியது. நமக்கும் வயசாகிறது என்று வீட்டில் கல்யாண பேச்சு வரும்போது தான் நம்மால் உணரமுடிகிறது. ஒரு விடுமுறை தினத்தில் கோயமுத்தூரில் வீட்டிற்கு சென்றபோதுதான் நானும் அதை உணர்ந்தேன்.
“அதான் அந்த பாண்டியன் சின்ன மவ அனிதா இருக்காள்ள. இப்போதான் காலேக் படிச்சு முடிச்சி இருக்கா. பாக்க ரொம்ப லட்சனாமா இருப்பா. ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட கோவில்ல அவங்க அம்மாவை பார்த்தேன். நம்ம அருணுக்கு அவளை குடுக்க அவங்களுக்கு விருப்பம் இருக்கு போல “ என்றார் அம்மா.
“இவனுக்கும் வயசாச்சி. அந்த ஜாதகத்தை வாங்கியாந்து பாரு. நல்ல குடும்பம் தான். ஜாதகம் ஒத்து வந்தா சட்டுபுட்டுன்னு கல்யாணத்த முடிச்சிடலாம்.” என்று அதற்கு ஆமோதித்தார் என் அப்பா.
வீட்டில் என்னுடய அறையில் இருந்து இந்த உரையாடலை கேட்க்கும்போது எனக்குள் ஒரு புது வித உணர்வு. அதுவரை தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த எனக்கு துணை தேடுகிறார்கள் என்றதும் ஒரு இனம் புரியா சந்தோசம். அப்போ இனிமேல் என் உலகத்துக்குள் என்னைத்தவிர இன்னொருவரும் வரப்போகிறார். என்னை முழுநேரம் கொஞ்சுவதற்கும் தேவைப்படும்போது திட்டுவதற்க்கும் ஒருவர். அடடா. என் தனிமை சுகத்தை பகிர்ந்துக்கொள்ள வரப்போகும் அந்த பெண் யார்? “. அவள் பெயர் என்ன. அவள் எப்படி இருப்பாள்? ஆர்வம் தாங்காமல் அப்பா இல்லாத போது அம்மாவிடம் கேட்டே விட்டேன்.
நீ ஸ்கூல் படிக்கும்போது உன்னையும் ஒரு ஆளா மதிச்சி உன்கிட்ட படிப்ப பத்தி பேச நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வருமே. . அதாண்டா நம்ம ஜோதி… பக்கத்துக்கு தெருவுல இருக்காங்களே.
ஐயோ, அம்மா. .. அவளா?!! அது மொக்க பிகருமா. ஆறு மாசம் முன்னாடி கூட குமாரு கல்யாணத்துல பார்த்தேன். அதுமட்டும் இல்லாம என்னோட அஞ்சாறு மாசம் அவ பெருசுனு கூட நினைக்கறேன்.
டேய்.. ரொம்ப பேசாதடா.. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம். ஆகுது. அன்னைக்கி அவ கூட அவன் புருஷன் இருந்திருப்பான். அத கூட கவனிக்காம என்னத்த பார்த்தயோ. நான் அப்பாகிட்ட பேசுனது அவ தங்கச்சி அனிதவைா.:”
ச்சீ போ..மா… உனக்கு வேற வேலையே இல்ல என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கு வெட்கப்படதெரியும் என்று எனக்கே அப்போது தான் தெரியும். ஆனால் அம்மா சொன்னது போல் நான் கனவில் தான் இருந்தேன். கனவில் மிதந்துக்கொண்டு இருந்தேன். அனிதா சிறுமியாக இருந்த உருவத்தை நினைத்து இப்போது எப்படி இருப்பாள் என்று கற்பனை செய்துப்பார்த்தேன். ம்ம்.ஹூம்.. அதே குழந்தை முகம் தான் நியாபகம் வந்துப்போனது. இப்போ அவள் எப்படி இருப்பாள்? இன்னும் அதே மாதிரி துருதுருவென்று இருப்பாளோ? எப்படி அவளை பார்ப்பது?
இன்னமும் என்னால் நம்பமுடியவில்லை. பக்கத்து தெருவில் இருந்த ஒரு வயசுப்பெண்ணை இத்தனை நாளாக எப்படி பார்க்காமல் தவறவிட்டோம். நமக்கு தெரியாமல் நம்ம ஏரியாவில் ஒரு பிகரா? சரிதான். நான் சென்னையில் கல்லூரி படிக்கசென்று, பெங்களூரில் வேலைக்கு சென்ற அந்த சில வருடங்களில் தான் அவள் வயசுக்கே வந்திருப்பா. சின்ன பொண்ணு இப்போ வளந்துடிச்சு. இந்த அருணுக்குகாக இப்போ காத்து இருக்குது. உள்ளம் குதூகலித்தது.
“டேய்.. இன்னும் பொண்ணு பார்க்கவில்லை, வெறும் யோசனை தான் அது. அதனால கற்பனையில் மிதக்க வேண்டாம்டா “என்று அம்மா சொன்னது நியாபகம் வந்துப்போனது. ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு மேற்கொண்டு புலன் விசாரணையில் இறங்காமல் மறுநாள் வேலைக்கு பெங்களூர் சென்றுவிட்டேன்.
ரெண்டு நாள் தாக்குப்பிடித்தேன் முடியவில்லை. என் தெருவில் இருக்கும் ஒரு நண்பனுக்கு அதே வாரத்தில் போன் போட்டு விசாரித்தேன்.
“சூப்பரா இருப்பாள் மச்சா.. நான் கூட அவளை நெறையவாட்டி ரூட்டு விட்டு பார்த்தேன். ஆனா அவ மசியவே இல்ல. படிச்சிட்டு இப்போ வீட்ல தான் இருப்பா போல. எவனுக்கு அவல கட்டிக்கற பாக்கியமோ தெரியல. அதுசரி ஏன்டா கேட்கற?”
“எனக்கு அவளை பொண்ணு பாக்கறாங்க! “
எதிர்முனை கப்சுப். அவன் பெயர் சுதாகர். சிறுவயதில் என்னுடன் ஸ்கூலில் படித்தான். எவ்வளோ தூரம் சொல்லியும் கல்லூரி சேராமல் அவங்க அப்பாவோட மளிகை வியாபாரம் பார்த்துக்கொண்டு இருக்கறான். அப்போ அப்போ எனக்கு மொக்கை ஜோக்கா எஸ்.எம்.எஸ் அனுப்பிக்கொண்டு இருப்பான். இப்பவும் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.
“சோறின்றி வாழ்ந்தாலும் வாழ்வார் மனிதர்
பிகரின்றி வாழ்வது அரிது.”
என்று வள்ளூவர் அப்போவே சொல்லி இருக்காரு மச்சான். என்னை மன்னிச்சிடு. அனிதா எனக்கு இப்போ தங்கச்சி மாதிரி டா. “ என்று என்னை சமாதனம் செய்ய முயற்சித்தான்.
ஆனால் எனக்கு அவன் மேல் சுத்தமாய் கோபமில்லை. அவளை பற்றி யாரிடம் கேட்பது என்று அலைந்த போது அவளைப்பற்றி கிடைத்த ஒரு முக்கிய செய்தி இது. அவனிடம் பேசிய பிறகு, இன்ஜினியர் இன்றி, கொத்தனார் இன்றி, மிகவும் பிரம்மாண்டமாய் எனக்குள் காதல் கோட்டை எழும்பிக்கொண்டு இருந்தது.
அந்த முக்கியமான நாள் வந்தது. அனிதா வீட்டிற்கு என் அம்மா அன்று செல்வதாய் சொன்னார்கள். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பத்து நாள் ஆனாலும் நானாக அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இதுவரை போன் போட்டதில்லை. அவர்களாக எனக்கு போட்டால் தான் உண்டு. ஒவ்வொருமுறையும் “ஒரு போன் போட்டா என்னடா அருண் “ என்று தான் அம்மா ஆரமிக்கும்.
“சாருக்கு இன்னைக்கு ரொம்ப பாசம் பொங்குது போல. காலைல இருந்து போன் மேல போன் போட்டுட்டு இருக்க.”
“இல்லம்மா. சும்மா தான். எங்க இருக்க? “
“இப்போ தான் அனிதா வீட்டுல இருந்து வரேன். “
“வாவ்.. ஜாதகம் பாத்தியா? அவங்க வீட்ல என்ன சொன்னாங்க? அப்புறம்…. உன் மருமவ புள்ள பாக்க எப்படி இருக்கா? உன்னை மாதிரி அழகா இருக்காளா? போட்டோ வாங்கினியா? “
“அதான பார்த்தேன்… மொச புடிக்கிற நாய மூஞ்ச பார்த்தா தெரியும்டா.”
“ஹி ஹீ. அது இல்லம்மா… எனக்காக இல்லைன்னாலும் உனக்கு ஒரு அழகான மருமவ அமைஞ்சா எனக்கு அது போதும்மா.”
“ரொம்ப வழியுதடா”
“ஐயோ அம்மா.. அங்க என்ன ஆச்சுன்னு சொல்லு.”
“நமக்கு ஜாதக பொருத்தம் அருமையா இருக்கு. அவங்களுக்கும் நம்மக்கு கொடுப்பதில் விருப்பம். ஜாதகம் பார்த்துட்டு சொல்றதா சொல்லி இருக்காங்க. உன்னோட போட்டோ எதுனா இருந்தா அனுப்புடா. அவங்களுக்கு கொடுக்கனும். ஒழுங்கா லட்சணமா .மீசை இருக்கற போட்டோவா பாத்து அனுப்பு.”
“சரி அனுப்பறேன். அனிதா இருந்தாளா?”
“இருந்தாடா.. அப்படியே கைய புடிச்சு நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம்னு தோனுச்சுடா அருண். எனக்கு அவளை அவ்வளோ புடிச்சிருக்குடா.”
“ஓ. அவ போட்டோ இருக்கா?”
“போட்டோவ கேட்டேன். அவ லேப்டாப்ல தான் இருக்கு வேணும்னா மெயில் அனுப்பறேன்னு சொன்னா.”
“ஐயோ.. என் மெயில் ஐடி கொடுக்க வேண்டியது தானா? நீ ஒரு மங்குனிமா. அத சொல்லி இருக்க மாட்டியே..”
“டேய். வந்தனா பல்லை தட்டிடுவேன். நான் உன் அம்மாடா. உன்னை பத்தி எனக்கு தெரியாதா… கூடவே ஒக்காந்து உன்னோட ஈமயிலுக்கு போட்டோ அனுப்ப வச்சிட்டுதான் வந்தேன். ஒரு அரைமணி நேரம் முன்னாடி தான் அனுப்பினோம்.. இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். பாத்துட்டு சொல்லுடா. “
“சரி சரி போனை வை” என்று கட் பண்ணிவிட்டு அவசர அவசரமாக மெயில் ஓபன் செய்து பார்த்தேன்.. அனிதா பாண்டியன் என்ற பெயரில் மெயில் வந்திருந்தது. கூடிய சீக்கிரம் அனிதா அருண் என்று மாத்திவிடுகிறேன் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். எனது க்யுபிகலில் யாரும் இல்லை என்றாலும் சுத்தி முத்தி பார்த்துக்கொண்டேன். ஒரு மெயிலை திறப்பதற்கு நான் இத்தனை வித்தை செய்ததில்லை. கிளிக் செய்து பார்த்தால் அது ஒரு பிளான்க் மெயில். போட்டோவும் இல்லை ஒன்னும் இல்லை. ச்சை.. அனிதா என்னை ஏமாற்றி விட்டாள்.
எனக்குள்ளே சிரித்துக்கொண்டேன். இன்னமும் அனிதா கொஞ்சமும். மாறவில்லை. . போட்டோ அட்டாச்மென்ட் மிஸ்ஸிங் என்று அவளுக்கு மெயில் அனுப்பினேன். முதலில் உங்கபோட்டோவை அனுப்புங்க, அதுக்குள்ள என்னோட போட்டோவை கேட்டா எப்படி என்று உடனே அவளிடம் இருந்து பதில் மெயில் வந்தது. என்னிடம் இருப்பதிலேயே சிறந்த புகைப்படம் மூன்றை தேர்வு செய்து உடனே அனுப்பினேன். ஏதாவது ஒன்றிலாவது சுமாராக இருக்க மாட்டேனா என்ற நப்பாசை தான். ஆனால் இரண்டு மணிநேரமாகியும் அப்போதும் அவளிடம் இருந்து போட்டோ வரவில்லை. நான் விடவில்லை.. இந்த காலத்தில் மொக்க பிகர் கூட ஓவரா பன்னுவாளுங்க. இவ ரேஞ்சுகு இது கூட பண்ணலேன்னா எப்படி என்று மனதை தேத்திக்கொண்டு மீண்டும் மெயில் அனுப்பினேன். ஒருவழியாக அவளை சேட்டில் பிடித்தேன். நல்ல போட்டோ ஏதும் இப்போ இல்லை விரைவில் அனுப்பிறேன் என்று மழுப்பினாள்.
அடுத்து இரண்டு நாட்களும் சேட்டிலே பேசிக்கொண்டோம். சிநேகம் வளர்ந்தது. நம்பிக்கை பிறந்தது. அனிதா என்ற பிசாசு உடலெங்கும் முழுதாய் ஊடுருவிக்கொண்டு இருந்தது. ஆபிசில் வேலை ஓடவில்லை. இரவில் சரியாக தூக்கமும் இல்லை. சோறும் இறங்கவில்லை. இதுவரை எந்த பெண்ணையும் இப்படி முழுநேர தொழிலாய் நான் சிந்தித்துக்கொண்டு இருந்ததில்லை. ஒரு பெண் உள்ளே வந்துவிட்டால் எவ்வளோ கஷ்டம் என்று அப்போது தான் புரிந்தது. என இதயப்பூந்தோட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் ஊற்றி காதல் செடி வளர்த்தாள் அவள். பட் மூன்றாவது நாள் அதற்கு பலன் கிடைத்தது. ஒருவழியாக அவள் போன் நம்பரை வாங்கிவிட்டேன். கடவுளின் விலாசம் கிடைத்த பக்தனாய் பரவசமடைந்தேன். போனை போட்டேன்.
“ஹலோ.. “
முதன் முறை அவள் குரலை கேட்க்கிறேன். ரெண்டு பீரை பாட்டம் ஸிப் அடிச்ச மாதிரி ஜிவ்வென்று இருந்தது.. “நான் அனிதா பேசறேன்… சாரி.. அருண் இருக்காங்களா?.. ஆஹ்…. நான் அருண் பேசறேன்.. ”. முதல் பேச்சிலேயே பயங்கரமாய் சொதப்பினேன். அவள் சாதரணமாய் தான் பேசினாள். பரஸ்பரம் விசாரிப்புக்குப்பின் நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன்.
“அனிதா, ஏன் உன்னோட போட்டோவை கடைசி வரை நீ அனுப்பவே இல்லை.”
“இப்போ எதுக்குங்க போட்டோ லாம். “
“உன்னை சின்ன வயசுல பார்த்தது தான். இப்போ எப்படி இருபன்னு கூட தெரியல. என்னோட போட்டோ பாத்துட்டு கூட நீ ஏதும் சொல்லவில்லை? எங்க வீட்ல உன்ன பொண்ணு கேட்டிருக்காங்க உனக்கு தெரியுமில்ல. அப்புறம் என்ன பிரச்சனை.”
“தெரியும்,,, ஆனா இப்போ வேணாம்ங்க.”
“சரி. வேணும்னா ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அனுப்பு. நான் வெயிட் பண்றேன்.”
“ஐயோ வெளயாடாதீங்க. ப்ளீஸ் பி சீரியஸ். எனக்கு இப்போ கல்யாணம் வேனாம்ங்க. சொன்னா புரிஞ்சிக்க ட்ரை பண்ணுங்க.”
“அட கடவுளே.. … ஏன்..? என்னை புடிக்கலையா?”
“அப்டி இல்ல. பட்.”
“என்ன பட்?.. உங்கவீட்ல இதுல சம்பந்தம் இல்லையா?”
“அது இல்லைங்க… நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருக்கேன். காலேஜுல என்னோட சீனியர் அவர். இப்போ சென்னையில் வேலை செஞ்சிட்டு இருக்கார். அடுத்த மாசம் எனக்கு டீ.சி.எஸ் கம்பெனியில் சாப்ட்வேர் வேலை. நானும் சென்னை போயிடுவேன். அங்க போனதும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கோம். இது தான் காரணம்.”
“எனக்கு ஒரு நிமிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தலையே சுத்த ஆரம்பிப்பது போல் ஆயிற்று. இதயம் படத்தில் முரளி பாடும் அந்த சோக பாடல் ஏதோ நினைவிற்க்குள் வந்து போனது. வார்த்தைகள் வரவில்லை. அமைதியானேன்.”
“ஹலோ.. லைன்ல இருக்கீங்களா?”
“ம்ம்ம். இருக்கேன்.” உடைந்து போயிருந்தேன்.
“அயம் சாரி.. உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா. “
“தட்ஸ் ஓகே. தேங்க்ஸ் பார் லெட்டிங் மே நோ. இது உங்க அம்மாவுக்கு தெரியுமா?”
“அம்மாவுக்கு மட்டும் தெரியும். அவங்களுக்கு இஷ்டம் இல்லை. பட் கன்வின்ஸ் பண்ணிட்டேன்”.
கோபத்தில் போனை வைத்தேன்.
எஸ்.எம்.எஸ் அனுப்பினாள். “சாரி.. உங்களை கஷ்டப்டுத்தி இருந்தால் மன்னிக்கவும்”. “கடைசி வரைக்கும் உங்களுக்கு நல்ல ப்ரெண்ட் ஆக இருப்பேன்” அவளுடைய எல்லா மெசேஜும் எனக்கு டெம்ப்ளேட் மெசேஜாக தான் தோன்றியது. அவளுக்கு ப்ரெண்ட் ஆகா மாறி அவளுடைய ரெஜிஸ்டர் மாரேஜிக்கு கையெழுத்து போட்டுவிட்டு “எங்கிருந்தாலும் வாழ்க” பாடிவிட்டு வரும் முட்டாளாக நான் இருக்க விரும்பவில்லை.
அம்மாவுக்கு போனை போட்டேன்.. “லவ் பண்ணினா வீட்ல சொல்லி தொலைய வேண்டியது தான. வீட்ல மாப்பிள்ளை பார்க்க விடாமல் பண்ணி இருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமா? என் மனசுல ஆசை காட்டிவிட்டு ச்சே… கடவுள் என்னை மட்டும் ஏன் இப்படி சோதிக்கிறான்.” என் புலம்பல் அம்மாவுக்கு முதலில் புரியவில்லை. அப்புறம் அவங்களுக்கும் அது அதிர்ச்சி அளித்தது
“சரி விடுடா. உனக்கு என்ன குறைச்சல்.. உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணை பார்த்து அவளுக்கு முன்னாடி உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேன்” என்று சொன்ன அம்மாவின் குரலில் சக்தியில்லை.
என்னை விட அம்மாவிற்கு அனிதா ரொம்ப பிடிக்கும். நான் தான் அவளை பார்த்ததில்லையே தவிர அம்மா விற்கு அவள் பழக்கம் தான். அவங்க வீட்ல மாப்பிள்ளை கேட்டவுடன் அதிகம் சந்தோசப்பட்டது அவங்கதான். ஜாதகம் பொருந்தி வந்தவுடன் என்னை விட அதிகம் கனவு கண்டதும் அவங்கதான்.
அதன் பிறகு அனிதாவுடன் பேசவில்லை. அவர்கள் வீட்டில் இருந்தும் தகவல் ஏதுமில்லை. அவளிடம் இருந்து முற்றிலும் விலகி இருந்தாலும் கடல் அலைபோல் ஞாபகங்கள் சிலசமயம் வந்து நெஞ்சில் மோதிக்கொண்டு தான் இருந்தது. எனக்கே தெரியாமல் அவளை நான் காதலித்து இருந்தேன். இன்னும் கொஞ்சநாளில் சரி ஆகிவிடும் என்று அந்த வலிகளை பொறுத்துக்கொண்டேன்.
“எம்மா எம்மா காதல் பொன்னம்மா..”.. “அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல” போன்ற பாடல்களே எனக்கு மருந்தாயின. மூன்று மாதம் நான் கோவை செல்லவே இல்லை. செல்லவும் மனம் வரவில்லை.
ஒரு நாள் அம்மாவிடம் இருந்து போன் வந்தது. “அனிதாவோட அம்மா வீட்டுக்கு வந்தாங்கடா… “
“என்ன சொல்ற? அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல. இப்போ என்னவாம்?”
“அவங்களுக்கு ஜாதகம் பொருந்தி வருதாம். மேற்கொண்டு பேசலாம்கர மாதிரி சொன்னாங்கடா. இவ்வளோ நாள் எதுமே பேசல.. இப்போ திடீர்னு… எனக்கு என்ன நடக்குதுனே புரியலடா.”
“நம்மளை முட்டாள்னு நினைச்சிடாங்களா?” எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. அனிதாவை கண்டபடி திட்ட வேண்டும் போல் இருந்தது. அவள் நம்பரை எப்போதோ மொபைலில் இருந்து அழித்திருந்தேன். அவள் அனுப்பிய இமெயிலில் அதை மீண்டும் தேடி பிடித்து போனை போட்டேன்.
“ஹலோ… அருண்?”
“எஸ்.. இன்னும் ஞாபகம் இருக்கா?” நான் யோசித்து வைத்திருந்த அத்தனை கேட்டவர்தைகளையும் சொல்லிவிட வாயை திறந்தேன்.
எதிர் முனையில் அழுகை சப்தம்…
“ஹே…. அனிதா.. “
“……..”
“அழறியா?”
“ம்ம்….”
“என்ன ஆச்சு?”
“ஒரு ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நீ என்னை பாத்திருக்க கூடாதா? எனக்கு நீ ப்ரோபோஸ் செய்து இருக்க கூடாதா?”
“கமான் அனிதா.. எனக்கு ஒன்னும் புரியல..”
தேம்பித்தேம்பி அழுதாள். எனக்கு சங்கடமாக இருந்தது. மவுனமானேன். சில நொடிகளில் அவளே பேசத்தொடங்கினாள்.
“என்னோட லவ் பிரேக் அப் ஆயிடுச்சு அருண். எல்லாம் முடிஞ்சிடுச்சு. ரெண்டு பேருக்கும் ஒத்துவரலை. சண்டை போட்டு பிரிஞ்சாச்சு.”
“எப்போ?”
“இப்போ தான் ஒரு வாரம் ஆகுது.”
“ஏன் சொல்லலை?”
“நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ண போறோம்னு உங்ககிட்ட சந்தோசமா சொன்னேன். இப்போ இதை எப்படி சொல்றதுன்னு தான்…”
அவளை எப்படி தேற்றுவது என்று புரியவில்லை. அவள் மேல் ஆசை வைத்து கொஞ்ச நாளில் அவள் இல்லையென்றதும் என்னாலேயே அது தாங்கமுடியவில்லை. . இரண்டு வருடம் லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போய்விட்ட அவள் காதல் உண்மையிலேயே பெரிய ரணம் தான். அவள் மேல் இன்னும் எனக்கு காதல் இருந்திருக்கிறது. இல்லையென்றால் அவளிடம் திரும்ப பேசி இருக்கவே மாட்டேன். என் காதலை அவளுக்கு தெரியபடுத்தவும் இது சந்தர்ப்பம் இல்லை. காயப்பட்ட மனதிற்கு ஆறுதலாகவே இருக்க விரும்பினேன் தவிர அவளுடைய இந்த வீக்னசை பயன் படுத்திக்கொள்ள எனக்கு மனமில்லை. அதன் பிறகு கொஞ்சம் போனில் பேசிக்கொண்டு தான் இருந்தோம். அதுவும் சிறிது நாட்களே. அவள் காயம் ஆறி அவளிடம் தன்னம்பிக்கை வார்த்தைகளை கேட்க்கஆரம்பித்ததும் நானாக மெல்ல விலகிக்கொண்டேன். ஆனால் கடைசி வரை அவளுடைய கடந்த காலத்தை பற்றி நான் கிளறவில்லை.
நாட்கள் நகர்ந்தது. அனிதாவின் அம்மா காரணமில்லாமல் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்துகொண்டுதான் இருப்பதாய் என் அம்மா சொன்னார்கள். அந்த கதை எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தும் அனிதாவிடம் கேட்டதில்லை. அவளையும் மறக்க முடியவில்லை. ஒரு முறை வேலை நிமித்தமாய் சென்னை செல்ல வேண்டி இருந்தது. பெங்களூரில் இருந்து என்னுடய காரில் செல்கிறேன். அவளும் இப்போது சென்னையில் தான் வேலையில் இருக்கிறாள். சனி ஞாயிறு விடுமுறை என்பதால் வாராவாரம் வெள்ளிக்கிழமை இரவு ரயிலில் கோவை சென்றுவிடுவதாக ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறாள். அன்று வெள்ளிகிழமை தான்.
மெசேஜ் தட்டினேன்…. “ஐயம் கம்மிங் டூ சென்னை.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். கேன் வீ மீட் பார் காபி இன் ஈவனிங்?”. பதில் வராது என நினைத்தேன். ஆனால் அன்றிரவு ரயிலில் கோவை புறப்படுவதாகவும். எட்டு மணிக்குள் வந்தால் கிண்டியில் நிச்சயம் மீட் பண்ணலாம் என்றும் அவளிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்தது.
அவள் வேலை செய்யும் அலுவலகமும், தங்கியிருக்கும் ஹாஸ்டலும் கிண்டி தான். நான் புறப்பட்ட நேரத்திற்கு எட்டு மணிக்குள் கிண்டி போய்விட முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. முடிந்தவரை வேகமாக ஓட்டினேன். எட்டு மணி இருக்கும் சென்னைக்கு மிக அருகில் இருந்தேன். கிண்டி பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் சீக்கிரம் வருமாறு மெசேஜ் வந்தது. அடித்து பிடித்து சென்னைக்குள் நான் நுழைந்தபோது இரவு ஒன்பது மணி. எப்படியும் ஊருக்கு கிளம்பி இருப்பாள் என போன் செய்தேன்.
பஸ் நிலையம் அருகே நாதன் கபே ஹோட்டல் வாசலில் காத்திருப்பதாய் சொன்னாள். கிட்ட தட்ட ஒருமணி நேரம் எனக்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தாள் என்பது கஷ்டமாக இருந்தாலும் “எனக்காக நின்றிருந்தாள்” என்பது சந்தோசமாகத்தான் இருந்தது. என்னை அவள் முக்கியமாக நினைத்திருக்கிறாள் என்று புரிந்தது.
“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன். காபி சாப்பிடலாமா?”
“இதை தான் ஒரு மணி நேரமா சொல்றீங்க பாஸ்… பட்… நான் டின்னரே சாப்பிட்டு விட்டேன்.”
“என்னை விட்டுட்டா?”
“சாரிங்க.. நீங்க ரொம்ப லேட். வேணும்னா நீங்க சாப்பிடுங்க நான் உங்களுக்கு கம்பனி கொடுக்கிறேன். ஆனா மறுபடியும் அதே ஹோட்டல் போக வேணாம்.. என்னை சாப்பட்டு ராணினு முடிவு பண்ணிடுவாங்க.”
வேற வழி இல்லாமல் அவள் மொக்கை ஜோக்கிற்கு சிரித்து வைத்தேன். அழகான பெண்கள் பல சமயங்களில் அப்படித்தான் போலும்.
“சரி உங்களை நான் சென்ட்ரலில் ட்ராப் செய்து விடுகிறேன் போதுமா? “
“ஹலோ பாஸ்.. ட்ரெயின் இந்நேரம் கெளம்பி இருக்கும். சோ இந்த வாரம் நான் கோவை போகவில்லை. வீட்டுல போன் பண்ணி வேலை இருக்குன்னு சொல்லிட்டேன். மொதல்ல நீங்க வந்து சேருங்க… உங்களுக்கு தான் வெயிட்டிங்.”
“மொதல்ல பாசுனு சொல்றத நிப்பாட்டுங்க. அருண்னு கூப்பிடுங்க.”
எனக்காக அவள் இந்த வாரம் ஊருக்கே போகவில்லை. மனம் சந்தோசத்தில் துள்ளியது. அவளுக்கு நான் ஸ்பெஷல் தான் என்று கன்பார்ம் ஆனது. அவள் சொன்ன இடத்திற்கு சென்று அவளை காரில் ஏற்றிக்கொண்டேன்.
கட் பண்ணினால் இ.சி. ஆர் ரோடு.
arun anitha driving
மறக்க முடியாத இரவு அது. இ.சி. ஆர் ரோட்டில் காரை நான் ஓட்டிக்கொண்டு செல்கிறேன். “சாய்ந்து சாய்ந்து… நீ பார்க்கும் போது” பாடல் மெல்லிய சப்தத்தில் இதயத்தை வருடிக்கொண்டு இருந்தது. உள்ளே நானும் அனிதாவும் மட்டும். முதல் முதலாய் அவளை பார்க்கிறேன். அவளுக்கு இவ்வளவு அருகில் நான் இருப்பேன் என்ற நினைத்துக்கூட பார்த்தது இல்லை. வெள்ளை சுடிதாரில் தேவதை போல் இருந்தாள் அவள். அழகாய் இருக்கும் பெண்கள் எல்லாருமே தேவதை தான் என்றாலும். அவள் கொஞ்சம் ஸ்பெஷல் எனக்கு. அவ்வளவு பக்கத்தில் அவள் கண்களை பார்க்கும் நேரிடும் போதெல்லாம் அது என்னை ஏதோ செய்தன. இந்த தருணத்திற்கு தான் இத்தனை நாளாக ஏங்கி இருக்கிறேன் என்று அந்த நொடிதான் எனக்கே தெரிந்தது. அவள் அழகை பார்த்து நான் பிரம்மித்ததை நான் அவளிடம் காட்டிக்கொள்ளவில்லை. நானே ஆரம்பித்தேன்.
“அனிதா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு போனில் சொன்னேன். நீ இதுவரைக்கும் என்னனு கூட கேட்கவே இல்லை”
“நீங்களே சொல்லுங்க” என்றாள் மெல்லிய புன்னகையுடன்.”
“எனக்கு எப்படி ஆரமிக்கிறது னு தெரியல. நேரடியா விஷயத்துக்கு வரேன். நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்படறேன்.”
“…!!!!”
அதுவரை மொபைலில் “ஆங்க்ரி பர்ட்ஸ்” கேமில் பிசியாக இருந்த அவள் சடாரென என்னை திரும்பி பார்த்தாள். அவள் பார்வையின் வீச்சை எதிர்நோக்க சக்தி இல்லாமல் ரோட்டை பார்த்தே காரை ஓட்டிக்கொண்டு இருந்தேன்.
“நீங்க.. சீரியஸா தான் சொல்றீங்களா? உங்களுக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரியும் தானே அருண்”
“சோ வாட்.. எல்லாம் தெரியும் அனிதா.. பட் ஐ கான்ட் மிஸ் யூ பார் தட் ரீசன். இட் ஆல் ஹாபன்ஸ்”
“அப்புறம் எப்புடி?”
“நீ அதுக்காக கல்யாணம் பண்ணிகாமலா இருக்க போற? நீயும் யாரையோ கல்யாணம் பண்ணிக்க போற., நானும் யாரையோ கல்யாணம் பண்ணிக்கபோறேன். அதுக்கு நாம ரெண்டு பேரும் பண்ணிகிட்டா என்னா? அட் லீஸ்ட் என் லவ் ஆவது சக்சஸ் ஆகட்டும் அனிதா ப்ளீஸ். ஐ லவ் யூ சோ மச்”
“நல்லா லாஜிக்கா பேசறீங்க அருண். பட் யோசிச்சு சொல்கிறேன்.”
“ஏன் என்னை புடிக்கலையா?”
“அப்டி எல்லாம் ஒன்னும் இல்லை. புடிக்காம உங்க கூட கார்ல வருவனா? எனக்கு கொஞ்சம் டயம் வேணும்”
என்னை பிடித்திருந்தாலும் உடனே பதில் சொல்ல பெண்மை அவளை தடுத்தது. கிண்டியில் உள்ள அவளது ஹாஸ்டலில் டிராப் செய்தேன்.
இரவு நான் அன்று உண்ணவில்லை. மனது நிறைந்து இருந்தது. அடுத்த இரண்டு நாட்கள் அவளை ஸ்பென்சர், எக்ஸ்பிரஸ் அவன்யூ கூட்டிப்போனேன். சுடிதார், கிரீட்டிங் கார்டு வாங்கிக்கொடுத்தேன். ப்ளாக் கரண்ட் கேக் வேண்டும் என கேட்டாள். அவள் சாப்பட்டு ராணியே தான். எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆனால் என் சம்பளத்துல பாதி அவளுக்கு திங்க வாங்கி கொடுக்கவே சரியாய் போய்விடும். ரூமில் இருக்கும் அவள் தோழிக்கும் சேர்த்தே ப்ளாக் கரண்ட் கேக் வாங்கி கொடுத்தேன். இரண்டு நாட்களும் அவளுக்காகவே இருந்தேன். அவளுக்காகவே வாழ்ந்தேன்.
“ஒரு வேலை நமக்கு கல்யாணம் ஆனா நீங்களும் சென்னை வந்துடுவீங்களா? எனக்கு பெங்களூர் பிடிக்காது”
“ம்ம்.. நிச்சயமா”. என்னுடைய கனவு நிறுவனமான கூகிளில் வேலையை உதறிவிட்டு அவளுக்காக சென்னை வருவதற்கும் நான் தயாராய் இருந்தேன்.
“எனக்கே கொஞ்சம் உறுத்தலா இருக்கு. நான் ஏற்கனவே ஒருத்தரை லவ் பண்ணிட்டு உங்களை கல்யாணம் பண்றத நினைத்தால்…”
“ப்ளீஸ் அனிதா. அது பாசிங் க்ளவுட்ஸ். மறந்துடு. அதை பத்தி எனக்கு கவலை இல்லை. இட் ஆல் ஹாபன்ஸ் இன் லைப். உன்னால பழசை மறந்துட்டு என்கூட சந்தோசமா இருக்க முடியும்னா. என்னை சந்தோஷமா பார்த்துக்க முடியும்னா மட்டும் சொல்லு. “
அவளின் கண்கள் ஈரமாயின “நிச்சயமா அருண்.. என் வாழ்கையில் திரும்ப அவனுக்கு இடமில்லை. ரெண்டு வாட்டி நடுவுல என் கிட்ட பேச ட்ரை பண்ணினான். பட் நான் பேசலை. ஆனா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும். உங்களை உங்க அம்மா நல்லா தான் வளர்த்து இருப்பாங்க. இருந்தாலும் கேட்கிறேன். என்னை கடைசி வரை நீங்க நல்லபடியா பார்த்துக்குவீங்களா?”
குழந்தை போல பேசினாள். அவளின் முந்தைய காயம் இப்படி அவளை பேச வைத்தது என எனக்கு புரிந்தது. தோளில் அப்படியே சாய்த்து தட்டி கொடுத்தேன்.
பெங்களூர் கிளம்பும்போது எதையோ விட்டு செல்வது போல் ஒரு உணர்வு. காதலை ஏற்ப்பாளா? இல்லை நிராகரிப்பாளா? என் வாழ்க்கைகாண விடை விரைவில் கிடைக்கும் என நம்பினேன். மறுநாள் அவளிடம் இருந்து ஒரு மெசேஜ். ஆவலுடன் பிரித்தேன்.
“ஐ டூ லவ் யூ அருண்.”
கடவுள் இருக்கான் குமாரு. ஆகாயத்தில் பறந்தேன். தலைகீழாய் நடந்தேன். அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன். அனிதாவும் என் அம்மாவிடம் பேசினாள். அம்மாவுக்கு இதில் விருப்பமோ இல்லையோ எனக்காக அவர்களுக்கும் இதில் விருப்பம். இருவீட்டாரும் பேசினார்கள். கொஞ்ச நாளில் நிச்சயம் நடந்தது. அவள் தான் என் மனைவி என முழுதாய் நம்பினேன். ஆசை பட்ட பொண்ணை மனைவியாக பார்க்கும் பாக்கியத்தை விட உலகில் வேறு என்ன சந்தோசம் இருந்துவிட முடியும்.
திருமண வைபோகம் நெருங்கிய நெருங்கியது. அதுவரை எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டு இருந்தது. திடீரென கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய போனை எடுப்பதை அவள் தவிர்த்தாள். எப்போதாவது பேசினாலும் அவள் வார்த்தைகளில் காதல் இல்லை. கேரிங் இல்லை. அவள் பேச்சில் குழப்பம் வழிந்தோடியது.
“உண்மையாவே நான் உங்களுக்கு தகுதியானவள்னு நினைக்கறீங்களா? “
“வாட் நான்சென்ஸ் அனிதா? எனக்கு சத்தியமா உன்கிட்ட என்ன நடக்குதுன்னு புரியலை.. என்னை தயவு செஞ்சி கஷ்டபடுத்தாத உன் மேல உயிரையே வச்சி இருக்கேன்.”
“இல்லை கஷ்டபடுத்த மாட்டேன் அருண். கல்யாணத்தை இன்னும் ஆறு மாதம் தள்ளி போடலாமா?”
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்று கேட்டால் அவளிடம் தெளிவான பதிலில்லை. ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.
அன்று கோவையில் நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டு இருந்தேன். கல்யாணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது. அனிதா வீட்டில் இருந்து அவள் அப்பாவும், அம்மாவும் வந்தார்கள். மிகவும் தயங்கியபடி. அவர்கள் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள். இந்த கல்யாணம் வேண்டாம் என்றார்கள். மீறி நடந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று ஒரு ஜோசியன் சொல்லுகிறான் என்றார்கள். கல்யாணம் நடக்க போற நேரத்துல இப்படி அவர்கள் பேசியதால் என் அப்பா கோவத்தில் அவர்களிடம் சண்டை போட்டார்.
“எந்த ஜோசியகாரன்னு சொல்லுயா நான் போய் பாக்குறேன்.”
அவர்களிடம் மழுபலாய் பதில்வந்தது. சொன்னதையே திரும்பச்சொன்னார்கள். எவ்வளவோ எடுத்து சொல்லியும் பிடிவாதமாய் இருந்தார்கள். அவர்களின் பெண் வாழ்க்கை முக்கியம் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். கல்யாணம் நிற்பது உறுதியானது.
“ஊர்ல இல்லாத பொண்ண பெத்துட்டானுங்க. பொண்ணு ஸ்ட்ராங்கா இருந்தா சொல்லு மாப்புள்ள நாம தூக்கிடலாம்”
“அந்த ஜோசியாகர பயபுள்ள யாருன்னு சொல்லு மச்சான் அவன ரெண்டு தட்டு தட்னா சரியாபோயிடும்.” என்று நண்பர்கள் வரிந்து கட்டினார்கள்.
அம்மா அவர்கள் வீட்டிற்கு போய் எவ்வளவோ மன்றாடி பார்த்தார். எனக்காக அம்மாவிற்கு ரொம்ப கஷ்டம். கோவில் கோவிலாய் போய் வேண்டிக்கொண்டார். எனக்காக அம்மா அவர்களிடம் இறங்கிப்போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் அம்மாவின் முகத்தையும் பார்க்க முடியவில்லை. உடனே பெங்களூர் சென்று விட்டேன். ஆனால் வேலைக்கு போகவில்லை. என்னுடைய ரூமிலேயே முடங்கி இருந்தேன். நினைவெல்லாம் என்னுடைய அனிதா மட்டும் தான். இப்போ தான் புரிந்தது அனிதா என்னிடம் ஏன் சரியாக பேசாமல் போனால் என்று. அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து இருக்கிறது. நான் இறந்துவிடுவேன் என்று சொன்னதும் அவள் பயந்து இருக்கிறாள். என்னிடம் எப்படி சொல்லுவது என்று தவித்து இருக்கிறாள். அவளிடம் நான் பேசியே ஆக வேண்டும். அந்த பாழாய் போன ஜோசியத்தை நம்பவேண்டாம். எனக்கு ஒன்றும் ஆகாது என்று அவளுக்கு புரிய வைக்க வேண்டும்.
இன்று… மாலை… சென்னை….
இருட்டுவதற்க்குள் கிண்டி வந்தடைந்திருந்தேன். இன்று வெள்ளிக்கிழமை. எப்படியும் வழக்கம் போல் இரவு ரயிலில் சென்னை சென்ட்ரலில் இருந்து அனிதா கோயமுத்தூர் செல்வாள் என்று எனக்கு யூகம். எப்படியாவது அவளை அதற்குள் சந்திக்க வேண்டும். என்னுடன் காரிலேயே அவளை கோவை அழைத்துசெல்லவேண்டும். அப்போ எனக்கு அவளிடம் பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். மெல்லெ மெல்ல அவளுக்கு புரியவைத்து இந்த கல்யாணம் நிற்காமல் பார்க்கவேண்டும். இந்த சந்தர்பத்தை விட்டால் அவளை இழக்க வேண்டியது தான்.
என்னுடைய எஸ்.எம்.எதற்கும் பதில் இல்லை. போன் செய்தால் எடுக்க மாட்டேன்கிறாள். அவள் மனதில் என்ன ஓடுகிறது என்றே எனக்கு தெரியவில்லை. அவள் ஹாஸ்டல் வாசலில் காரை நிப்பாட்டினேன். நீண்ட நேரம் காத்திருந்தேன். எப்படியும் அவள் இங்கிருந்து தான் புறப்படுவாள். மீண்டும் போன் செய்தேன். கால் வெயிட்டிங் போனது. ஹாஸ்டல் வாசலில் கும்பலின் நடுவே என் அனிதாவின் முகம் தென்பட்டது. பரவசமானேன். நான் கஷ்டப்பட்டது வீண் போகவில்லை அவளிடம் பேசலாம் என்று காரை விட்டு இறங்க நினைத்தேன். யாரிடமோ சிரித்து போனை பேசிக்கொண்டு அவளே என் காரை நோக்கி வந்தாள்.
என் காரை அடையாளம் கண்டு கொண்டிருக்கிறாள் என நினைத்தேன். என் கார் அருகே வந்தவள் என்ன நினைத்தாளோ சட்டென விலகி எனக்கு முன்னால் நின்றுக்கொண்டிருந்த காருக்கு சென்றாள். என்னை அவள் பார்த்திருக்கவில்லை. அந்த காரின் முன்னிருக்கையில் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள். எனக்கு என்ன நடக்கிறதுயென்று சுத்தமாய் புரியவில்லை . அந்த காரை பின் தொடர்ந்தேன். எங்கு போய்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அந்த காரை பின் தொடர்வதிலேயே என் கவனம் இருந்தது.
அவர்களது கார் ஒரு ஷாபிங் மாலிற்குள் நுழைந்தது. அது எக்ஸ்பிரஸ் அவென்யு. . நான் சென்னை வரும்போதெல்லாம் அடிக்கடி அவளை இங்கு தான் அழைத்து வருவேன். இவள் யாருடன், எதற்கு இங்கு வருகிறாள்? குழப்பம் அதிகமானது. அவர்களது காரில் இருந்து அவள் முதலில் இறங்கினாள். டிரைவர் சீட்டில் இருந்து ஒருவன் இறங்கினான். அவனை இதுவரை நான் பார்த்தது இல்லை? இருவரும் கைகோர்த்தபடி மாலிற்குள் நுழைந்தார்கள்.
அவர்களுடைய நெருக்கம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. என்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர்களது பின்னால் நடந்தேன் . கே.ஏப்.சி சிக்கனில் உணவு உணவருந்திவிட்டு அங்கிருந்த சத்யம் தியேட்டரில் “நீ தானே என் பொன்வசந்தம்” படத்திற்கு நுழைந்தார்கள். என் கண்களில் குளம் போல் கண்ணீர் பெருக்கெடுத்தது ஓடியது. தொண்டை வறண்டு குரல் கம்மியது. கண்கள் இருட்டியது. முதல் முறை அழுகிறேன். விம்மி விம்மி அழுகிறேன்.
அருகில் இருந்தவர்கள் என்னை பைத்தியக்காரனை போல் பார்த்தார்கள். நான் முட்டாள் ஆகிவிட்டேனா? அல்லது முட்டாள் ஆக்கப்பட்டு விட்டேனா?அனிதாவுடன் இருந்த அவன் யார்? இவள் எதற்கு அவனுடன் வருகிறாள்? கல்யாணம் நின்று போன அறிகுறி எதுவுமே அவள் முகத்தில் இல்லையே? நான் இங்கே தவித்துக்கொண்டு இருக்கிறேன் என்று தெரிந்தும் எப்படி அவளால் சந்தோசமாக இருக்க முடிந்தது ? இப்படி பல கேள்விகளை மின்னல் வேகத்தில் என் மூளை அடுக்கிக்கொண்டே போனது..
திடிரென எஸ்.எம்.எஸ் சப்தம். ஒருவேளை அனிதாவாக இருக்குமா? இருந்தால் நிச்சயம் நாக்கை பிடுங்கற மாதிரி நாலு வார்த்தை கேட்டிடலாம் என்று மொபைலை எடுத்தேன். ஆனால் சுதாகரிடம் இருந்து வந்திருந்தது அந்த எஸ்.எம்.எஸ்.
பிரித்தது பார்த்தேன். “நாம் விரும்பும் பெண்ணைவிட நம்மை விரும்பும் ஒரு நாயை கூட கல்யாணம் பண்ணிக்கலாம். இப்படிக்கு உளுந்தூர் பேட்டை உலகானந்தா” என்று இருந்தது. அழுதுக்கொண்டே சிரித்தேன். கண்ணீர் சொட்டு மொபைல் ஸ்க்ரீனில் விழுந்து தெறித்தது. கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் என் காரை நோக்கி நடந்தேன். என் பைத்தியம் தெளிந்திருந்தது.
0 comments:
Post a Comment